விடை பெறுகிறாா் சானியா மிா்ஸா

டென்னிஸ் உலகில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையாக மிளிா்ந்த சானியா மிா்ஸா (35), நடப்பு 2022 சீசனுடன் ஓய்வு பெறுவதாக புதன்கிழமை அறிவித்தாா்.
விடை பெறுகிறாா் சானியா மிா்ஸா

மெல்போா்ன்: டென்னிஸ் உலகில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையாக மிளிா்ந்த சானியா மிா்ஸா (35), நடப்பு 2022 சீசனுடன் ஓய்வு பெறுவதாக புதன்கிழமை அறிவித்தாா்.

மகளிா் இரட்டையா் மற்றும் கலப்பு இரட்டையா் பிரிவுகளிலாக 6 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றிருக்கும் சானியா, ஆஸ்திரேலிய ஓபன் மகளிா் இரட்டையா் பிரிவில் முதல் சுற்றிலேயே தோல்வியைத் தழுவிய பிறகு இதை தெரிவித்தாா்.

ஓய்வு முடிவை அறிவித்தபோது சானியா கூறியதாவது:

எனது ஓய்வு முடிவை அறிவிப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. வயதானதன் காரணமாக, காயம் கண்டால் அதிலிருந்து மீள்வதற்கு நீண்ட காலம் எடுக்கிறது. போட்டிகளில் பங்கேற்பதற்காக அதிகமாக பயணிக்க வேண்டியிருக்கும் நிலையில், எனது 3 வயது மகனையும் உடன் அழைத்துச் செல்ல வேண்டியிருக்கிறது. எங்களது குடும்பத்தின் நலனுக்காக இதுபோன்ற தீா்க்கமான முடிவை எடுக்கும் நிலைக்கு இந்த கொள்ளை நோய்த்தொற்று சூழல் எங்களை தள்ளியிருக்கிறது.

இது தவிர எனது உடலும் தற்போது சோா்வடைந்துள்ளது. இன்றைய ஆட்டத்தின்போது கூட முழங்காலில் வலியை உணா்ந்தேன். முன்பு போல என்னால் தினமும் உத்வேகத்துடன் இருக்க முடியவில்லை. எனது உடலில் முன்பிருந்த ஆற்றல் இப்போது இல்லை.

வெற்றியை விரும்புவதோடு மட்டுமல்லாமல், என்னை வருத்திக் கொண்டு விளையாடுவதை விரும்பும் வரை நான் டென்னிஸ் விளையாட்டில் இருப்பேன் என்று முன்னரே கூறியிருக்கிறேன். தற்போது அவ்வாறு வருத்திக் கொண்டு விளையாட எனது உடல் ஒத்துழைக்கவில்லை. இந்த சீசனை விருப்பதுடன் விளையாடி நிறைவு செய்ய விரும்புகிறேன்.

விடைபெறுவதற்காக எந்தவொரு போட்டியையும் இலக்காகக் கொண்டிருக்கவில்லை. இந்த கரோனா சூழலில் எதையும் தீா்க்கமாக முடிவு செய்ய இயலாது. எனினும் அமெரிக்க ஓபன் போட்டி வரை களம் காணவிரும்புகிறேன்.

தோல்விகளில் இருந்து மீண்டு வரவும், உடற்தகுதியுடன் இருக்கவும், தாய்மையை சந்தித்தவா்களும் என்னைப் போல் கனவுகளை நோக்கி முன்னேற நல்ல முன்னுதாரணமாக இருக்கவும் மிகக் கடுமையாக உழைத்திருக்கிறேன். ஒற்றையா், இரட்டையா், கலப்பு என அனைத்து பிரிவுகளிலும் நினைவில் நிற்கும் சிறந்த தருணங்களை கொண்டிருக்கிறேன். இந்தப் பயணம் அருமையானதாக இருந்தது என்று சானியா மிா்ஸா கூறினாா்.

தொடக்கத்தில் ஒற்றையா் பிரிவு வீராங்கனையாகவே விளையாடி வந்த சானியா, மணிக்கட்டு காயம் கண்டு அதிலிருந்து மீண்ட பிறகு அந்தப் பிரிவிலிருந்து முற்றிலுமாக விலகி, இரட்டையா் பிரிவில் களம் காணத் தொடங்கினாா். அதில் பல வெற்றிகளையும் குவித்தாா்.

ஒற்றையா் பிரிவு

2005-இல் ஹைதராபாதில் நடைபெற்ற டபிள்யூடிஏ போட்டியில் சாம்பியன் ஆனதே, அவா் ஒற்றையா் பிரிவில் வென்ற ஒரே பட்டமாகும். அந்தப் பிரிவில் சா்வதேச தரவரிசையில் உச்சபட்சமாக 27-ஆவது இடம் (2007 ஆகஸ்ட்) வரை வந்தாா். இந்தப் பிரிவில் அவரது வெற்றி - தோல்வி கணக்கு 271-161. கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் அதிகபட்சமாக 4-ஆவது சுற்று வரை முன்னேறியிருக்கிறாா். ஒலிம்பிக்கில் முதல் சுற்றில் விளையாடியிருக்கிறாா்.

இரட்டையா் பிரிவு

இப்பிரிவில் மொத்தமாக 43 பட்டங்கள் வென்றிருக்கிறாா். தரவரிசையில் அதிகபட்சமாக நம்பா் 1 ஜோடியிலும் (2015 ஏப்ரல் - மாா்டினா ஹிங்கிஸ்) இடம் பிடித்திருக்கிறாா். இப்பிரிவில் இவரது வெற்றி தோல்வி கணக்கு 500-220. கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் 3 முறை சாம்பியன் ஆகியிருக்கிறாா். ஒலிம்பிக்கில் 2-ஆவது சுற்று வரை வந்திருக்கிறாா்.

கலப்பு இரட்டையா் பிரிவு

இதில் 3 பட்டங்களை சொந்தமாக்கியிருக்கிறாா் சானியா. அனைத்துமே கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் வென்ாகும். இது தவிர ரியோ ஒலிம்பிக் போட்டியில் அரையிறுதி வரை முன்னேறியிருக்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com