விம்பிள்டனில் வாகை சூடி விண்ணைத் தொடுவாரா செரீனா வில்லியம்ஸ்?

ஒரு வருடமாக விளையாடாமல் போனதால் தரவரிசையில் 1204 இடத்துக்கு இறங்கியுள்ளார் செரீனா.
விம்பிள்டனில் வாகை சூடி விண்ணைத் தொடுவாரா செரீனா வில்லியம்ஸ்?

விம்பிள்டன் போட்டியில் செரீனா வில்லியம்ஸுடன் முதல் சுற்றில் மோதப்போகும் வீராங்கனையின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் ஒரு வருடத்துக்குப் பிறகு மீண்டும் போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கியுள்ளார். 

2021 பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் செரீனா வில்லியம்ஸ், 4-வது சுற்றில் தோல்வியடைந்தார். பிறகு முதல் சுற்று ஆட்டத்தின்போது காயம் ஏற்பட்டதால் விம்பிள்டன் போட்டியிலிருந்து விலகினார். இந்தத் தோல்விகளால் செரீனாவின் 24-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்துக்கான காத்திருப்பு மீண்டும் தொடர்கிறது.

இதுவரை 23 பட்டங்களை வென்றுள்ள செரீனா, இன்னும் ஒரு கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்லும் பட்சத்தில் மகளிர் டென்னிஸ் வரலாற்றில் அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்றவரான மார்க்ரெட் கோர்ட்டின் சாதனையை சமன் செய்வார். ஆனால் அந்த ஒரு பட்டத்துக்காக மிகவும் போராடிக் கொண்டிருக்கிறார். கடைசியாக, 2017-ல் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார். அதன்பிறகு விளையாடிய நான்கு கிராண்ட் ஸ்லாம் போட்டிகளின் இறுதிச்சுற்றுகளிலும் தோல்வியடைந்தார். 

ஏழு முறை விம்பிள்டன் பட்டங்களை வென்றுள்ள செரீனா, கடைசியாக 2016-ல் விம்பிள்டனில் ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்றார். குழந்தை பிறந்த பிறகு 2018, 2019 விம்பிள்டன் போட்டிகளின் இறுதிச்சுற்று ஆட்டங்களுக்குத் தகுதியடைந்தார்.

கடந்த வருட விம்பிள்டன் போட்டியில் கலந்துகொண்ட பிறகு வேறு எந்த டென்னிஸ் போட்டியிலும் செரீனா பங்கேற்கவில்லை. சமீபத்தில் இங்கிலாந்தின் ஈஸ்ட்போர்ன் நகரில் நடைபெற்ற ராத்ஸே சர்வதேச டென்னிஸ் போட்டியில் இரட்டையர் பிரிவில் விளையாடினார். ஒரு வருட இடைவெளிக்குப் பிறகும் ஆர்வத்துடன் ராத்ஸே மற்றும் விம்பிள்டன் போட்டிகளில் பங்கேற்கும் செரீனா வில்லியம்ஸுக்கு சக டென்னிஸ் வீராங்கனைகள் பாராட்டு தெரிவித்துள்ளார்கள். 

ஒரு வருடமாக விளையாடாமல் போனதால் தரவரிசையில் 1204 இடத்துக்கு இறங்கியுள்ளார் செரீனா. விம்பிள்டன் 2022 போட்டியில் முதல் சுற்றில் தரவரிசையில் 113-வது இடத்தில் உள்ள பிரான்ஸின் ஹார்மனி டேன்-ஐ எதிர்கொள்கிறார். 

குழந்தை பிறந்த பிறகு வழக்கம் போல விளையாட ஆரம்பித்த செரீனா, தற்போது ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் விளையாட வந்துள்ளார். விம்பிள்டனில் அவர் பட்டம் வென்று சாதனை படைத்தால் டென்னிஸ் விளையாட்டின் மகத்தான சாதனையாகப் பாராட்டப்படும். பல இளம் வீராங்கனைகள் ஊக்கம் கொள்வார்கள். பல சாதனைகளைப் படைத்த செரீனா இன்னொருமுறை விண்ணைத் தொடுவாரா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com