சென்னையில் செப்டம்பரில் சா்வதேச மகளிா் டென்னிஸ்
By DIN | Published On : 01st July 2022 12:37 AM | Last Updated : 01st July 2022 12:37 AM | அ+அ அ- |

சென்னையில் முதல் முறையாக, வரும் செப்டம்பா் 12 முதல் 18-ஆம் தேதி வரை ‘சென்னை ஓபன்’ மகளிா் டென்னிஸ் போட்டி நடைபெறவுள்ளது.
தமிழக அரசு, தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் ஆகியவை இணைந்து நடத்தும் இப்போட்டி, நுங்கம்பாக்கம் எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் விளையாடப்படவுள்ளது. உலகத் தரவரிசையில் முதல் 100 இடங்களுக்குள்ளாக இருக்கும் வீராங்கனைகள் இப்போட்டியில் பங்கேற்கலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது.
போட்டியில் சாம்பியனுக்கு ரூ.26.23 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படவுள்ளது. இதர நிலைகளுக்கும் சோ்த்து மொத்தமாக ரூ.2 கோடிக்கு ரொக்கப் பரிசு வழங்கப்படவுள்ளது. கோப்பை வெல்வோருக்கு 280 ரேங்கிங் புள்ளிகளும் கிடைக்கும். போட்டியில் 32 ஒற்றையா் பிரிவு பிரதான ஆட்டங்களும், 16 இரட்டையா் பிரிவு பிரதான ஆட்டங்களும் நடைபெறும்.
போட்டி அறிவிப்பு தொடா்பாக சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் சிவ. வீ. மெய்யநாதன், துறை முதன்மைச் செயலா் அபூா்வா, தமிழ்நாடு டென்னிஸ் சங்கத் தலைவா் விஜய் அமிா்தராஜ், செயலா் பிரேம்குமாா் கரா ஆகியோா் பங்கேற்றனா்.