இந்தியாவுக்கு வெள்ளி: நீரஜ் சோப்ரா தாயார் நடனமாடிக் கொண்டாட்டம்
By DIN | Published On : 24th July 2022 09:49 AM | Last Updated : 24th July 2022 09:49 AM | அ+அ அ- |

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில் நீரஜ் சோப்ரா வெள்ளிப்பதக்கம் வென்றது மகிழ்ச்சி அளிப்பதாக அவரது தாயார் சரோஜ் தேவி தெரிவித்துள்ளார்.
நீரஜ் சோப்ராவின் வெற்றியை அறிந்ததும் வீட்டில் உறவினர்களுடன் நடனமாடி தனது மகிழ்ச்சியை அவர் வெளிப்படுத்தினார்.
அதனைத் தொடர்ந்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய சரோஜ் தேவி, நீரஜ் சோப்ராவின் கடின உழைப்பு பலன் அளித்துள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைகிறோம். நீரஜ் பதக்கம் வெல்வார் என்பது எங்களுக்குத் தெரியும். இந்தியாவுக்கான இந்த வெற்றியை நாங்கள் அனைவரும் கொண்டாடுகிறோம் எனக் குறிப்பிட்டார்.
படிக்க | ஈட்டி எறிதல்: 19 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு பதக்கம்
நீரஜ் சோப்ராவின் சொந்த ஊரானா ஹரியாணாவின் பாட்னா பகுதியில் பெண்கள், ஆண்கள் என அனைவரும் நடனமாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
அமெரிக்காவில் 18வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஒரேகான் பகுதியில் நடைபெற்று வருகிறது. இதில் இறுதி பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா, ரோஹித் யாதவ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
இன்று இறுதி ஆட்டம் நடைபெற்ற நிலையில், நான்காவது முயற்சியில் 88.13 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து நீரஜ் சோப்ரா இரண்டாவது இடத்தைப் பிடித்தார். இதனால் வெள்ளிப்பதக்கத்தை நீரஜ் தன்வசப்படுத்தியுள்ளார்.
இதன் மூலம் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு 19 ஆண்டுகள் கழித்து பதக்கம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.