1980களில் சாதித்த பி.டி. உஷா: மறக்க முடியுமா அந்த நாள்களை?

1980களில் இந்தியத் தடகள விளையாட்டில் மகத்தான வீராங்கனையாக, நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலித்தவர் பி.டி. உஷா.
1980களில் சாதித்த பி.டி. உஷா: மறக்க முடியுமா அந்த நாள்களை?


மாநிலங்களவை நியமன உறுப்பினராக (எம்.பி.) முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா ஆகியோா் தோ்வு செய்யப்பட்டுள்ளார். கலை, இலக்கியம், விளையாட்டுத் துறைகளில் தலைசிறந்து விளங்குபவா்கள் மாநிலங்களவை நியமன உறுப்பினா்களாகத் தோ்வு செய்யப்படுவது நடைமுறை.

பிரதமர் மோடி, பி.டி. உஷாவுக்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தியில், ஒவ்வோா் இந்தியருக்கும் உத்வேகமளிப்பவா் பிரபல தடகள வீராங்கனை பி.டி.உஷா. விளையாட்டில் அவருடைய சாதனைகள் பரவலாக அறியப்பட்டது. அதுபோல, வளா்ந்துவரும் இளம் தடகள வீரா்களுக்கு சிறந்த வழிகாட்டியாக அவா் கடந்த பல ஆண்டுகளாகப் பணியாற்றி வருவது மிகுந்த பாராட்டுக்குரியது. மாநிலங்களவை உறுப்பினராக அவா் தோ்வு செய்யப்பட்டிருப்பதற்கு வாழ்த்துகள் என்று கூறியுள்ளார். 

1980களில் இந்தியத் தடகள விளையாட்டில் மகத்தான வீராங்கனையாக, நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலித்தவர் பி.டி. உஷா. இன்றும் அவரைப் பற்றிப் பேசுகிறோம், சாதனைகளைக் கண்டு வியக்கிறோம் என்றால் காரணம் இல்லாமலில்லை. 1980களில் இந்தியாவில் தடகள விளையாட்டு மீது பள்ளி மாணவர்களுக்கு ஆர்வம் ஏற்பட்டதற்கு பி.டி. உஷாவும் முக்கியக் காரணம். 

*

ஒரு இந்தியத் தடகள வீரர் ஒரே போட்டியில் 5 தங்கங்களும் ஒரு வெண்கலமும் வென்றார் என்றால் அது எத்தகைய சாதனை!

1985 ஆசியன் சாம்பியன்ஷிப் போட்டியில் இத்தனை தங்கங்களையும் அள்ளிக் கொண்டு வந்தார் பி.டி. உஷா.

1984 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்ஸில் வெண்கலப் பதக்கத்தை நூலிழையில் தவறவிட்ட உஷா, அடுத்த வருடமே தங்க வேட்டையை நடத்தினார்.

ஜகார்த்தாவில் உஷா நிகழ்த்திய இந்தச் சாதனையை இன்று வரை வேறொரு இந்தியத் தடகள வீரராலும் முறியடிக்க முடியவில்லை. 

1980 மாஸ்கோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் இளம் தடகள வீரராக 16 வயதில் அறிமுகமானார் உஷா. இந்தச் சாதனை இன்னமும் நீடிக்கிறது. 

16 வயது வீராங்கனையால் ஒலிம்பிக்ஸ் வரை வர முடிந்தது எப்படி?

ஒரு விளையாட்டு விழாவில் 13 வயது பி.டி. உஷாவைக் கண்ட பயிற்சியாளர் ஓ.எம். நம்பியார், அவருடைய திறமைகளைக் கண்டறிந்து பயிற்சியளிக்க ஆரம்பித்தார். கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த நம்பியாரிடம் பயிற்சி எடுக்க ஆரம்பித்த ஒரே வருடத்தில் மாநிலங்களுக்கிடையிலான ஜூனியர் போட்டியில் ஆறு பதக்கங்களை வென்றார் பி.டி. உஷா. அவர் சர்வதேசப் போட்டிகளில் பதக்கங்களைப் பெற்று பல சாதனைகளை நிகழ்த்த முக்கியக் காரணமாக இருந்ததால் 1985-ல் துரோணாச்சார்யா விருது அறிமுகம் செய்யப்பட்டபோது விருது வாங்கிய மூவரில் ஒருவராக நம்பியார் இருந்தார். 

இந்திய விமானப் படையில் 15 வருடங்கள் பணியாற்றினார் நம்பியார். 1970-ல் அங்கிருந்து ஓய்வு பெற்று கேரள ஸ்போர்ட்ஸ் கவுன்சிலில் இணைந்தார். தடகள வீரராக இருந்தும் சர்வதேச அளவில் சாதிக்க முடியாததால் பயிற்சியாளராக மாறி இந்தியாவுக்கு பி.டி. உஷா என்கிற அற்புதமான திறமைசாலியை உருவாக்கினார். நம்பியாரின் அறிவுரைப்படியே லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்ஸில் 400 மீ. தடை ஓட்டத்தில் பங்கேற்றார் பி.டி. உஷா.

கடந்த வருடம் நம்பியார் மறைந்தார். என்னுடைய குருவை இழந்துவிட்டேன். இதனால் என் வாழ்க்கையில் உண்டாகும் வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது. என் வாழ்க்கையில் அவருடைய பங்களிப்பை வார்த்தைகளால் விளக்க முடியாது என்று தனது வேதனையை வெளிப்படுத்தினார் உஷா.

இளம் புயல்

1980களில் உஷாவுக்குக் கடும் சவாலாக இருந்தவர் பிலிப்பைன்ஸைச் சேர்ந்த லிடியா டி வேகா. ஆசியாவின் அதிவேக வீராங்கனை எனப் புகழ் பெற்றவர். ஆசிய விளையாட்டுப் போட்டியில் 100 மீ. ஓட்டத்தில் இரு தங்கங்களை வென்றவர். 
  
தில்லியில் நடைபெற்ற 1982 ஆசிய விளையாட்டுப் போட்டியில் 100 மீ. ஓட்டத்தில் உஷாவை முந்திச் சென்றுதான் தங்கம் வென்றார் லிடியா. இந்தப் போட்டியிலிருந்து தான் உஷா - லிடியா இடையிலான மோதல் சூடுபிடித்தது. 

1982 ஆசிய விளையாட்டுப் போட்டியில் 100 மீ., 200 மீ. ஓட்டப் பந்தயங்களில் வெள்ளிப் பதக்கங்களை வென்று அசத்தினார் 18 வயது உஷா.

தில்லி ஆசிய விளையாட்டுப் போட்டியை இந்திய ரசிகர்களால் மறக்க முடியாது. தூர்தர்ஷனில் நேரலையாகப் போட்டி ஒளிபரப்பாகி ரசிகர்களுக்கு எல்லையில்லா மகிழ்ச்சியை அளித்தது. 

சர்வதேசப் போட்டியில் பதக்கம் வென்ற உஷாவை அதன்பிறகு சில வருடங்களுக்கு யாராலும் பிடிக்க முடியவில்லை. ஒவ்வொரு பந்தயத்திலும் புயலென பறந்தார். இந்தியப் பெண்கள் பலருக்கு ஊக்கம் அளிக்கக் கூடியவராக மாறினார். 

1983 ஆசியன் சாம்பியன்ஷிப் போட்டியில் 200 மீ. ஓட்டத்தில் உஷாவை வீழ்த்தினார் லிடியா. 400 மீ. ஓட்டத்தில் தங்கம் வென்றார் உஷா.

1984 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்ஸ் நடைபெற்றபோது உஷாவுக்கு வயது 20. ஆசிய விளையாட்டுப் போட்டியினால் இந்திய ரசிகர்கள் அவரிடமிருந்து ஒலிம்பிக் பதக்கத்தை எதிர்பார்த்தார்கள்.

400 மீ. தடை ஓட்டத்தில் அரையிறுதியில்  55.54 விநாடியில் ஓடி புதிய காமன்வெல்த் சாதனை படைத்தார். இதனால் இறுதிச்சுற்றில் பதக்கம் நிச்சயம் கிடைக்கும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அதைவிடவும் வேகமாக  55.42 விநாடியில் ஓடினாலும் வெண்கலத்தை நூலிழையில் தவறவிட்டார் உஷா. 

அந்த ஓட்டத்தில் ஒரு சம்பவம் நடைபெற்றது. ஆஸ்திரேலியாவின் டெபி ஃபிளிண்டாஃப் தவறுதலாக ஆரம்பித்ததால் போட்டியை மீண்டும் தொடங்கவேண்டிய நிலைமை ஏற்பட்டது. அப்போது உஷா அபாரமாக ஓட்டத்தைத் தொடங்கி முன்னிலையில் இருந்தார். முதல் தடையை 6.33 விநாடியில் ஓடியிருந்தார். மீண்டும் ஓட்டம் தொடங்கப்பட்டபோது அதே வேகத்தில் உஷாவால் ஓட முடியவில்லை என்றாலும் கடைசியில் நூலிழையில் வெண்கலப் பதக்கத்தை உஷா தவறவிட்டார். தொலைக்காட்சியில் இதைப் பார்த்த ரசிகர்களால் நம்பவே முடியவில்லை. கிட்டத்தட்ட ஒலிம்பிக்ஸ் பதக்கத்தைத் தொட்டுவிட்ட தருணம் அது. இந்தத் தருணத்தை அவரால் மட்டுமல்ல, ரசிகர்களாலும் மறக்க முடியாது. 

20 வயது இந்திய வீராங்கனை ஒலிம்பிக் பதக்கத்தை வென்றிருந்தால் அது மகத்தான சாதனையாக இருந்திருக்கும். உஷாவின் முயற்சிக்கு அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி வாழ்த்து தெரிவித்தார்.  ஒலிம்பிக்ஸ் களத்தில் உஷா மேற்கொண்ட முயற்சி அவரை இன்னும் உயரத்துக்கு அழைத்துச் சென்றது. 

1985 ஆசியன் சாம்பியன்ஷிப்: தங்க வேட்டை

1985 ஜகார்த்தா ஆசியன் சாம்பியன்ஷிப் போட்டியில் உஷாவும் லிடியாவும் கலந்துகொண்டார்கள். யார் யாரை முந்தப் போகிறார்கள் என ரசிகர்கள் போட்டியின் முடிவுகளைக் காண ஆவலாக இருந்தார்கள். ஆசியாவின் அதிவேக வீராங்கனை யார் என்கிற படத்துக்கான போட்டி அது.

100 மீ. ஓட்டத்தில் அரையிறுதிலேயே 11.39 விநாடிகளில் கடந்து தேசிய சாதனை படைத்தார் உஷா. இறுதிச்சுற்றில் அட்டகாசமாக ஓடி லிடியாவைத் தோற்கடித்து தங்கம் வென்று ஆசியாவின் அதிவேக வீராங்கனையாக முடி சூடிக் கொண்டார் உஷா. லிடியாவுக்கு வெண்கலம் மட்டுமே கிடைத்தது. அந்தப் போட்டியில் அவர் அந்த ஒரு பதக்கத்தையே வென்றார். உஷா கை நிறைய தங்கங்களை அள்ளினார்.

மேலும் 200 மீ., 400 மீ., 400 மீ. தடை ஓட்டங்களில் தங்கம் வென்றார் உஷா. 

நான்கு தங்கங்கள் பத்தாது என 4x400 மீ. தொடர் ஓட்டத்திலும் தங்கம் வென்று அசத்தினார். 4x100 மீ. தொடர் ஓட்டத்தில் வெண்கலம். அந்த ஓட்டத்தில் லிடியாவை மீண்டும் தோற்கடித்தார் உஷா. அந்த ஓட்டத்தின் சிடியை இன்னும் நான் வைத்திருக்கிறேன். அடிக்கடிப் போட்டுப் பார்ப்பேன் என்கிறார். 

ஆசியன் சாம்பியன்ஷிப் போட்டியில் 5 தங்கங்களும் ஒரு வெண்கலம் வென்ற சாதனையை பி.டி. உஷாவால் இன்னொரு முறை நிகழ்த்த முடியவில்லை. அந்தப் போட்டியில் தகுதிச்சுற்று ஓட்டங்கள் எல்லாம் சேர்த்து 5 நாள்களில் டஜனுக்கும் மேற்பட்ட ஓட்டங்களில் அவர் பங்கேற்றார். 

ஒரே நாளில் மூன்று ஓட்டங்களில் பங்கேற்றேன்.ஒரு ஓட்டம் முடிந்த பிறகு குளியலறைக்கு ஓடுவேன். குளித்து முடித்து அடுத்த ஓட்டத்துக்குத் தயாராவேன். ஓடுவது, ஓய்வெடுப்பது, குளிப்பது மீண்டும் ஓடுவது எனத் தொடர்ந்து செய்துகொண்டு இருந்தேன் என்று பேட்டியளித்தார் உஷா. 

1985 ஆசியன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கங்களை அள்ளிக் கொண்டு வந்த உஷா, அடுத்ததாக 1986 சியோல் ஆசிய விளையாட்டுப் போட்டியில் 4 தங்கங்களும் ஒரு வெள்ளிப் பதக்கமும் என மீண்டும் தங்க வேட்டை நடத்தினார். 

100 மீ. ஓட்டத்தில் லிடியாவிடம் தங்கத்தைப் பறிகொடுத்தாலும் 200 மீ., 400 மீ., 400 மீ. தடை, 4x400 மீ. தொடர் ஓட்டங்களில் தங்கம் வென்றார். இந்தப் போட்டியிலும் ஒரே நாளில் மூன்று ஓட்டங்களில் பங்கேற்றார். 

1988 சியோல் ஒலிம்பிக்ஸில் காயம் காரணமாக எந்த ஓட்டத்திலும் இறுதிச்சுற்றுக்கு உஷாவால் தகுதி பெற முடியவில்லை. இதனால் அவர் மீதான விமர்சனங்கள் அதிகமாகின. 

தில்லியில் நடைபெற்ற 1989 ஆசியன் அத்லெடிக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியுடன் ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்தார் உஷா. தன் மீதான விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் விதமான பதக்கங்களை வெல்வேன் என்றார். 

சொன்னது போலவே நடந்தது. 200 மீ., 400 மீ., 400 மீ. தடை ஓட்டங்களில் தங்கங்களும் 100 மீ. ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கமும் வென்றார். 4x400 மீ.,  தொடர் ஓட்டத்தில் தங்கமும் 4x100 மீ. ஓட்டத்தில் வெள்ளியும் வென்றார். 

ஓய்வு அறிவிப்பைப் பிறகு திரும்பப் பெற்றுக் கொண்ட உஷா 34 வயதில் கலந்துகொண்ட 4x100 மீ. தொடர் ஓட்டத்தில் தங்கம் வென்றார். 2000-ம் ஆண்டு ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார். அதன்பிறகு கேரளாவில் ஸ்கூல் ஆஃப் அத்லெடிக்ஸ் என்கிற அகாதெமியைத் தொடங்கி இளம் வீரர்களுக்குப் பயிற்சியளித்து வருகிறார். உஷாவின் பள்ளியிலிருந்து வந்த டின்டு லுகா 800 மீ. ஓட்டத்தில் தேசிய சாதனை நிகழ்த்தினார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்றார். 

இப்போது புதிய பொறுப்பு உஷாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் வழியாகவும் தடகள விளையாட்டுக்கு நிறைய நன்மைகள் செய்வார் என நாம் எதிர்பார்க்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com