இது புதிய பாணி: அணியை மாற்றாமல் சாதித்த ராகுல் டிராவிட்

உன்னைப் பார்த்துக்கொள்ள வேண்டியது என் பொறுப்பு. இருவரும் ஒன்றிணைந்து சாதிப்போம். 
இது புதிய பாணி: அணியை மாற்றாமல் சாதித்த ராகுல் டிராவிட்

2 டி20 ஆட்டங்களில் தோற்ற பிறகு வேறு எந்த அணியாக இருந்தாலும் ஒரு சில மாற்றங்களுடன் தான் 3-வது டி20 ஆட்டத்தில் விளையாடியிருக்கும்.

அதிலும் 3-வது டி20 ஆட்டத்தில் தோற்றால், தொடரை இழக்க வேண்டிய நிலைமையில் உள்ள எந்த அணியும் இப்படித்தான் முடிவெடுக்கும். இதுதான் வழக்கம். 

ஆனால் இந்திய அணி புதிய பாணியில் செயல்படுகிறது. தில்லாக முடிவெடுத்து அதே 11 பேருடன் 3-வது டி20 ஆட்டத்தில் விளையாடி அபார வெற்றியை அடைந்துள்ளது. 

விசாகபட்டினத்தில் நடைபெற்ற 3-வது டி20 ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணியை இந்தியா 48 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

டாஸில் தோற்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 179 ரன்களை எடுத்தது. கெயிக்வாட் 57, இஷான் கிஷன் 54, பாண்டியா 31 ரன்களும் எடுத்தார்கள். 

தென்னாப்பிரிக்க அணி 19.1 ஓவர்களில் 131 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஒரு தெ.ஆ. பேட்டராலும் 30 ரன்களைக் கூட எடுக்க முடியவில்லை. கிளாசென் அதிகபட்சமாக 29 ரன்கள் எடுத்தார். ஹர்ஷல் படேல் 4 விக்கெட்டுகளும் சஹால் 3 விக்கெட்டுகளும் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தார்கள். ஆட்டத்தின் சிறந்த வீரராக சஹால் தேர்வானார்.

டி20 தொடரில் தென்னாப்பிரிக்க அணி 2-1 என முன்னிலையில் உள்ளது. அடுத்த டி20 ஆட்டம் வரும் வெள்ளியன்று ராஜ்கோட் நகரில் நடைபெறவுள்ளது.

2-வது டி20 ஆட்டத்தில் தோற்றபிறகு அவேஷ் கான், சஹால், அக்‌ஷர் படேல் மீது அதிக விமர்சனங்கள் எழுந்தன. அவேஷ் கான், அக்‌ஷர் படேலுக்குப் பதிலாக உம்ரான் மாலிக், தீபக் ஹூடா ஆகிய இருவரும் அணியில் இடம்பெறவேண்டும் எனப் பலரும் கருத்துகளைத் தெரிவித்தார்கள். உம்ரான் மாலிக்கை வெகுவாகப் புகழ்ந்து அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தினார் முன்னாள் வீரர் கவாஸ்கர்.

ஆனால், இந்திய அணியின் பயிற்சியாளர் டிராவிட் புதிய பாணியில் இயங்குகிறார் என்பது இப்போது தெளிவாகி விட்டது. ஒரு வீரர் மீது நம்பிக்கை வைத்தால் அவருக்குத் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கினால் மட்டுமே அவரால் திறமையை வெளிப்படுத்த முடியும் என டிராவிட் நம்புகிறார். ஓர் ஆட்டத்தில் மோசமாக விளையாடினாலும் அடுத்த ஆட்டத்தில் வீரர்களுக்குத் தொடர்ந்து வாய்ப்புகளை வழங்குகிறார். இதனால் வீரர்களுக்கும் பாதுகாப்பு உணர்வு ஏற்படுகிறது. பதற்றத்துடன் விளையாட வேண்டிய  அவசியம் இனி இருக்காது. சஹாலுக்குத் தொடர்ந்து வாய்ப்பு வழங்கியதால் தான் நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தார். ஹர்ஷல் படேலும் உற்சாகமாகப் பந்துவீசி நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்திய அணியின் நிர்வாகத்தில் ஒரு புதிய நடைமுறையை உருவாக்கியுள்ளார் ராகுல் டிராவிட். 

உன்னிடம் திறமை உள்ளதா, உன் மீது உனக்கு நம்பிக்கை உள்ளதா, வா... நான் தொடர்ந்து வாய்ப்புகள் தருகிறேன், யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை. இதுதான் என் முடிவு.  நீ சுதந்திரமாக, நம்பிக்கையுடன் விளையாடி அணிக்கு வெற்றிகளைக் கொண்டு வா. உன்னைப் பார்த்துக்கொள்ள வேண்டியது என் பொறுப்பு. இருவரும் ஒன்றிணைந்து சாதிப்போம். 

இதுதான் வீரர்களுக்கு ராகுல் டிராவிட் சொல்லும் சேதி. இந்திய அணி இப்படித்தான் செயல்படும் என்பதை வெளிப்படுத்தியுள்ளார். 

ஒரு புதிய பயணத்துக்கு இந்திய அணி மட்டுமல்ல, வீரர்களும் ரசிகர்களும் கூட தயாராக வேண்டும். இது புதிய பயணம். நம்பிக்கையுடன் முடிவுகளுக்காகக் காத்திருப்போம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com