ஈட்டி எறிதல்: 19 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு பதக்கம்
By DIN | Published On : 24th July 2022 08:34 AM | Last Updated : 24th July 2022 01:26 PM | அ+அ அ- |

நீரஜ் சோப்ரா
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
இதன் மூலம் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு 19 ஆண்டுகள் கழித்து பதக்கம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பு கடந்த 2003ஆம் ஆண்டு நீளம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் அஞ்சு பாபி ஜார்ஜ் பதக்கம் வென்றிருந்தார். அதனைத் தொடர்ந்து 19 ஆண்டுகள் கழித்து 23 வயதான நீரஜ் சோப்ரா தற்போது வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
படிக்க | இந்தியாவுக்கு வெள்ளி: நீரஜ் சோப்ரா தாயார் நடனமாடிக் கொண்டாட்டம்
அமெரிக்காவில் 18வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஒரேகான் பகுதியில் நடைபெற்று வருகிறது. இதில் இறுதி பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா, ரோஹித் யாதவ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
இன்று இறுதி ஆட்டம் நடைபெற்ற நிலையில், நான்காவது முயற்சியில் 88.13 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து நீரஜ் சோப்ரா இரண்டாவது இடத்தைப் பிடித்தார். இதனால் வெள்ளிப்பதக்கத்தை நீரஜ் தன்வசப்படுத்தியுள்ளார்.
கிரெனடாவைச் சேர்ந்த ஆண்டர்சன் பீட்டர் 90.54 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து முதலிடத்தைப் பிடித்து தங்கப்பதக்கத்தைத் தட்டிச்சென்றார்.
படிக்க | போட்டி கடினமானது; தங்கம் வெல்லும் வேட்கை தொடரும்: நீரஜ் சோப்ரா
நீரஜ் சோப்ரா வெள்ளிப்பதக்கம் வென்றதன் மூலம் இந்தியாவுக்கு 19 ஆண்டுகள் கழித்து உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் கிடைத்துள்ளது.
இந்நிலையில், தற்போதைய சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ வெள்ளிப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சுட்டுரையில் பதிவிட்டுள்ள அவர்,
Neeraj Chopra has created history again by winning a silver medal at World Athletics Championship in Oregon. He becomes the 1st man and the 2nd Indian to win medal at the World Championships after long-jumper Anju Bobby George's bronze in 2003.
— Kiren Rijiju (@KirenRijiju) July 24, 2022
Congratulations @Neeraj_chopra1
ஒரேகான் பகுதியில் நடைபெற்று வரும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றதன் மூலம் நீரஜ் சோப்ரா மீண்டும் வரலாறு படைத்துள்ளார். உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்காக பதக்கம் வெல்லும் இரண்டாவது வீரர் நீரஜ் சோப்ரா. அவருக்கு எனது வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார்.