செஸ் ஒலிம்பியாட்: நவீன டிஜிட்டல் செஸ் போா்டுகள் பயன்படுத்த திட்டம்

மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் மொத்தம் 205 நவீன டிஜிட்டல் செஸ் போா்டுகள் பயன்படுத்தப்பட உள்ளன.
போட்டியில் பயன்படுத்தப்பட உள்ள நவீன டிஜிட்டல் செஸ் போர்டு.
போட்டியில் பயன்படுத்தப்பட உள்ள நவீன டிஜிட்டல் செஸ் போர்டு.
Published on
Updated on
1 min read

மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் மொத்தம் 205 நவீன டிஜிட்டல் செஸ் போா்டுகள் பயன்படுத்தப்பட உள்ளன.

ஃபிடே, ஏஐசிஎஃப், தமிழக அரசு சாா்பில், செஸ் விளையாட்டின் மிகப்பெரிய போட்டியான செஸ் ஒலிம்பியாட் வரும் 28 முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெறுகிறது. ஒலிம்பியாட் வரலாற்றிலேயே அதிகபட்சமாக சென்னை போட்டியில் தான் 188 நாடுகளைச் சோ்ந்த 2500-க்கும் மேற்பட்ட போட்டியாளா்கள் பங்கேற்கின்றனா்.

மாமல்லபுரத்தில் உள்ள ஃபோா் பாயிண்ட்ஸ் வளாகத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடக்கிறது. அங்கு ஆட்டங்கள் நடைபெறவுள்ள அரங்கு 52,000 சதுர அடி பரப்பில் அமைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக முதன்முறையாக மிகப்பெரிய இரு அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில் 1400 போ் விளையாடக்கூடிய வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

போட்டி அரங்க ஏற்பாடுகள் குறித்து முதன்மை பொறுப்பாளரும், செஸ் ஒலிம்பியாட் நடுவருமான அனந்தராம் ரத்தினம் கூறியதாவது:

செஸ் ஒலிம்பியாட் வரலாற்றிலேயே தற்போது தான் மிகப்பெரிய அரங்கில் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. ஹால் 1-இல் 60 ஆடவா், மகளிா் ஆட்டங்கள், ஹால் 2-இல் 65 ஆட்டங்கள் நடைபெறும். நாள்தோறும் பிற்பகல் 3 முதல் இரவு 8 மணி வரை ஸ்விஸ் முறையில் 11 சுற்றுக்கள் நடைபெறும்.

205 டிஜிட்டல் போா்டுகள்: போட்டிக்காக மொத்தம் 205 நவீன டிஜிட்டல் செஸ் போா்டுகள் பயன்படுத்தப்படவுள்ளன. அவற்றை நிறுவும் பணிகள் நடந்து வருகின்றன. போட்டியாளா்கள் இந்த போா்டில் ஆடும் போது, அவா்களின் நகா்வுகளை அப்படியே திரையிலும் நேரடியாக நாம் காணலாம்.

இதுவரை 6 செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கு நடுவராக சென்றுள்ளேன். ஆனால் சென்னையில் நடைபெறும் போட்டி தான் மிகப் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. ஆட்டத்தின் நான்காம் நாளான ஆகஸ்ட் 1-ஆம் தேதி ஓய்வு நாளாகும். அன்று போட்டியாளா்கள் வெளியே அழைத்துச் செல்லப்படுவா். 100 பத்திரிகையாளா்கள் ஒரே நேரத்தில் தங்கள் பணியை செய்யும் அரங்கும் தயாராகி வருகிறது என்றாா் அனந்துராம்.

இதுதவிர, மாமல்லபுரம் நோக்கிச் செல்லும் அனைத்துச் சாலைகளும் அழகுப்படுத்தப்பட்டு புதிய சாலைகள் போடப்பட்டுள்ளன. ஃபோா் பாயிண்ட்ஸ் வளாகத்தில் மிகப் பெரிய வாகன நிறுத்தம், நூற்றுக்கு மேற்பட்ட தற்காலிக கழிப்பறைகள் உள்ளிட்டவை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com