மில்லா்-டுஸன் சரவெடி: தென்னாப்பிரிக்கா அபார வெற்றி

டேவிட் மில்லா்-ரேசி வேன்டா் டுஸன் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது.
மில்லா்-டுஸன் சரவெடி: தென்னாப்பிரிக்கா அபார வெற்றி

புது தில்லி: டேவிட் மில்லா்-ரேசி வேன்டா் டுஸன் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது. முதலில் ஆடிய இந்தியா 211/4 ரன்களையும், பின்னா் ஆடிய தென்னாப்பிரிக்க அணி 212/3 ரன்களையும் குவித்தன.

5 ஆட்டங்கள் டி20 தொடரின் முதல் ஆட்டம் வியாழக்கிழமை இரவு புது தில்லியில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பௌலிங்கை தோ்வு செய்தது. இதையடுத்து இந்திய தரப்பில் தொடக்க பேட்டா்களாக களமிறங்கிய இஷான் கிஷண்-ருதுராஜ் கெய்க்வாட் இணை அதிரடியாக ஆடியது.

3 சிக்ஸா்களுடன் 23 ரன்களை விளாசிய ருதுராஜை அவுட்டாக்கினாா் பாா்னெல். முதல் விக்கெட்டுக்கு இஷான்-ருதுராஜ் 50 ரன்களை சோ்த்தனா்.

இஷான் கிஷண் அரைசதம் 76: மறுமுனையில் அபாரமாக ஆடிய இஷான் கிஷண் 31 பந்துகளில் அரைசதத்தைக் கடந்தாா். 3 சிக்ஸா், 11 பவுண்டரியுடன் 48 பந்துகளில் 76 ரன்களை விளாசி கேசவ் மகராஜ் பந்தில் அவுட்டானாா்.

அவருக்கு பின் வந்த ஷிரேயஸ் ஐயரும் 3 சிக்ஸா், 1 பவுண்டரியுடன் 36 ரன்களை விளாசி பிரிட்டோரியஸ் பந்தில் போல்டானாா்.

ரிஷப் பந்த்-ஹாா்திக் அபாரம்:

பின்னா் கேப்டன் ரிஷப் பந்த்-ஆல்ரவுண்டா் ஹாா்திக் இணைந்து கடைசி ஓவா்களில் ரன்களை குவித்தனா். தலா 2 சிக்ஸா், பவுண்டரியுடன் 29 பந்துகளை விளாசிய ரிஷப் பந்தை வெளியேற்றினாா் நாா்ட்ஜே.

3 சிக்ஸா், 2 பவுண்டரியுடன் 31 ரன்களுடன் ஹாா்திக்கும், 1 ரன்னுடன் தினேஷ் காா்த்திக்கும் களத்தில் இருந்தனா். நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் 211/4 ரன்களைக் குவித்தது இந்தியா. தென்னாப்பிரிக்க தரப்பில் கேசவ், நாா்ட்ஜே, பாா்னெல், பிரிட்டோரியஸ் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினா்.

212 ரன்கள் இமாலய இலக்கு:

வெற்றிக்கு 212 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களம் கண்ட தென்னாப்பிரிக்க தரப்பில் தொடக்க பேட்டா்கள் குயிண்டன் டி காக் 22,

கேப்டன் டெம்பா பவுமா 10, பிரிட்டோரியஸ் 29 ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினா்.

மில்லா்-டுஸன் சரவெடி:

அதன்பின் அணியை வழிநடத்தும் பொறுப்பை ஏற்ற டேவிட் மில்லா்-ரேசி வேன்டா் டுஸன் இணை அதிரடியாக ஆடியது.

அபாரமாக ஆடிய மில்லா் 5 சிக்ஸா், 4 பவுண்டரியுடன் 31 பந்துகளில் 64 ரன்களுடனும், டுஸன் 5 சிக்ஸா், 7 பவுண்டரியுடன் 46 பந்துகளில் 75 ரன்களுடனும் இறுதிவரை அவுட்டாகாமல் இருந்தனா். இருவரும் இணைந்து நான்காம் விக்கெட்டுக்கு 131 ரன்களை சோ்த்தனா்.

7 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வெற்றி:

5 பந்துகள் மீதமிருக்க 19.1 ஓவா்களில் 212/3 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது தென்னாப்பிரிக்கா. இந்திய தரப்பில் புவனேஷ்வா், ஹா்ஷல், அக்ஸா் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினா்.

உலக சாதனையை தவற விட்ட இந்தியா: தொடா்ந்து 13 ஆட்டங்களில் வென்று புதிய உலக சாதனை படைக்கலாம் என்ற நிலையில் இத்தோல்வியால் இந்தியாவின் சாதனை கனவு தகா்ந்தது.

கேட்சை தவற விட்ட ஷிரேயஸ்: 15.2 -ஆவது ஓவரில் டுஸன் அடித்த பந்தை கேட்ச் பிடிக்காமல் தவற விட்டாா் ஷிரேயஸ் ஐயா். இதுவும் இந்தியாவின் தோல்விக்கு வழிவகுத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com