மாநில அளவிலான கைப்பந்துப் போட்டி: சென்னை, கோபி அணிகள் முதலிடம்
By DIN | Published On : 21st June 2022 04:58 AM | Last Updated : 21st June 2022 05:02 AM | அ+அ அ- |

திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் ஆடவர் பிரிவில் சென்னை அணியும், மகளிர் பிரிவில் கோபிசெட்டிப்பாளையம் அணியும் முதலிடம் பிடித்தன.
மன்னார்குடி அருகே வடுவூரில் உள்ள கைப்பந்து கழகமும், கலைமாமணி பூபாலன் நினைவு கைப்பந்து பயிற்சி நாற்றங்கால் அறக்கட்டளையும் இணைந்து இப்போட்டியை ஜூன் 17 முதல் 19-ஆம் தேதி வரை இரவு நேர மின்னொளியில் நடத்தின.
இதில், ஆடவர் பிரிவில், சென்னையைச் சேர்ந்த சேவை வரித் துறை, வருமான வரித் துறை, சுங்க வரித் துறை, இந்தியன் வங்கி ஆகிய நான்கு அணிகளும், மகளிர் பிரிவில், சென்னை எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம், தமிழ்நாடு காவல் துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பி.கே.ஆர். கைப்பந்து கழகம் ஆகிய அணிகள் பங்கேற்றன.
லீக் முறையில் நடைபெற்ற இப்போட்டியில் தலா 6 ஆட்டங்கள் நடைபெற்றன. இறுதிப்போட்டியில், ஆடவர் பிரிவில் சென்னை சுங்க வரித்துறை அணி - சேவை வரித் துறை அணியை வென்று கோப்பையை கைப்பற்றியது. மகளிர் பிரிவில் கோபிசெட்டிப்பாளையம் பி.கே.ஆர். அணி - சென்னை எஸ்ஆர்எம் அணியை வீழ்த்தி கோப்பையை தனதாக்கியது.
ஆடவர் பிரிவில் 3-ஆம் இடத்தை இந்தியன் வங்கியும், 4-ஆம் இடத்தை வருமான வரித் துறையின் பெற்றன.
மகளிர் பிரிவில் 3-ஆம் இடத்தை தமிழ்நாடு காவல் துறையும், 4-ஆம் இடத்தை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் பெற்றன.
ஆடவர் பிரிவில் முதலிடம் பெற்ற சென்னை சுங்கத்துறை அணிக்கு விளையாட்டு ஆர்வலர் பாரி பூபாலன், தொழிலதிபர் அன்புவேலன், முன்னாள் மாநில விளையாட்டு வீரர் பாஸ்கரன் ஆகியோர் கோப்பை மற்றும் பரிசுத் தொகையை வழங்கினர். மகளிர் பிரிவில் முதலிடம் பெற்ற பி.கே.ஆர். கைப்பந்து கழகத்துக்கு திருவாரூர் சட்டப்பேரவை உறுப்பினர் பூண்டி.கே. கலைவாணன் கோப்பை மற்றும் பரிசுத் தொகையை வழங்கினார்.
முன்னதாக, இருபாலருக்குமான இறுதிப் போட்டியை தஞ்சாவூர் மக்களவை உறுப்பினர் எஸ்.எஸ். பழநிமாணிக்கம் தொடங்கிவைத்தார். வடுவூர் கைப்பந்து கழகத் தலைவர் எஸ். நாச்சியப்பன், செயலாளர் ஜி. தமிழ்செல்வன், பொருளாளர் சி. ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போட்டியை, வடுவூர் விளையாட்டு அகாதெமி அறக்கட்டளை நிர்வாகிகள் ராச. ராசேந்திரன், ஆர். சாமிநாதன், கமலக்கண்ணன், அருட்செல்வன், நீலமேகம், பாபுஜி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.