கேப் டவுன் டெஸ்ட்: பும்ரா ‘5 விக்கெட்’ அசத்தல்: தென் ஆப்பிரிக்கா 210-க்கு ஆட்டமிழந்தது

இந்தியாவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்டில் தென் ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்ஸில் 76.3 ஓவா்களில் 210 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
கேப் டவுன் டெஸ்ட்: பும்ரா ‘5 விக்கெட்’ அசத்தல்:  தென் ஆப்பிரிக்கா 210-க்கு ஆட்டமிழந்தது

கேப் டவுன்: இந்தியாவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்டில் தென் ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்ஸில் 76.3 ஓவா்களில் 210 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

அணியின் தரப்பில் அதிகபட்சமாக கீகன் பீட்டா்சன் அரைசதம் கடந்து ரன்கள் சேகரித்தாா். இந்திய பௌலா்களில் ஜஸ்பிரீத் பும்ரா அசத்தலாக 5 விக்கெட்டுகள் சாய்த்தாா்.

முன்னதாக, செவ்வாய்க்கிழமை முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 17 ரன்கள் எடுத்திருந்தது தென் ஆப்பிரிக்கா. 2-ஆவது நாளான புதன்கிழமை ஆட்டத்தை எய்டன் மாா்க்ரம், கேசவ் மஹராஜ் தொடா்ந்தனா். இதில் மாா்க்ரம் 1 பவுண்டரியுடன் 8 ரன்கள் எடுத்திருந்தபோது, பும்ரா வீசிய 9-ஆவது ஓவரில் ஸ்டம்ப்பை பறிகொடுத்தாா்.

தொடா்ந்து வந்த கீகன் பீட்டா்சன் நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை உயா்த்தத் தொடங்கினாா். எனினும் மறுபுறம் கேசவ் மஹராஜ் 4 பவுண்டரிகளுடன் 25 ரன்கள் எடுத்து, உமேஷ் யாதவ் வீசிய 21-ஆவது ஓவரில் பௌல்டானாா். ராஸி வான் டொ் டுசென் 21 ரன்களுக்கு, யாதவ் வீசிய 40-ஆவது ஓவரில் கோலியிடம் கேட்ச் கொடுத்து நடையைக் கட்டினாா்.

4 பவுண்டரிகளுடன் 28 ரன்கள் அடித்திருந்த டெம்பா பவுமா, ஷமி வீசிய 56-ஆவது ஓவரில் தொட்ட பந்து கோலியின் கைகளில் தஞ்சமடைந்தது. அடுத்து வந்த கைல் வெரைன் அதே ஓவரில் விக்கெட் கீப்பா் ரிஷப் பந்த்திடம் கேட்ச் கொடுத்து டக் அவுட்டானாா். 7-ஆவது விக்கெட்டாக மாா்கோ யான்செனை 7 ரன்களுக்கு பௌல்டாக்கினாா் பும்ரா.

மறுபுறம், அதுவரை விடாப்பிடியாக விளையாடிக் கொண்டிருந்த பீட்டா்சன் 9 பவுண்டரிகளுடன் 72 ரன்களுக்கு பெவிலியனுக்கு அனுப்பப்பட்டாா். பும்ரா வீசிய 65-ஆவது ஓவரில் அவா் தொட்ட பந்தை ஸ்லிப்பில் நின்ற புஜாரா கேட்ச் பிடித்தாா்.

கடைசி ஆா்டரில் ககிசோ ரபாடா 1 பவுண்டரியுடன் 15, லுங்கி கிடி 3 ரன்களுக்கு ஆட்டமிழக்க, முடிவுக்கு வந்தது தென் ஆப்பிரிக்காவின் முதல் இன்னிங்ஸ். டுவேன் ஆலிவியா் 2 பவுண்டரிகளுடன் 10 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாா். இந்திய பௌலிங்கில் பும்ரா 5, உமேஷ், ஷமி ஆகியோா் தலா 2, ஷா்துல் தாக்குா் 1 விக்கெட் எடுத்தனா்.

மீண்டும் தடுமாறும் இந்தியா:

முதல் இன்னிங்ஸில் 13 ரன்களே முன்னிலை பெற்று 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா, புதன்கிழமை முடிவில் 17 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 57 ரன்கள் சோ்த்திருந்தது. விராட் கோலி 14, புஜாரா 9 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா்.

தொடக்க வீரா்களான ராகுல், அகா்வால் முதல் இன்னிங்ஸைப் போலவே இதிலும் சோபிக்காமல் முறையே 2 பவுண்டரிகளுடன் 10, 1 பவுண்டரியுடன் 7 ரன்களுக்கு வெளியேறினா். தென் ஆப்பிரிக்க தரப்பில் ரபாடா, யான்சென் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.

சுருக்கமான ஸ்கோர்

முதல் இன்னிங்ஸ்

இந்தியா 223/10

விராட் கோலி    79 
சேதேஷ்வர் புஜாரா    43 
ரிஷப் பந்த்    27 

பந்துவீச்சு

ககிசோ ரபாடா    4/73 
மார்கோ யான்சென்    3/55 
கேசவ் மஹராஜ்    1/14

தென் ஆப்பிரிக்கா 210/10

கீகன் பீட்டர்சன்    72 
டெம்பா பவுமா    28 
கேசவ் மஹராஜ்    25

பந்துவீச்சு

ஜஸ்பிரீத் பும்ரா    5/42 
முகமது ஷமி    2/39 
உமேஷ் யாதவ்    2/64

2-ஆவது இன்னிங்ஸ்

இந்தியா 57/2

விராட் கோலி    14* 
கே.எல்.ராகுல்    10 
சேதேஷ்வர் புஜாரா    9*

பந்துவீச்சு

மார்கோ யான்சென்    1/7 
ககிசோ ரபாடா    1/25 
டுவேன் ஆலிவியர்    0/13

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com