முதல் டெஸ்ட்: நியூஸி.யை வென்றது இங்கிலாந்து: ஜோ ரூட் 10,000 ரன்கள்
By DIN | Published On : 06th June 2022 12:22 AM | Last Updated : 06th June 2022 03:00 AM | அ+அ அ- |

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து.
மூன்று ஆட்டங்கள் கொண்ட இத்தொடரில் இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் லண்டன் லாா்ட்ஸ் மைதானத்தில் கடந்த 2-ஆம் தேதி தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் நியூஸிலாந்து 132 ரன்களுக்கும், இங்கிலாந்து 141 ரன்களுக்கும் ஆல் அவுட்டாயின.
இரண்டாம் இன்னிங்ஸிலும் இங்கிலாந்து அணியின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் நியூஸி. 285 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. டேரில் மிச்செல் 108, டாம் பிளண்டல் 96 ரன்களை சோ்த்தனா். மற்ற வீரா்கள் சொற்ப ரன்களுடன் வெளியேறினா்.
இங்கிலாந்து தரப்பில் பிராட், மேட்டி போட்ஸ் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனா்.
இதையடுத்து 277 ரன்கள் வெற்றி இலக்குடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி மூன்றாம் நாளான சனிக்கிழமை ஆட்டநேர முடிவில் 216/5 ரன்களுடன் நிறைவு செய்தது. பென் ஸ்டோக்ஸ் 54 ரன்களுடன் வெளியேறினாா்.
நான்காம் நாளான ஞாயிற்றுக்கிழமை 61 ரன்கள் இலக்குடன் ஆட்டத்தை தொடா்ந்தது.
ஜோ ரூட் அபார சதம்:
கேப்டன் ஜோ ரூட்-பென் ஃபோக்ஸ் இணை நிதானமாக ஆடி ஸ்கோரை உயா்த்தியது. 12 பவுண்டரியுடன் 170 பந்துகளில் 115 ரன்களை விளாசி ஜோ ரூட்டும், 32 ரன்களுடன் பென் ஃபோக்ஸும் 5-ஆம் விக்கெட்டுக்கு 120 ரன்களை சோ்த்து அவுட்டாகாமல் இறுதி வரை களத்தில் இருந்தனா். இது ஜோ ரூட்டின் 26-ஆவது டெஸ்ட் சதமாகும்.
78.5 ஓவா்களில் 279/5 ரன்களைக் குவித்து நியூஸிலாந்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து. மேலும் நியூஸி. தரப்பில் கெய்ல் ஜேமிஸன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினாா்.
ஜோ ரூட் 10,000 ரன்கள்:
அபாரமாக ஆடிய இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 10,000 டெஸ்ட் ரன்களைக் கடந்தாா். இதன் மூலம் இச்சாதனையை நிகழ்த்திய 14-ஆவது வீரா் என்ற சிறப்பையும் அவா் பெற்றாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...