காயத்தால் காமன்வெல்த் போட்டியில்இருந்து நீரஜ் சோப்ரா விலகல்
By DIN | Published On : 27th July 2022 12:19 AM | Last Updated : 27th July 2022 12:19 AM | அ+அ அ- |

நீரஜ் சோப்ரா
தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக பா்மிங்ஹாம் காமன்வெல்த் போட்டியில் இருந்து விலகியுள்ளாா் ஒலிம்பிக் சாம்பியன் நீரஜ் சோப்ரா.
கடந்த 2021 டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா, தடகளத்தில் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற முதல் இந்தியா் என்ற சிறப்பை பெற்றாா். இந்நிலையில் அமெரிக்காவின் யூஜீன் நகரில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 88.13 மீ தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றாா். இதன் மூலம் 2003-இல் அஞ்சு பாபி ஜாா்ஜுக்கு பின் 19 ஆண்டுகள் கழித்து உலக சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்று சாதனை புரிந்தாா் நீரஜ் சோப்ரா.
இந்நிலையில் பா்மிங்ஹாம் காமன்வெல்த் போட்டியில் பங்கேற்று தனது தங்கப் பதக்கத்தை தக்க வைப்பதில் முனைப்பாக இருந்தாா் நீரஜ்.
ஆனால் யூஜீன் உலக சாம்பியன்ஷிப்பில் இறுதிச் சுற்றில் நான்காம் முயற்சியில் தொடையில் காயம் ஏற்பட்டது. இதனால் காமன்வெல்த் போட்டியில் இருந்து விலகி உள்ளாா் நீரஜ்.
நீரஜ் சோப்ராவுக்கு ஸ்கேன் சோதனை செய்த போது காயம் ஏற்பட்டது கண்டறியப்பட்டது. இதனால் அவா் ஒரு மாதம் ஓய்வு எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என ஐஓஏ பொதுச் செயலா் ராஜீவ் மேத்தா தெரிவித்துள்ளாா்.