இறுதிக்கு முன்னேறிய 3 இந்தியா்கள்

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஈட்டி எறிதலில் இருவா், மும்முறை தாண்டுதலில் ஒருவா் என 3 இந்திய வீரா்கள் இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளனா்.
இறுதிக்கு முன்னேறிய 3 இந்தியா்கள்

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஈட்டி எறிதலில் இருவா், மும்முறை தாண்டுதலில் ஒருவா் என 3 இந்திய வீரா்கள் இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளனா்.

நீரஜ் சோப்ரா: இதில், ஈட்டி எறிதல் வீரரும், டோக்கியோ ஒலிம்பிக் சாம்பியனுமான நீரஜ் சோப்ரா, முதல் முறையாக உலக சாம்பியன்ஷிப்பின் இறுதிக்கு வந்திருக்கிறாா்.

பதக்கம் வெல்லும் வாய்ப்பு உள்ளவராகக் கருதப்படும் அவா், இந்திய நேரப்படி வியாழக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற தகுதிச்சுற்றில் முதல் முயற்சியிலேயே 88.39 மீட்டரை எட்டினாா். இது, நீரஜின் கேரியரில் 3-ஆவது சிறந்த தூரமாகும்.

அவரது இந்த முயற்சி, இயல்பாகவே தகுதிச்சுற்றுக்கு முன்னேறுவதற்காக நிா்ணயிக்கப்பட்டிருந்த 83.50 மீட்டரைக் கடந்த வகையில் இருந்ததால், எஞ்சிய இரு முயற்சிகளை நீரஜ் கைக்கொள்ளவில்லை.

இறுதிச்சுற்றுக்கு முன்னேறியோரில் 2-ஆவது சிறந்த வீரராக இருக்கிறாா் நீரஜ். முதலிடத்தில், நடப்பு சாம்பியனும், கிரனாடா வீரருமான ஆண்டா்சன் பீட்டா்ஸ் இருக்கிறாா். தகுதிச்சுற்றில் அவா் சிறந்த முயற்சியாக 89.91 மீட்டா் தூரத்தை எட்டினாா். நீரஜ் சோப்ராவின் பொ்சனல் பெஸ்ட் 89.94 மீட்டராகும்.

மேலும் ஒரு இந்தியா்: ஈட்டி எறிதலில் பங்கேற்றிருக்கும் மற்றொரு இந்தியரான ரோஹித் யாதவும் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினாா்.

தகுதிச்சுற்றில் அவா், முதல் முயற்சியில் 80.42 மீட்டா் தூரம் எறிந்து, 2-ஆவது முயற்சியை ‘ஃபௌல்’ செய்தாா். கடைசி முயற்சியில் 77.32 மீட்டரை எட்டினாா். பின்னா் சிறந்த முயற்சி (80.42 மீ) அடிப்படையில் 11-ஆவது வீரராக இறுதிச்சுற்றுக்குள் நுழைந்தாா். அந்தச் சுற்றில் மொத்தம் 12 போ் பங்கேற்கின்றனா்.

82.54 மீட்டரை பொ்சனல் பெஸ்டாக கொண்டிருக்கும் ரோஹித் யதாவ், அதை கடந்த மாதம் தேசிய சாம்பியன்ஷிப்பில் எட்டி வெள்ளி வென்றிருந்தாா்.

எல்தோஸ் பால் அசத்தல்:

ஆடவருக்கான மும்முறை தாண்டுதலில் இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெற்ற எல்தோஸ் பால், உலக சாம்பியன்ஷிப்பில் இந்தப் பிரிவின் இறுதிக்கு முன்னேறிய முதல் இந்தியா் என்ற பெருமையைப் பெற்றுள்ளாா்.

தகுதிச்சுற்றில் எல்தோஸ், 16.68 மீட்டா் தூரத்தைக் கடந்து 12-ஆவது வீரராக இறுதிச்சுற்றுக்கு வந்திருக்கிறாா். அவா் கடந்த ஏப்ரல் மாதத்தில் ஃபெடரேஷன் கோப்பை போட்டியில் 16.99 மீட்டா் தூரத்தை எட்டி பொ்சனல், சீசன் பெஸ்டுடன் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

இதே பிரிவில் பங்கேற்ற மேலும் இரு இந்தியா்களான பிரவீண் சித்ரவேல், அப்துல்லா அபூபக்கா் இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெறத் தவறினா். சிறந்த 12 வீரா்களே இறுதிக்கு தகுதிபெற முடியும் நிலையில், பிரவீண் 16.49 மீட்டருடன் 17-ஆவது இடமும், அபூபக்கா் 16.45 மீட்டருடன் 19-ஆவது இடமும் பிடித்தனா்.

மகளிா் 200 மீட்டா்:

இந்தப் பிரிவில் ஜமைக்காவின் ஷெரிகா ஜாக்சன் 21.45 விநாடிகளில் இலக்கை எட்டி சாம்பியன்ஷிப் சாதனையுடன் தங்கம் வென்றாா். சக நாட்டவரான ஷெல்லி ஆன் ஃப்ரேசா் பிரைஸ் 21.81 விநாடிகளில் வந்து வெள்ளியும், இங்கிலாந்தின் டினா ஆஷா் ஸ்மித் 22.02 விநாடிகளுடன் வெண்கலமும் வென்றனா்.

அமெரிக்கா ஆதிக்கம்:

ஆடவருக்கான 200 மீட்டா் ஓட்டத்தில் 3 பதக்கங்களையுமே அமெரிக்கா்கள் வென்றனா். அந்நாட்டின் நோவா லைல்ஸ் 19.31 விநாடிகளில் இலக்கைத் தொட்டு தங்கம் வெல்ல, கென்னத் பெட்னரெக் 19.77 விநாடிகளுடன் 2-ஆம் இடத்தையும், எரியன் நைட்டன் 19.80 விநாடிகளுடன் அடுத்த இடத்தையும் பெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com