போட்டி கடினமானது; தங்கம் வெல்லும் வேட்கை தொடரும்: நீரஜ் சோப்ரா
By DIN | Published On : 24th July 2022 01:22 PM | Last Updated : 24th July 2022 01:22 PM | அ+அ அ- |

நீரஜ் சோப்ரா
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி கடினமாக இருந்ததாக வெள்ளிப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா தெரிவித்துள்ளார். மேலும், அடுத்தடுத்த போட்டிகளில் தங்கம் வெல்வதற்கான வேட்கை தொடரும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவில் 18வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஒரேகான் பகுதியில் நடைபெற்று வருகிறது. இதில் இறுதி பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா, ரோஹித் யாதவ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
படிக்க | இந்தியாவுக்கு வெள்ளி: நீரஜ் சோப்ரா தாயார் நடனமாடிக் கொண்டாட்டம்
இன்று இறுதி ஆட்டம் நடைபெற்ற நிலையில், நான்காவது முயற்சியில் 88.13 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து நீரஜ் சோப்ரா இரண்டாவது இடத்தைப் பிடித்து வெள்ளிப்பக்கம் வென்றார்.
அதனைத் தொடர்ந்து, இணையம் வாயிலாக செய்தியாளர்கள் கேள்விக்கு நீரஜ் சோப்ரா பதிலளித்தார். அப்போது பேசிய அவர், போட்டி மிகவும் கடினமாக இருந்தது. சக போட்டியாளர்கள் நன்றாக செயல்பட்டனர். அது சவாலானதாக இருந்தது. இன்று பல விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். தங்கப் பதக்கம் வெல்லும் முயற்சி தொடரும். ஆனால் எல்லா முறையும் தங்கம் கிடைக்கும் என்பதை நான் நம்பவில்லை. என்னால் முடிந்ததை நான் செய்வேன். எனது பயிற்சியில் மட்டுமே தற்போது கவனம் செலுத்தி வருகிறேன் எனக் குறிப்பிட்டார்.
படிக்க | ஈட்டி எறிதல்: 19 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு பதக்கம்
ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றதால் இந்த போட்டியில் எந்த அழுத்தத்தையும் சந்திக்கவில்லை. நான் என் மீது நம்பிக்கை வைத்துள்ளேன். மூன்று முறை ஈட்டி எறிந்தபிறகும் நான்காவது முறை திரும்ப வந்து ஈட்டி எறிந்தேன். அந்த நம்பிக்கை வெள்ளிப்பதக்கத்தை பெற்றுத்தந்துள்ளது.
வெள்ளிப்பதக்கம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்தமுறை இந்த பதக்கத்தின் நிறத்தை மாற்ற முயற்சிப்பேன் எனக் குறிப்பிட்டார்.
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் இரு முறை வாய்ப்பில் முறையே 82.39 மீட்டர், 86.37 மீட்டர் ஈட்டி எறிந்தது ஃபவுல்-ஆன நிலையில், மீண்டும் மறு வாய்ப்பில் ஈட்டி எறிந்தார். நான்காவது வாய்ப்பில் 88.13 மீட்டர் தூரத்திற்கு எறிந்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.
கிரெனடாவைச் சேர்ந்த ஆண்டர்சன் பீட்டர் 90.54 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து முதலிடத்தைப் பிடித்து தங்கப்பதக்கத்தைத் தட்டிச்சென்றார்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G