நெதர்லாந்தை வெளுத்து வாங்கிய இங்கிலாந்து : மீண்டும் உலக சாதனை
By DIN | Published On : 17th June 2022 06:47 PM | Last Updated : 17th June 2022 07:06 PM | அ+அ அ- |

மலான் (கோப்புப் படம்)
நெதர்லாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணி 498 ரன்கள் குவித்து புதிய உலக சாதனை படைத்துள்ளது.
இங்கிலாந்து - நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று தொடங்கியுள்ளது.
நெதர்லாந்தின் ஆம்ஸ்டெல்வீன் நகரில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.
இதனையடுத்து, இங்கிலாந்து அணி தனது முதல் பேட்டிங்கை தொடங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேசன் ராய் மற்றும் பில் சால்ட் களமிறங்கினர். ஜேசன் ராய் 7 பந்துகளில் 1 ரன் மட்டும் எடுத்து ஆட்டமிழந்தார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த பில் சால்ட் மற்றும் டேவிட் மலன் நெதர்லாந்து பந்து வீச்சாளர்களை திணறடித்தனர். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி 200 ரன்களுக்கும் அதிகமாக குவித்தது. அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் சதமடித்து அசத்தினர். பில் சால்ட் 93 பந்துகளில் 122 ரன்கள் குவித்தார். அதில் 14 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். 109 பந்துகளை எதிர்கொண்ட டேவிட் மலன் 125 ரன்கள் குவித்தார். அதில் 9 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.
பில் சால்ட் ஆட்டமிழந்த பிறகு களமிறங்கிய ஜாஸ் பட்லர் ருத்ர தாண்டவம் ஆடினார். புயல் வேக ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் நெதர்லாந்து வீரர்களின் பந்துவீச்சை மைதானத்தின் நாலாபுறங்களிலும் பவுண்டரிகளாகவும், சிக்ஸர்களாகவும் பறக்கவிட்டார். அதிரடியாக விளையாடிய அவர் தனது 47வது பந்தில் சதமடித்து அசத்தினார்.
இங்கிலாந்து அணியின் கேப்டன் மார்கன் வந்த வேகத்தில் நடையைக் கட்டினாலும் அணியின் ரன் வேகம் மட்டும் குறையவே இல்லை.
ஏற்கனவே நெதர்லாந்து பந்துவீச்சாளர்களை பட்லர் திணறடித்தது போதாது என லயம் லிவிங்ஸ்டன் தனது பங்கிற்கு ஒரு காட்டு காட்டினார். இங்கிலாந்து அணியின் ரன் ஜெட் வேகத்தில் பயணித்தது. அதிரடியாக ஆடிய பட்லர் 162 ரன்கள் குவித்தார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் 14 சிக்ஸர்கள் அடங்கும். மறுமுனையில் அதிரடியாக ஆடிய லயம் லிசிங்ஸ்டன் அரைசதம் அடித்து அசத்தினார். அவர் வெறும் 22 பந்துகளில் 66 ரன்கள் குவித்து அசத்தினார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸ்ர்கள் அடங்கும்.
இங்கிலாந்து அணி இதன்மூலம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 498 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் அந்த அணி புதிய உலக சாதனை ஒன்றையும் படைத்துள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணி 481 ரன்கள் குவித்ததே ஒரு அணி ஒரு நாள் போட்டியில் அதிகபட்சமாக ரன் குவித்த உலக சாதனையாக இருந்தது. இன்று அந்த சாதனை மீண்டும் இங்கிலாந்து அணியினாலேயே தகர்க்கப்பட்டுள்ளது.
நெதர்லாந்து தரப்பில் பீட்டர் சீலார் 2 விக்கெட்டுகளையும். லோகன் மற்றும் ஷேன் ஷ்னேட்டர் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர். 499 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி நெதர்லாந்து களமிறங்க உள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...