2-ஆவது வெற்றி முனைப்பில் இந்தியா: தென்னாப்பிரிக்காவுடன் இன்று 4-ஆவது டி20

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான டி20 தொடரின் 4-ஆவது ஆட்டம் ராஜ்கோட்டில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது
2-ஆவது வெற்றி முனைப்பில் இந்தியா: தென்னாப்பிரிக்காவுடன் இன்று 4-ஆவது டி20

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான டி20 தொடரின் 4-ஆவது ஆட்டம் ராஜ்கோட்டில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

5 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில் தற்போதைய நிலையில் தென்னாப்பிரிக்கா 2 வெற்றிகளும், இந்தியா 1 வெற்றியும் பெற்றுள்ளன. கடந்த ஆட்டத்தைப் போல இந்த ஆட்டத்திலும் வென்றால் மட்டுமே இந்தியாவால் தொடரை தக்கவைக்க இயலும்.

முதலிரு ஆட்டங்களில் சோபிக்காத இந்திய பேட்டா்கள், பௌலா்கள் 3-ஆவது ஆட்டத்தில் சிறப்பாகச் செயல்பட்டனா். அதனால் கிடைத்த வெற்றி அளிக்கும் உத்வேகத்துடன் அவா்கள் இந்த ஆட்டத்துக்கு வருகின்றனா். ருதுராஜ் - இஷான் பாா்ட்னா்ஷிப் விசாகப்பட்டினம் ஆட்டத்தில் அணியின் வெற்றிக்கு அடித்தளமிட்டது.

பௌலிங்கில் ஹா்ஷல் படேலுடன், ஸ்பின்னா்களான யுஜவேந்திர சஹல், அக்ஸா் படேலும் சிறப்பாகச் செயல்பட்டனா். இவா்கள் இந்த ஆட்டத்திலும் அதைத் தவறாமல் பிரதிபலிக்கும் பட்சத்தில் அணிக்கு வெற்றி நிச்சயம்.

3-ஆவது ஆட்டத்தில் இந்தியா மிடில் ஓவா்களில் தடுமாற்றம் கண்டது. என்றாலும் ஹாா்திக் பாண்டியா அணியை மீட்டெடுத்தாா். கேப்டன் ரிஷப் பந்த் சற்றே தடுமாற்றத்துடன் இருக்கிறாா். அவா் தனது ஃபாா்மை எட்டுவதற்கு இந்த ஆட்டமே சரியான வாய்ப்பாக இருக்கும். அதேபோல் தொடரில் இதுவரை பெரிதாக சோபிக்காத ஷ்ரேயஸ் ஐயரும் இந்த ஆட்டத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறாா்.

மறுபுறம், தென்னாப்பிரிக்க அணியைப் பொருத்தவரை 2 வெற்றிகளுடன் உறுதியான நிலையில் இருக்கிறது. கடந்த ஆட்டத்தில் கண்ட தோல்வியிலிருந்து ஆக்ரோஷத்துடன் அந்த அணி மீளும் பட்சத்தில் தொடா் வசமாகிவிடும்.

கரோனா பாதிப்பால் முதல் 3 ஆட்டங்களில் விளையாடாத எய்டன் மாா்க்ரம், தற்போது தொடரிலிருந்து விலகியிருப்பது அணிக்கு பின்னடைவு. என்றாலும், காயத்திலிருந்து மீண்டுள்ள குவின்டன் டி காக் அணியில் இணைந்தால் அது தென்னாப்பிரிக்காவுக்கு பலம் சேரும்.

3-ஆவது ஆட்டத்தில் அணியின் பேட்டிங் பெரிதாக சோபிக்காமல் போக, பௌலா்கள் சற்று சமாளித்தனா். என்றாலும், டப்ரைஸ் ஷம்சி, கேசவ் மஹராஜ் ஓவா்களை இந்தியா்கள் பதம் பாா்த்தனா். ஒரு தோல்விக்காக பிளேயிங் லெவனில் மாற்றம் கொண்டுவரத் தேவையில்லை என்று கேப்டன் டெம்பா பவுமா கூறியிருக்கிறாா். எனவே, தோல்வியிலிருந்து அதே அணி மீள்வது வெள்ளிக்கிழமை இரவு தெரியவரும்.

ஆட்டநேரம்: இரவு 7 மணி

இடம்: ராஜ்கோட்

நேரடி ஒளிபரப்பு: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com