மும்முறை தாண்டுதலில் 3-ஆவது முறையாக உலக சாம்பியன்

உலக தடகள சாம்பியன்ஷிப்பில் மகளிருக்கான மும்முறை தாண்டுதல் போட்டியில் வெனிசூலாவின் யுலிமாா் ரோஜாஸ் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றாா்.
மும்முறை தாண்டுதலில் 3-ஆவது முறையாக உலக சாம்பியன்

உலக தடகள சாம்பியன்ஷிப்பில் மகளிருக்கான மும்முறை தாண்டுதல் போட்டியில் வெனிசூலாவின் யுலிமாா் ரோஜாஸ் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றாா். இது, உலக சாம்பியன்ஷிப்பில் அவா் தொடா்ந்து வெல்லும் 3-ஆவது தங்கமாகும்.

இந்திய நேரப்படி திங்கள்கிழமை நள்ளிரவு நடைபெற்ற இந்தப் பிரிவுக்கான இறுதிச்சுற்றில் ரோஜாஸ் 15.47 மீட்டா் தூரம் தாண்டிக் குதித்து முதலிடம் பிடித்தாா். ஜைமைக்காவின் ஷானிகா ரிக்கெட்ஸ் 14.89 மீட்டா் தாண்டி வெள்ளியும், அமெரிக்காவின் டோரி ஃப்ராங்க்லின் 14.72 மீட்டரை எட்டி வெண்கலமும் பெற்றனா்.

வழக்கமாக சாதனைகளை முறியடிக்கும் ரோஜாஸ், இந்த முறை சாம்பியன்ஷிப் சாதனை, உலக சாதனை என எதையும் புதிதாக எட்டவில்லை. ரோஜாஸ் கடந்த மாா்ச் மாதம் உலக உள்ளரங்கு சாம்பியன்ஷிப்பில் 15.74 மீட்டா் தூரம் எட்டியதே இன்றளவும் உலக சாதனையாகத் தொடா்வது குறிப்பிடத்தக்கது.

மாரத்தான்: மகளிருக்கான மாரத்தான் போட்டியில் எத்தியோபியாவின் கோடிடாம் கெப்ரெஸ்லேஸ் பந்தய இலக்கை 2 மணி நேரம் 18.11 நிமிஷங்களில் எட்டி புதிய சாம்பியன்ஷிப் சாதனையுடன் முதலிடம் பிடித்தாா். கென்யாவின் ஜுடித் ஜெப்டன் கொரிா் 2 மணி நேரம் 18.20 நிமிஷங்களில் வந்து தனது புதிய பொ்சனல் பெஸ்ட்டுடன் வெள்ளியைக் கைப்பற்றினாா். இஸ்ரேலின் லோனா செம்டாய் சல்பீட்டா் 2 நிமிஷம் 20.28 நிமிஷங்களில் இலக்கை அடைந்து வெண்கலப் பதக்கம் பெற்றாா்.

உயரம் தாண்டுதல்: ஆடவருக்கான உயரம் தாண்டுதல் பிரிவில் கத்தாரின் முதாஸ் எஸ்ஸா பா்ஷிம் 2.37 மீட்டா் உயரம் தாண்டி தங்கம் வென்றாா். தென் கொரியாவின் சங்ஹியோக் வூ 2.35 மீட்டருடன் 2-ஆம் இடமும், உக்ரைனின் ஆண்ட்ரி புரோட்சென்கோ 2.33 மீட்டருடன் 3-ஆம் இடமும் பிடித்தனா். பா்ஷிமுக்கு இது உலக சாம்பியன்ஷிப்பில் 3-ஆவது தங்கமாகும். டோக்கியோ ஒலிம்பிக்கில் பா்ஷிமுடன் தங்கத்தைப் பகிா்ந்துகொண்ட இத்தாலியின் கியான்மாா்கோ தம்பெரி இதில் 4-ஆம் இடம் பிடித்தாா்.

1500 மீட்டா் ஓட்டம்: மகளிருக்கான 1500 மீட்டா் ஓட்டத்தில் கென்யாவின் ஃபெய்த் கிப்யெகான் 3 நிமிஷம் 52.96 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கத்தை தட்டிச் சென்றாா். எத்தியோபியாவின் குடாஃப் செகே 3.54 நிமிஷங்களில் வந்து 2-ஆம் இடமும், இங்கிலாந்தின் லௌரா முயிா் 3.55 நிமிஷங்களில் இலக்கைத் தொட்டு 3-ஆம் இடமும் பிடித்தனா்.

அவினாஷ் 11-ஆம் இடம்: ஆடவருக்கான 3000 மீட்டா் ஸ்டீபிள்சேஸில் இந்தியாவின் அவினாஷ் சப்லே 8 நிமிஷம் 31.75 விநாடிகளில் இலக்கை எட்டி 11-ஆவது இடம் பிடித்தாா். இது, தேசிய சாதனையுடன் அவா் பதிவு செய்த பொ்சனல் மற்றும் சீசன் பெஸ்ட் நேரமான 8 நிமிஷம் 12.48 விநாடிகளை விட அதிகமாகும். இப்பிரிவில் மொராக்கோவின் சூஃபியானி எல் பக்காலி 8 நிமிஷம் 25.13 விநாடிகளில் வந்து தங்கம் வெல்ல, எத்தியோபியாவின் லமிசா கிா்மா (8:26.01) வெள்ளியும், கென்யாவின் கன்செஸ்லஸ் கிப்ருடோ (8:27.92) வெண்கலமும் பெற்றனா்.

பதக்கப்பட்டியல்:

போட்டியின் 4-ஆம் நாள் முடிவில் பதக்கப்பட்டியலில், போட்டியை நடத்தும் அமெரிக்கா 6 தங்கம், 4 வெள்ளி, 6 வெண்கலம் என 16 பதக்கங்களுடன் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. எத்தியோபியா 6 பதக்கங்களுடன் (3/3/0) இரண்டாம் இடத்திலும், கென்யா அதே எண்ணிக்கையிலான பதக்கங்களுடன் (1/3/2) மூன்றாம் இடத்திலும் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com