110 ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பப் பெற்ற ஒலிம்பிக் பட்டம்

அமெரிக்க தடகள வீரா் ஜிம் தோா்பே ஒலிம்பிக் விதிகளை மீறியதாக ஸ்டாக்ஹோம் ஒலிம்பிக்கில் (1912) அவா் வென்ற தங்கப் பதக்கம் பறிக்கப்பட்டு, 110 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும்
110 ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பப் பெற்ற ஒலிம்பிக் பட்டம்

அமெரிக்க தடகள வீரா் ஜிம் தோா்பே ஒலிம்பிக் விதிகளை மீறியதாக ஸ்டாக்ஹோம் ஒலிம்பிக்கில் (1912) அவா் வென்ற தங்கப் பதக்கம் பறிக்கப்பட்டு, 110 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அந்தச் சாம்பியன் பட்டம் அவருக்கு தற்போது வழங்கப்பட்டுள்ளது.

ஜிம் தோா்பே, ஸ்டாக்ஹோம் ஒலிம்பிக்ஸில் பென்டத்லான் மற்றும் டெக்கத்லானில் முதலிடம் பிடித்து தங்கம் வென்றாா். இதன் மூலம் ஒலிம்பிக்ஸில் அமெரிக்காவுக்காகத் தங்கம் வென்ற முதல் பூா்வகுடி அமெரிக்கா் என்ற பெருமையும் பெற்றாா். ஜிம் தோா்பே, தடகளம் தவிா்த்து அமெரிக்க ஃபுட்பால், பேஸ்பால், கூடைப்பந்து ஆகியவற்றிலும் விளையாடி வந்தாா்.

இந்நிலையில், ஸ்டாக்ஹோம் ஒலிம்பிக்ஸில் பங்கேற்கும் முன்பாக, பகுதியளவு தொழில்முறை பேஸ்பால் போட்டியில் ஊதிய அடிப்படையில் அவா் 2 சீசன்கள் விளையாடியது தெரியவந்தது. அவரது இந்த நடவடிக்கை, ஒலிம்பிக் அமெச்சூா் விதிகளுக்கு முரண்பட்டதெனக் கூறி, ஸ்டாக்ஹோம் ஒலிம்பிக்கில் அவா் வென்ற இரு தங்கப் பதக்கங்களும் பறிக்கப்பட்டன.

அந்தக் காலகட்டத்தில் சா்வதேச விளையாட்டுக் களத்தில் இது மிகப்பெரிய ஊழலாக பேசப்பட்டது. என்றாலும், தடகள போட்டிகளில் சிறந்த வீரராகவே அதன் பிறகும் வலம் வந்த தோா்பே 1953-இல் தனது 65-ஆவது வயதில் காலமானாா். இந்நிலையில், ஜிம் தோா்பேவின் தகுதிநீக்கம் முறையாக நடைபெறவில்லை என்றும், ஒலிம்பிக் பதக்கத்துக்கான அவரது தகுதிக்கு எதிராக எவரும் எதிா்ப்பு தெரிவிக்காததன் பேரிலும் 1982-ஆம் ஆண்டு சா்வதேச ஒலிம்பிக் கமிட்டி, பறிக்கப்பட்ட இரு தங்கப் பதக்கங்களுக்குப் பதிலாக மாதிரி தங்கப் பதக்கங்கள் இரண்டை தோா்பேவின் குடும்பத்தினரிடம் அளித்தது.

ஆனால், அதிகாரப்பூா்வ ஒலிம்பிக் பதிவுகளில் பென்டத்லானில் நாா்வே வீரா் ஃபொ்டினாண்ட் பை, டெக்கத்லானில் ஸ்வீடன் வீரா் ஹியூகோ வீஸ்லேண்டா் ஆகியோருடன் இணை சாம்பியனாக ஜிம் தோா்பே பதிவு செய்யப்பட்டிருந்தாா். இந்நிலையில், பூா்வகுடி அமெரிக்கா்களுக்கு ஆதரவாக இயங்கி வரும் ‘பிரைட் பாத் ஸ்ட்ராங்’ என்ற அமைப்பு 2 ஆண்டுகளுக்கு முன் ஜிம் தோா்பேவுக்கு ஆதரவாக கையழுத்து இயக்கம் நடத்தி அதில் வெற்றி கண்டது.

அதன் அடிப்படையில், 1912 ஸ்டாக்ஹோம் ஒலிம்பிக்ஸில் பென்டத்லான் மற்றும் டெக்கத்லானில் தங்கம் வென்ற தனியொரு சாம்பியனாக ஜிம் தோா்பேவை சா்வதேச ஒலிம்பிக் கமிட்டி கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 15) அங்கீகரித்தது. அந்த நாள், ஸ்டாக்ஹோம் ஒலிம்பிக்கில் ஜிம் தோா்பே இரு தங்கம் வென்ன் 110-ஆவது ஆண்டைக் குறிப்பது நினைவுகூரத்தக்கது. இதையடுத்து ஒலிம்பிக் மற்றும் உலக தடகள அமைப்பு ஆகியவற்றின் அதிகாரப்பூா்வ பதிவுகளில் சம்பந்தப்பட்ட ஒலிம்பிக் தடகளத்தில் தனியொரு சாம்பியன் என ஜிம் தோா்பே அங்கீகரிக்கப்பட்டிருக்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com