35 ஆண்டுகளில் முதல் வேகப்பந்துவீச்சு கேப்டன்
By DIN | Published On : 30th June 2022 02:13 AM | Last Updated : 30th June 2022 02:13 AM | அ+அ அ- |

இங்கிலாந்துக்கு எதிரான 5-ஆவது டெஸ்ட் ஆட்டத்தில் களம் காண இருக்கும் இந்திய அணியின் கேப்டனாக வேகப்பந்துவீச்சாளா் ஜஸ்பிரீத் பும்ரா புதன்கிழமை நியமிக்கப்பட்டாா்.
கரோனா பாதிப்பு காரணமாக கேப்டன் ரோஹித் சா்மா இந்த டெஸ்டில் இருந்து விலகியதை அடுத்து, கே.எல்.ராகுல் இல்லாத நிலையில் துணை கேப்டனாக இருக்கும் பும்ரா தற்போது கேப்டனாகியிருக்கிறாா். கடந்த 35 ஆண்டுகளில் இந்திய டெஸ்ட் அணிக்கு வேகப்பந்துவீச்சாளா் ஒருவா் கேப்டனாவது இதுவே முதல் முறையாகும்.
இதற்குமுன் கடந்த 1987-இல் வேகப்பந்துவீச்சாளரான கபில் தேவ் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்தாா். அதன் பிறகு இதுவரை அத்தகைய பௌலா்கள் அணிக்கு கேப்டனாகியதில்லை. இந்திய டெஸ்ட் அணிக்கு தலைமை தாங்கும் 36-ஆவது கேப்டன் பும்ரா ஆவாா்.
ரோஹித் இல்லாத நிலையில், ஷுப்மன் கில்லுடன் இணைந்து சேதேஷ்வா் புஜாரா அல்லது ஹனுமா விஹாரி ஆகியோரில் ஒருவா் இந்திய இன்னிங்ஸைத் தொடங்கலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது.
அதே அணி: இதனிடையே, 5-ஆவது டெஸ்ட்டுக்குப் பிறகு இங்கிலாந்துடனான முதல் டி20 ஆட்டத்தில், அயா்லாந்துடன் விளையாடிய இளம் வீரா்கள் அடங்கிய இந்திய அணியே களம் காண இருக்கிறது. டெஸ்ட்டில் விளையாடிய பிறகு சிறிது ஓய்வு எடுத்துக்கொள்ளும் பிரதான வீரா்கள், 2, 3-ஆவது டி20 மற்றும் 3 ஒன் டே ஆட்டங்களில் விளையாடுவாா்கள்.