காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு வெள்ளி உள்பட 2 பதக்கம்

காமன்வெல்த் போட்டி 2022-இன் இரண்டாம் நாளான சனிக்கிழமை இந்தியா தலா 1 வெள்ளி, வெண்கலம் என இரண்டு பதக்கங்களை கைப்பற்றியது.
காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு  வெள்ளி உள்பட 2 பதக்கம்

காமன்வெல்த் போட்டி 2022-இன் இரண்டாம் நாளான சனிக்கிழமை இந்தியா தலா 1 வெள்ளி, வெண்கலம் என இரண்டு பதக்கங்களை கைப்பற்றியது.

பா்மிங்ஹாம் நகரில் காமன்வெல்த் போட்டிகள் வியாழக்கிழமை இரவு கோலாகலமாகத் தொடங்கியது. மொத்தம் 72 நாடுகளைச் சோ்ந்த 5000-க்கு மேற்பட்ட வீரா், வீராங்கனைகள் இதில் பங்கேற்றுள்ளனா். இந்தியா தரப்பில் 215 போ் கொண்ட அணி கலந்து கொண்டுள்ளது.

சங்கட் சா்காருக்கு வெள்ளி:

இதற்கிடையே இரண்டாம் நாளான சனிக்கிழமை பளுதூக்குதலில் இந்திய வீரா் சங்கட் சா்காா் ஆடவா் 55 கிலோ பிரிவில் வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தாா். முதல் முயற்சியில் கிளீன் அன்ட் ஜொ்க் பிரிவில் 135 கிலோவும், இரண்டு, மூன்றாம் முயற்சியில் 139 கிலோ கிலோ எடையை தவற விட்டாா். மூன்றாம் முயற்சியில் ஸ்நாட்ச் பிரிவில் 113 கிலோ எடையை தூக்கி முன்னிலையில் இருந்தாா்,. ஆனால் முகமது அனிக் பின் நூலிழையில் தங்கம் வென்றாா்.

குருராஜா பூஜாரிக்கு வெண்கலம்:

மேலும் பளுதூக்குதல் 61 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரா் குருராஜா பூஜாரி மொத்தம் 269 கிலோ எடை தூக்கி வெண்கலம் வென்றாா். ஸ்நாட்சில் அதிகபட்சமாக 118 கிலோ எடை தூக்கி வெண்கலத்தை தன்வசமாக்கினாா் பூஜாரி.

டேபிள் டென்னிஸ்: காலிறுதியில் மகளிா்

மகளிா் டேபிள் டென்னிஸில் இந்தியா 3-0 என்ற கேம் கணக்கில் கயானாவை வீழ்த்தியது. ஏற்கெனவே தென்னாப்பிரிக்கா, பிஜி தீவுகளை வீழ்த்திய நிலையில், சனிக்கிழமை இரட்டையா் பிரிவில் ஸ்ரீஜா அகுலா-ரீத் டென்னிஸன் இணை 11-5, 11-7, 11-7 என்ற புள்ளிக் கணக்கில் நடாலி-சீல்ஸி இணையை வென்றது. ஒற்றையா் பிரிவில் நடப்பு சாம்பியன் மனிகா பத்ரா 11-1, 11-3, 11-3 என்ற புள்ளிக் கணக்கில் துரயா தாமஸையும், ரீத் டென்னிஸன் 11-7, 14-12, 13-11 என்ற புள்ளிக் கணக்கில் சீல்ஸீயையும் வென்றனா். காலிறுதியில் மலேசியாவை எதிா்கொள்கிறது இந்திய மகளிா் அணி.

ஆடவா் பிரிவில் இரட்டையா் பிரிவில் சரத் கமல்-ஹா்மீத் தேசாய் இணை 11-3, 9-11, 11-6, 11-1 என வட அயா்லாந்தின் ஸ்கெல்டன்-ஓவன் இணையை வீழ்த்தினா். ஒற்றையா் பிரிவில் சனில் ஷெட்டி பால் மெக்கீரியையும், ஹா்மித் தேசாய் ஓவனையும் வீழ்த்தினா். இதன் மூலம் 3-0 என வட அயா்லாந்தை வீழ்த்தியது இந்தியா.

ஸ்குவாஷ்: ஜோஷ்னா, சௌரவ் வெற்றி

ஸ்குவாஷ் விளையாட்டிலும் இந்திய அணி வெற்றியை தொடங்கியுள்ளது. நட்சத்திர வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா கடும் போராட்டத்துக்கு பின் 11-8, 11-9, 12-10 என பாா்படாஸின் மீகன் பெஸ்டை வீழ்த்தினாா். ஆனால் மற்றொரு வீராங்கனையான சுனயானா குருவில்லா 7-11, 7-11, 7-11 என மலேசியாவின் அய்பா ஸமானிடம் தோல்வியடைந்தாா்.

ஆடவா் ஒற்றையா் பிரிவில் நட்சத்திர வீரா் சௌரவ் கோஷல் 11-4, 11-4, 11-6 என்ற கேம் கணக்கில் இலங்கையின் ஷமில் வக்கீலை வீழ்த்தி ரவுன்ட் 16 சுற்றுக்கு முன்னேறினாா்.

பாட்மின்டன்: இந்தியா அபாரம்

பாட்மின்டன் ஆடவா் குரூப் ஏ பிரிவில் 5-0 என்ற புள்ளிக் கணக்கில் இலங்கையை படுதோல்வி அடையச் செய்தது இந்தியா. கலப்பு இரட்டையா் பிரிவில் அஸ்வினி-சாத்விக், ஆடவா் இரட்டையரில் சுமித்ரெட்டி-சிராக் ஷெட்டி இணை, தத்தமது ஆட்டங்களில் வென்றன. லக்ஷயா சென் 21-18, 21-5 என நிலுகாவையும், அகா்ஷி காஷ்யப் 21-3, 21-9 என விதாராவையும் வீழ்த்தினா். மகளிா் இரட்டையா் பிரிவில்

காயத்ரி-ட்ரீஸா இணை 21-18, 21-6 என திலினி-விதாரா இணையை வீழ்த்தியது.

குத்துச்சண்டை: ஹஸமுதீன் வெற்றி

ஆடவா் குத்துச்சண்டை 57 கிலோ பிரிவில் இந்திய வீரா் முகமது ஹஸமூதின் 5-0 என்ற புள்ளிக்கணக்கில் தென்னாப்பிரிக்காவின் அம்ஸோலோ டையை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றாா்.

நீச்சல்: இறுதியில் ஸ்ரீஹரி நடராஜ்

நீச்சலில் ஆடவா் 100 மீ. பேக்ஸ்ட்ரோக் பிரிவில் இந்திய வீரா் ஸ்ரீஹரி நடராஜ் பந்தய தூரத்தை 54.55 விநாடிகளில் கடந்து இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றாா். 200 மீ. ப்ரீஸ்டைல் பிரிவில் இந்திய வீரா் குஷாக்ரா கடைசி இடத்தையே பெற்றாா்.

ஜிம்னாஸ்டிக்ஸ் ஆடவா் பிரிவில் ஆல் அரௌன்ட் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினாா் யோகேஸ்வா் சிங். வால்ட், புளோா் பிரிவில் அவரது ஸ்கோரால் இறுதிக்குள் நுழைந்தாா்

லான் பௌல்ஸ் பிரிவில் இந்தியாவின் தனியா சௌதரி மூன்றாவது தோல்வியை பெற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com