சச்சின், டிராவிடுக்கும் இது நடந்திருக்கிறது: செளரவ் கங்குலி
By DIN | Published On : 14th July 2022 12:44 PM | Last Updated : 14th July 2022 12:44 PM | அ+அ அ- |

சச்சின், டிராவிட் என எல்லோருக்கும் கிரிக்கெட்டில் ஒரு தேக்க நிலை ஏற்பட்டது. விராட் கோலி விரைவில் நன்றாக விளையாடுவார் என பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி கூறியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாகச் சதமடிக்காமல் உள்ள விராட் கோலி, இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய டி20 தொடரில் இரு ஆட்டங்களில் 1,11 எனக் குறைவான ரன்களே எடுத்தார். முதல் ஒருநாள் ஆட்டத்தில் காயம் காரணமாக விளையாடவில்லை. இந்திய டெஸ்ட் அணியிலிருந்து அஸ்வினை நீக்கமுடியும் என்றால் கோலியையும் நீக்கலாம் என முன்னாள் வீரர் கபில் தேவ் விமர்சனம் செய்துள்ளார். முன்னாள் வீரர்கள் பலரும் இதேபோல பேசியுள்ளார்கள்.
இந்நிலையில் கோலியின் பேட்டிங் பற்றி பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி, ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
விளையாட்டில் இப்படி நடப்பது சகஜம். இது எல்லோருக்கும் நடந்திருக்கிறது. சச்சினுக்கும் டிராவிடுக்கும் எனக்கும் இதுபோன்று நடந்திருக்கிறது. கோலிக்கும் நடக்கிறது. வருங்காலத்தில் மற்ற வீரர்களுக்கும் இப்படி நடக்கும். இது விளையாட்டின் ஓர் அங்கம். ஒரு விளையாட்டு வீரனாக இதைக் கவனித்து, என்ன பிரச்னை என்பதை அறிந்து, உங்களுடைய ஆட்டத்தை விளையாட வேண்டும். திறமையில்லாமல் அவர் இத்தனை ரன்களை எடுத்திருக்க முடியாது. தனக்கு இது கடினமான காலக்கட்டம் என்பதை கோலி அறிவார். அவருக்கென்று உள்ள தரத்துக்கு இது சரியில்லை என்பதும் அவருக்குத் தெரியும். அவர் விரைவில் நன்கு விளையாடுவார். நன்றாக விளையாடுவதற்கான வழியை அவர் தேடிக் கண்டெடுக்க வேண்டும் என்றார்.