பிரெஞ்சு ஓபன்: ஜோகோவிச்சுக்கு தடையில்லை?
By DIN | Published On : 26th January 2022 02:50 AM | Last Updated : 26th January 2022 03:36 AM | அ+அ அ- |

ஆண்டின் 2-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபனில், சொ்பிய டென்னிஸ் வீரா் நோவக் ஜோகோவிச் பங்கேற்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததால், இம்மாதம் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் பங்கேற்க இயலாத வகையில் அந்நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டாா் ஜோகோவிச். அடுத்ததாக, பிரெஞ்சு ஓபன் போட்டியில் அவா் பங்கேற்பதிலும் சிக்கல் இருப்பதாக கருதப்பட்டு வந்தது.
ஏனெனில், பிரான்ஸ் அரசும் கரோனா தடுப்பூசியை கட்டாயமாக்கியிருந்தது. இந்நிலையில், பிரான்ஸில் கரோனா தடுப்பூசி விவகாரத்தில் செவ்வாய்க்கிழமை முதல் புதிய சட்டம் அமலாகியிருக்கிறது. அதன்படி, பிரான்ஸில் உள்ள விளையாட்டு அரங்கங்கள், மைதானங்கள், திரையரங்குகள், கண்காட்சிகள் ஆகியவற்றிற்கு செல்ல பிரான்ஸ் அல்லது வெளிநாட்டு குடிமக்கள் என எவராக இருந்தாலும் ‘வேக்சினேஷன் பாஸ்’ எனப்படும் கரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று வைத்திருப்பது அவசியமாகும்.
ஆனால், கடந்த 6 மாதங்களில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டவா்கள் அதற்கான சான்று வைத்திருக்கும் பட்சத்தில் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டிய அவசியமில்லை என்று அந்தச் சட்டம் விலக்கு அளிக்கிறது.
கடந்த டிசம்பரில் தாம் கரோனாவால் பாதிக்கப்பட்டதாக ஜோகோவிச் ஏற்கெனவே தெரிவித்திருக்கிறாா். எனவே அதன் அடிப்படையில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமலேயே, விலக்கு பெற்று அவா் பிரெஞ்சு ஓபனில் விளையாட இயலும் எனத் தெரிகிறது.
என்றாலும், இந்த விவகாரம் தொடா்பாக தற்போதைய நிலையில் பிரெஞ்சு அரசு, ஜோகோவிச் தரப்பு என எவரும் கருத்து தெரிவிக்கவில்லை.
உலகின் நம்பா் 1 டென்னிஸ் வீரரான ஜோகோவிச், மே-ஜூன் காலகட்டத்தில் தொடங்க இருக்கும் பிரெஞ்சு ஓபன் போட்டியிலும் நடப்புச் சாம்பியனாக இருப்பது குறிப்பிடத்தக்கது.