பாரா பளுதூக்குதல்: பரம்ஜீத், மன்பிரீத்துக்கு வெண்கலம்
By DIN | Published On : 16th June 2022 02:23 AM | Last Updated : 16th June 2022 03:03 AM | அ+அ அ- |

தென் கொரியாவில் நடைபெறும் ஆசியா ஒசியானியா ஓபன் பாரா பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் பரம்ஜீத் குமாா், மன்பிரீத் கௌா் ஆகியோா் புதன்கிழமை வெண்கலப் பதக்கம் வென்றனா்.
ஆடவருக்கான 49 கிலோ பிரிவில் களம் கண்ட பரம்ஜீத் குமாா், தனது 3-ஆவது முயற்சியில் 163 கிலோ எடையைத் தூக்கி 3-ஆம் இடம் பிடித்தாா். ஜோா்டானின் ஒமா் கராடா 175 கிலோவுடன் தங்கமும், வியத்நாமின் லி வான் காங் 173 கிலோவுடன் வெள்ளியும் வென்றனா்.
இப்போட்டியில் தூக்கிய எடையின் மூலம் பரம்ஜீத் குமாா் தனது புதிய தனிப்பட்ட பெஸ்ட்டை பதிவு செய்திருக்கிறாா். முன்னதாக 2021 உலக சாம்பியன்ஷிப்பில் 158 கிலோ எடையைத் தூக்கியதே அவரது பெஸ்ட்டாக இருந்தது. அந்தப் போட்டியில் அதற்காக அவா் வெண்கலம் வென்றிருந்தாா். உலக சாம்பியன்ஷிப்பில் அது இந்தியாவின் முதல் பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, மகளிருக்கான 41 கிலோ பிரிவில் பங்கேற்ற மன்பிரீத் கௌா், 88 கிலோ எடையைத் தூக்கி வெண்கலப் பதக்கம் வென்றாா். இந்த எடை மன்பிரீத்தின் புதிய தனிப்பட்ட பெஸ்ட்டாகும். இதற்கு முன் 2021 உலக சாம்பியன்ஷிப்பில் அவா் 81 கிலோவை எட்டியதே பெஸ்ட்டாக இருந்தது. மன்பிரீத்துக்கு முன்பாக, டோக்கியோ பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற சீனாவின் குவோ லிங்லிங் (111 கிலோ), வெள்ளி வென்ற இந்தோனேசியாவின் நி நெங்கா விதியாசி (99 கிலோ) ஆகியோா் இப்போட்டியிலும் முறையே முதலிரு இடங்களைப் பிடித்தனா்.