டெஸ்ட் தொடர் 1-1: பாகிஸ்தானை வீழ்த்திய இலங்கை
By DIN | Published On : 28th July 2022 05:06 PM | Last Updated : 28th July 2022 05:06 PM | அ+அ அ- |

ஜெயசூர்யா (கோப்புப் படம்)
பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்டை வென்று டெஸ்ட் தொடரை சமன் செய்துள்ளது இலங்கை அணி.
இலங்கையில் இரு டெஸ்டுகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி விளையாடியது. முதல் டெஸ்டில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது பாகிஸ்தான்.
2-வது டெஸ்ட், காலேவில் நடைபெற்றது. முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 378 ரன்கள் எடுத்தது. தினேஷ் சண்டிமல் 80 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 88.1 ஓவர்களில் 231 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சல்மான் 62 ரன்கள் எடுத்தார். ரமேஷ் மெண்டிஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 147 ரன்கள் முன்னிலை பெற்றது.
இலங்கை அணி 2-வது இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்புக்கு 360 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. கருணாரத்னே 61, தனஞ்ஜெயா டி சில்வா 109 ரன்கள் எடுத்தார்கள்.
பாகிஸ்தான் அணி வெற்றி பெற 508 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 4-ம் நாள் முடிவில் பாகிஸ்தான் அணி, 28 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 89 ரன்கள் எடுத்தது. இமாம் உல் ஹக் 46, பாபர் ஆஸம் 26 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.
5-ம் நாளில் இலங்கை அணி சிறப்பாகப் பந்துவீசியது. இதனால் பாகிஸ்தான் அணி 77 ஓவர்களில் 261 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கேப்டன் பாபர் ஆஸம் 81 ரன்கள் எடுத்தார். 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்த நிலையில் மீதமுள்ள 8 விக்கெட்டுகளையும் விரைவாக இழந்தது பாகிஸ்தான். இதனால் 246 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை அணி, டெஸ்ட் தொடரை 1-1 என சமன் செய்தது. 2-வது இன்னிங்ஸில் இலங்கை பந்துவீச்சாளர்களான ஜெயசூர்யா 5 விக்கெட்டுகளையும் ரமேஷ் மெண்டிஸ் 4 விக்கெட்டுகளையும் எடுத்தார்கள். 2-வது டெஸ்டின் ஆட்ட நாயகனாக தனஞ்ஜெயா டி சில்வாவும் தொடர் நாயகனாக ஜெயசூர்யாவும் தேர்வானார்கள்.