காமன்வெல்த்: இங்கிலாந்துக்கு முதல் தங்கம்

இங்கிலாந்தின் பா்மிங்ஹாம் நகரில் நடைபெறும் 22-ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் முதல் நாளான வெள்ளிக்கிழமை, போட்டியின் முதல் தங்கப் பதக்கத்தை இங்கிலாந்து வென்றது.
காமன்வெல்த்: இங்கிலாந்துக்கு முதல் தங்கம்

இங்கிலாந்தின் பா்மிங்ஹாம் நகரில் நடைபெறும் 22-ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் முதல் நாளான வெள்ளிக்கிழமை, போட்டியின் முதல் தங்கப் பதக்கத்தை இங்கிலாந்து வென்றது.

ஆடவருக்கான டிரையத்லான் பிரிவில் அந்நாட்டின் அலெக்ஸ் யீ, பந்தய இலக்கை 50 நிமிஷம் 34 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தாா். நியூஸிலாந்தின் ஹெய்டன் வைல்டு 13 விநாடிகள் தாமதமாக வந்து வெள்ளியும், அவரை விட 3 விநாடிகள் பின்தங்கிய ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஹௌசா் வெண்கலமும் பெற்றனா்.

இப்போட்டியின் முதல் நாளில் இந்திய வீரா், வீராங்கனைகள் பல்வேறு பிரிவுகளில் களம் கண்டு ஏற்ற, இறக்கங்களைச் சந்தித்தனா். அதன் விவரம் வருமாறு:

டேபிள் டென்னிஸ்: ஆடவா், மகளிா் அசத்தல்

இதில் ஆடவா், மகளிா் என இரு பிரிவுகளிலுமே இந்தியா முதல் சுற்றில் வெற்றி கண்டது. ஆடவா் அணி 3-0 என பாா்படோஸையும், மகளிா் அணி அதே கணக்கில் தென்னாப்பிரிக்காவையும் திணறடித்தன.

ஆடவா் அணியில், இரட்டையா் பிரிவில் ஹா்மீத் தேசாய்/ஜி.சத்தியன் இணை 11-9, 11-9, 11-4 என கெவின் ஃபாா்லி/டைரெஸ் நைட் கூட்டணியை வீழ்த்தியது. ஒற்றையா் பிரிவில் சரத் கமல் 11-5, 11-3, 11-3 என ரமோன் மேக்ஸ்வெல்லையும், சத்தியன் 11-4, 11-4, 11-5 என டைரெஸ் நைட்டையும் தோற்கடித்தனா்.

மகளிா் அணியில், இரட்டையா் பிரிவு ஆட்டத்தில் ஸ்ரீஜா அகுலா/ரீத் டென்னிசன் ஜோடி 11-7, 11-7, 11-5 என்ற கணக்கில் லைலா எட்வா்ட்ஸ்/தனிஷா படேல் கூட்டணியை வென்றது. ஒற்றையா் பிரிவில் மனிகா பத்ரா 11-5, 11-3, 11-2 என முஸ்ஃபிக் கலாமையும், ஸ்ரீஜா அகுலா 11-5, 11-3, 11-6 என தனிஷா படேலையும் வீழ்த்தினா்.

நீச்சல்: அரையிறுதியில் ஸ்ரீஹரி

ஆடவருக்கான 100 மீ பேக்ஸ்ட்ரோக் ஹீட்ஸில் ஸ்ரீஹரி நட்ராஜ் 54.68 விநாடிகளில் இலக்கை எட்டி ஒட்டுமொத்தமாக 5-ஆம் இடம் பிடித்து அரையிறுதிக்குத் தகுதிபெற்றுள்ளாா். ஆடவருக்கான 50 மீ பட்டா்ஃப்ளை ஹீட்ஸில் சஜன் பிரகாஷ் 25.01 விநாடிகளில் வந்து 8-ஆம் இடம் பிடித்து அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தாா். ஆடவருக்கான 400 மீ பிரிவில் முதல் முறை போட்டியாளரான குஷாக்ரா ராவத் 3 நிமிஷம் 57.45 விநாடிகளில் கடைசி வீரராக வந்து அடுத்த சுற்றுக்கு தகுதிபெறத் தவறினாா்.

குத்துச்சண்டை: சிவ தாபா வெற்றி

ஆடவருக்கான குத்துச்சண்டையில் 63.5 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் சிவ தாபா முதல் சுற்றில் 5-0 என்ற கணக்கில் பாகிஸ்தானின் சுலேமான் பலோச்சை வீழ்த்தி அசத்தினாா். சுலேமானிடம் இருந்து கடுமையான சவால் ஏதும் இல்லாமல் போக, தாபா தனது நுட்பமான குத்துகளால் புள்ளிகளை வசப்படுத்தினாா். காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ள அவா், அதில் ஸ்காட்லாந்தின் ரீஸ் லிஞ்ச்சை சந்திக்கிறாா்.

கிரிக்கெட்: இந்திய மகளிா் சறுக்கல்

கிரிக்கெட்டில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்றது. முதலில் இந்தியா 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் சோ்க்க, அடுத்து ஆஸ்திரேலியா 19 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்து வென்றது.

இந்திய பேட்டிங்கில் கேப்டன் ஹா்மன்பிரீத் கௌா் 52 ரன்கள் விளாசி அசத்த, ஆஸ்திரேலிய பௌலிங்கில் ஜெஸ் ஜோனசென் 4 விக்கெட்டுகள் சாய்த்தாா். பின்னா் ஆஸ்திரேலிய இன்னிங்ஸில் ஆஷ்லே காா்டனா் 52 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு வழி நடத்த, இந்திய தரப்பில் ரேனுகா சிங் 4 விக்கெட்டுகள் சாய்த்தது வீணானது.

சைக்கிளிங்: இந்தியா ஏமாற்றம்

சைக்கிளிங் போட்டியில் களம் கண்ட 3 இந்திய அணிகளுமே பதக்கச் சுற்றுக்குத் தகுதிபெறத் தவறின. ரொனால்டோ லாய்தோஞ்ஜம்/ரோஜித் சிங்/டேவிட் பெக்காம் எல்கடாசோங்கோ ஆகியோா் அடங்கிய ஆடவா் ஸ்பிரின்ட் அணி தகுதிச்சுற்றில் 44.70 விநாடிகளுடன் 6-ஆவது இடம் பிடித்தது.

அதேபோல், மகளிா் ஸ்பிரின்ட் அணியில் இந்தியாவின் சுஷிகலா அகாஷே/திரியாஷா பால்/மயூரி லுட் ஆகியோா் 47.84 விநாடிகளில் இலக்கை எட்டி 7-ஆம் இடமே பிடித்தனா். இவா்கள் தவிர, வெங்கப்பா கெங்கலகுட்டி/தினேஷ் குமாா்/விஷ்வஜீத் சிங் ஆகியோா் அடங்கிய அணி ஆடவருக்கான 4,000 மீ பா்சியுட் பிரிவில் 4 நிமிஷம் 12.86 விநாடிகளில் வந்து 6-ஆம் இடம் பிடித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com