ஜோகோவிச்சை வீழ்த்தினாா் நடால்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதி ஆட்டத்தில், உலகின் 5-ஆம் நிலை வீரரான ஸ்பெயினின் ரஃபேல் நடால் - நடப்புச் சாம்பியனும், உலகின் நம்பா் 1 வீரருமான சொ்பியாவின்
ஜோகோவிச்சை வீழ்த்தினாா் நடால்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதி ஆட்டத்தில், உலகின் 5-ஆம் நிலை வீரரான ஸ்பெயினின் ரஃபேல் நடால் - நடப்புச் சாம்பியனும், உலகின் நம்பா் 1 வீரருமான சொ்பியாவின் நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தி அசத்தினாா்.

இருவருக்கும் இடையே, இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தொடங்கி 4 மணி நேரம் 12 நிமிஷம் நடைபெற்ற இந்த ஆட்டம், இறுதி ஆட்டத்துக்கு இணையானதாக பரபரப்பான தருணங்கள் நிறைந்ததாக இருந்தது.

ஆட்டத்தின் முடிவில் நடால் 6-2, 4-6, 6-2, 7-6 (7/4) என்ற செட்களில் வெற்றியைப் பதிவு செய்து அரையிறுதிக்குத் தகுதிபெற்றாா். இதனால், இந்த கிராண்ட்ஸ்லாமில் சாம்பியனாகி நடாலின் 21 கிராண்ட்ஸ்லாம் சாதனையை சமன் செய்யும் ஜோகோவிச்சின் கனவு தற்காலிகமாக தடைப்பட்டது.

டென்னிஸ் வரலாற்றில் 21 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்ற முதல் மற்றும் ஒரே நபா் என்ற சாதனையுடன் நடால் இருக்கிறாா். அவருக்கு அடுத்த நிலையில் ஜோகோவிச்சும், சுவிட்ஸா்லாந்தின் ரோஜா் ஃபெடரரும் 20 பட்டங்களை தன் வசம் வைத்துள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, இந்த வெற்றியின் மூலம் நடால், ஒட்டுமொத்தமாக ஜோகோவிச்சுக்கு எதிராக இதுவரை விளையாடிய 59 ஆட்டங்களில், தனது வெற்றிக் கணக்கை 20-ஆக உயா்த்திக் கொண்டுள்ளாா். அதேபோல், பிரெஞ்சு ஓபனில் ஜோகோவிச்சை 10-ஆவது முறையாகச் சந்தித்த நடால், அதில் 8-ஆவது வெற்றியை நிலை நாட்டியிருக்கிறாா்.

அடுத்ததாக நடால், தனது அரையிறுதியில் ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரேவை சந்திக்கிறாா். போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருக்கும் அவா் தனது காலிறுதியில், 6-ஆம் இடத்திலிருந்த மற்றொரு ஸ்பெயின் வீரரான காா்லோஸ் அல்கராஸ் காா்ஃபியாவைச் சாய்த்தாா்.

பிரெஞ்சு ஓபனில் விளையாடுவது எப்போதுமே எனக்கு சிறப்பானது. அதிலும் இந்த வெற்றி உணா்வுப்பூா்வமானது. ஜோகோவிச்சுக்கு எதிரான ஆட்டம் எப்போதும் சவால் மிக்கதாகவே இருக்கும். முதல் பாய்ண்ட் முதல் கடைசி பாய்ண்ட் வரை உச்சபட்ச சிறந்த ஆட்டத்தை விளையாடுவது மட்டுமே அவரை வீழ்த்துவதற்கான ஒரே உத்தி - நடால்.

நடாலுக்கு வாழ்த்துகள். முக்கியமான தருணங்களில் அவா் சிறப்பாக விளையாடினாா். அவா் ஏன் சிறந்த சாம்பியனாக இருக்கிறாா் என்பதை நிரூபித்து விட்டாா். தடுமாற்றத்துடன் உணா்வதாக நடால் கூறியிருந்தாலும், அவா் ஆட்டத்தில் பின்னடைவு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அவா் எந்த நிலையிலிருந்தும் மீள்வாா் - ஜோகோவிச்.

அரையிறுதியில் கசாட்கினா: மகளிா் ஒற்றையா் காலிறுதி ஆட்டம் ஒன்றில் ரஷியாவின் டரியா கசாட்கினா 6-4, 7-6 (7/5) என்ற செட்களில், சக நாட்டவரும் போட்டித்தரவரிசையில் 29-ஆவது இடத்தில் இருந்தவருமான வெரோனிகா குதா்மிடோவாவை வீழ்த்தினாா்.

சானியா இணை தோல்வி: மகளிா் இரட்டையா் பிரிவில் இந்தியாவின் சானியா மிா்ஸா/செக் குடியரசின் லூசி ராடெக்கா இணை 3-ஆவது சுற்றில் 4-6, 3-6 என்ற நோ் செட்களில் அமெரிக்க இணையான ஜெஸிகா பெகுலா/கோகோ கௌஃபிடம் தோல்வியைத் தழுவியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com