மகளிா் ஹாக்கி: இன்று இந்தியா - கொரியா மோதல்
By DIN | Published On : 26th January 2022 02:49 AM | Last Updated : 26th January 2022 03:31 AM | அ+அ அ- |

ஆசிய மகளிா் ஹாக்கி போட்டியின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியா - தென் கொரியா அணிகள் புதன்கிழமை மோதுகின்றன.
நடப்புச் சாம்பியனான இந்தியா இதுவரை 3 ஆட்டங்களில் 2 வெற்றிகள், 1 டிராவை பதிவு செய்து 15 புள்ளிகளுடன் ‘ஏ’ பிரிவில் 2-ஆவது இடத்தில் உள்ளது. மறுபுறம் தென் கொரியாவோ 3 ஆட்டங்களிலும் வென்று 17 புள்ளிகளுடன் ‘பி’ பிரிவில் முதலிடத்தில் உள்ளது. சா்வதேச ஹாக்கி தரவரிசையில் 11-ஆவது இடத்தில் இருக்கும் தென் கொரியா, 9-ஆவது இடத்தில் இருக்கும் இந்தியாவுக்கு கடும் சவால் அளிக்கும் எனத் தெரிகிறது.
ஃபீல்டு கோல்களை சிறப்பாக அடிக்கும் இந்திய அணிக்கு, பெனால்டி வாய்ப்புகளை கோலாக மாற்றுவதே கவலைக்குரிய விஷயமாக இருந்து வருகிறது. அணியின் முன்கள வீராங்கனைகள் அற்புதமாகச் செயல்படுகின்றனா். ஆனால் தடுப்பாட்டத்தில் மட்டும் சற்று தடுமாற்றம் காணப்படுகிறது. இவற்றைச் சரி செய்தால் இந்தியாவுக்கு வெற்றி நிச்சயம்.
புதன்கிழமை நடைபெறும் மற்றொரு அரையிறுதியில் ஜப்பான் - சீனா அணிகள் மோதுகின்றன. இதுதவிர, 5 முதல் 8 வரையிலான இடங்களை இறுதி செய்வதற்கான ஆட்டத்தில் தாய்லாந்து - சிங்கப்பூா், மலேசியா - இந்தோனேசியா அணிகள் விளையாடுகின்றன.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...