10 மாதங்கள் கழித்து இங்கிலாந்து அணியினருடன் பயிற்சியில் ஈடுபட்ட ஜோஃப்ரா ஆர்ச்சர்

10 மாதங்களுக்குப் பிறகு மேற்கிந்தியத் தீவுகளில் இங்கிலாந்து அணியினருடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர்.
ஆர்ச்சர் (கோப்புப் படம்)
ஆர்ச்சர் (கோப்புப் படம்)

10 மாதங்களுக்குப் பிறகு மேற்கிந்தியத் தீவுகளில் இங்கிலாந்து அணியினருடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர்.

கடந்த வருடத் தொடக்கத்தில் இந்தியாவுக்கு எதிரான இரு டெஸ்ட், 5 டி20 ஆட்டங்களில் விளையாடிய ஜோப்ரா ஆா்ச்சா், வலது முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக நாடு திரும்பினார். பிறகு ஐபிஎல் 2021 போட்டியிலிருந்தும் விலகினார். காயத்திலிருந்து மீண்டு வந்த ஆர்ச்சர், சஸ்ஸெக்ஸ் அணிக்காக விளையாடினார். பிறகு, முழங்கை காயத்தில் மீண்டும் வலி ஏற்பட்டதால் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகினார். கடந்த மே மாதம் முழங்கை காயத்துக்காக அறுவை சிகிச்சை செய்துகொண்டார். இதனால் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர், டி20 உலகக் கோப்பை, ஆஷஸ் தொடர் ஆகிய முக்கியமான போட்டிகளிலிருந்து அவர் விலகினார். 

முழங்கை காயத்துக்கு மற்றொரு அறுவை சிகிச்சை மேற்கொண்டார் ஆர்ச்சர். இதையடுத்து ஜனவரி - மார்ச் மாதங்களில் இங்கிலாந்து அணியின் மேற்கிந்தியத் தீவுகள் சுற்றுப்பயணத்திலும் ஆர்ச்சர் இடம்பெற மாட்டார் என அறிவிக்கப்பட்டது. டிசம்பர் 11 அன்று லண்டனில் ஆர்ச்சருக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 

ஜனவரி - மார்ச் மாதங்களில் இங்கிலாந்து அணி, மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்து 5 டி20, 3 டெஸ்டுகளில் விளையாடுகிறது. டி20 தொடர் ஜனவரி 23 முதல் ஜனவரி 31 வரை நடைபெறுகிறது. டெஸ்ட் தொடர், மார்ச் 8 முதல் மார்ச் 28 வரை நடைபெறுகிறது. 

கடந்த ஒரு மாதமாக பார்படாஸில் உள்ள தனது குடும்பத்தினருடன் தங்கி வருகிறார் ஆர்ச்சர். இதையடுத்து பார்படாஸின் தலைநகர் பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டும் வரும் இங்கிலாந்து அணியினருடன் அவர் இணைந்துள்ளார். கடந்த வார இறுதியில் இங்கிலாந்து அணியின் கரோனா தடுப்பு வளையத்துக்குள் நுழைந்த ஆர்ச்சர், வீரர்களுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். 10 மாதங்களுக்குப் பிறகு இங்கிலாந்து அணியினருடன் இணைந்த ஆர்ச்சர், பயிற்சியின்போது பந்துவீச்சில் ஈடுபடவில்லை. ஃபீல்டிங், பேட்டிங்கில் மட்டும் சிறிது நேரம் பயிற்சியெடுத்துள்ளார்.

ஆர்ச்சர் சர்வதேச கிரிக்கெட்டுக்கு மீண்டும் எப்போது திரும்புவார் என்பது தெரிவிக்கப்படவில்லை. ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணி ஆர்ச்சரைத் தக்கவைக்கவில்லை. 2-வது அறுவை சிகிச்சை காரணமாக ஐபிஎல் 2022 போட்டியில் ஆர்ச்சர் பங்குபெறுவாரா என்பது இனிமேல் தான் தெரியவரும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com