தெ.ஆ. ஒருநாள் தொடர்: ஷிகர் தவனுக்கு இது கடைசி வாய்ப்பா?

அடுத்ததாக ருதுராஜ், இஷான் கிஷனிடமும் மோதி ஜெயிக்க வேண்டிய நிலைமையில் உள்ளார்.
தெ.ஆ. ஒருநாள் தொடர்: ஷிகர் தவனுக்கு இது கடைசி வாய்ப்பா?

இந்திய கிரிக்கெட்டில் புதிய வீரர்களின் வரவு மூத்த வீரர்களுக்குக் கடும் அழுத்தத்தைக் கொடுத்துள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் புஜாரா, ரஹானேவைப் போல ஒருநாள் கிரிக்கெட்டில் ஷிகர் தவனின் இடமும் விவாதப்பொருளாக மாறியுள்ளது.

கடந்த வருடம் இலங்கை சென்ற இந்திய அணியின் கேப்டனாகச் செயல்பட்ட ஷிகர் தவன், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் தேர்வாகியுள்ளார்.

டி20 உலகக் கோப்பை அணியில் இடம்பெறாத ஷிகர் தவனால் இனிமேல் இந்திய டி20 அணிக்குத் தேர்வாக முடியுமா என்பது சந்தேகமே. ரோஹித் சர்மா, கே.எல். ராகுல், இஷான் கிஷன், ருதுராஜ் எனத் தொடக்க வீரர்களுக்கான இடங்களுக்குப் பலத்த போட்டி உள்ளது. இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் தன்னுடைய இடத்தை பலப்படுத்திக்கொள்ள வேண்டிய நிலைமையில் உள்ளார் ஷிகர் தவன்.

அவருக்கு 36 வயதாகி விட்டதால் ஒருமுறை தோற்றாலும் வெளியேறும் வாய்ப்பு உருவாகி விடும். அந்தளவுக்குப் போட்டி அதிகமாகிவிட்டது. 

சமீபத்தில் நடைபெற்ற விஜய் ஹசாரே போட்டியில் 5 இன்னிங்ஸில் 56 ரன்கள் மட்டுமே எடுத்தார் தவன். அவருக்குப் போட்டியாளராக மாறியுள்ள ருதுராஜ் கெயிக்வாட், 5 ஆட்டங்களில் 4 சதங்கள் உள்பட 603 ரன்கள் குவித்து இந்திய அணிக்குத் தேர்வாகிவிட்டார். 

ருதுராஜ் கெயிக்வாட்
ருதுராஜ் கெயிக்வாட்

இதுவரை 145 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ள ஷிகர் தவன், சமீபகாலமாக நன்றாகவே விளையாடி வருகிறார். டி20 அணியிலிருந்து நீக்கப்பட்டாலும் அவருடைய ஒருநாள் கிரிக்கெட்டுக்கான இடத்தை யாரும் கேள்வி கேட்க முடியாது. கடந்த வருடம் இந்தியாவில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் 3 ஆட்டங்களில் இரு அரை சதங்கள் எடுத்தார். இலங்கையில் 3 ஆட்டங்களில் 1 அரை சதம் எடுத்தார். இதனால் இந்திய அணியில் மீண்டும் இடம்பெறுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் வயது, புதிய வீரர்களின் வரவு போன்ற காரணங்களால் தெ.ஆ. ஒருநாள் தொடரில் ஷிகர் தவன் எடுக்கும் ரன்கள் தான் அவருடைய வருங்காலத்தைத் தீர்மானிப்பதாக அமையும். 

ஐபிஎல் 2021 போட்டியில் மட்டுமல்லாமல் இந்திய உள்ளூர் போட்டிகளிலும் ருதுராஜ் கெயிக்வாட் சிறப்பாக விளையாடியதால் அவரை இந்திய அணி பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனக் குரல்கள் எழுந்துள்ளன.

ரோஹித் சர்மா இல்லாத நிலையில் கே.எல். ராகுல் தொடக்க வீரராகக் களமிறங்கினால் ஷிகர் தவன், ருதுராஜ் கெயிக்வாட் ஆகிய இருவரில் ஒருவருக்குத்தான் வாய்ப்பு கிடைக்கும். வழக்கம்போல நடுவரிசையில் ராகுல் விளையாடினால் தொடக்க வீரர்களாக ஷிகர் தவனும் ருதுராஜும் விளையாடலாம். இஷன் கிஷனை அணியில் சேர்க்க நினைத்தால் ருதுராஜுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகலாம். 

ஏற்கெனவே ரோஹித் சர்மா, கே.எல். ராகுலிடம் போட்டியை எதிர்கொண்ட ஷிகர் தவன் அடுத்ததாக ருதுராஜ், இஷான் கிஷனிடமும் மோதி ஜெயிக்க வேண்டிய நிலைமையில் உள்ளார். புதிய நெருக்கடியைச் சமாளிப்பாரா தவன்?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com