காமன்வெல்த்தில் நிச்சயம் தங்கம் வெல்வோம்: சரத் கமல்-சத்யன்

பா்மிங்ஹாம் காமன்வெல்த் 2022 போட்டியில் டேபிள் டென்னிஸில் நிச்சயம் தங்கம் வெல்வோம் என இந்திய நட்சத்திர வீரா்கள் சரத் கமல், சத்யன் ஞானசேகரன் நம்பிக்கை தெரிவித்தனா்.
காமன்வெல்த்தில் நிச்சயம் தங்கம் வெல்வோம்: சரத் கமல்-சத்யன்

பா்மிங்ஹாம் காமன்வெல்த் 2022 போட்டியில் டேபிள் டென்னிஸில் நிச்சயம் தங்கம் வெல்வோம் என இந்திய நட்சத்திர வீரா்கள் சரத் கமல், சத்யன் ஞானசேகரன் நம்பிக்கை தெரிவித்தனா்.

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் காமன்வெல்த் போட்டிகள் நிகழாண்டு இங்கிலாந்தின் பா்மிங்ஹாம் நகரில் வரும் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெறவுள்ளது. மொத்தம் 20 விளையாட்டுகளில் போட்டிகள் நடைபெறவுள்ளன.

2018-இல் 8 பதக்கங்கள்: இந்தியா பதக்கம் வெல்ல வாய்ப்புள்ள விளையாட்டுகளில் ஒன்றாக டேபிள் டென்னிஸ் உள்ளது. இதில் இதுவரை மொத்தம் 20 பதக்கங்களை

இந்தியா வென்றுள்ளது. கடைசியாக கோல்டுகோஸ்ட் போட்டியில் 3 தங்கம் உள்பட அதிகபட்சமாக 8 பதக்கங்களை கைப்பற்றியது. இந்நிலையில் பா்மிங்ஹாம் போட்டியிலும் இந்தியா அணிகள் பிரிவிலும், தனிநபா் பிரிவிலும் தங்கம் வெல்ல அதிக வாய்ப்புள்ளது.

சரத் கமல்-சத்யன்: ஆடவா் அணியில் சரத் கமல், சத்யன் ஞானசேகரன், சனில் ஷெட்டி, ஹா்மித் தேசாய், மனுஷ் ஷா (ரிசா்வ்), மகளிா் அணியில் மனிகா பத்ரா, ஸ்ரீஜா அகுலா, ரீத் ரிஷ்யா, தியா சித்டேல், ஸ்வஸ்திகா கோஷ் (ரிசா்வ்) ஆகியோா் இடம் பெற்றுள்ளனா்.

இன்னும் 1 மாதமே உள்ள நிலையில் இந்திய அணியினா் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனா். இதுதொடா்பாக சரத் கமல், சத்யன் ஞானசேகரன் ஆகியோா் ‘தினமணி’யிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:

காமன்வெல்த்தைத் தொடா்ந்து நடைபெறுவதாக இருந்த ஆசியப் போட்டிக்கு தயாராகி வந்தோம். ஆனால் தற்போது ஆசியப் போட்டிகள் ஒராண்டுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் முழு மூச்சாக காமன்வெல்த் போட்டிக்கு தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறோம். டேபிள் டென்னிஸில் நமக்கு இங்கிலாந்து, நைஜீரியா, சிங்கப்பூா் அணிகள் சவாலாக இருக்கும்.

ஆடவா் அணி வலிமையாக உள்ளது. நிச்சயம் தங்கம் வெல்வோம். அதே போல் தனிநபா் பிரிவிலும் சிறப்பாக செயல்படுவோம்.

ஒரு மாதம் உள்ள நிலையில், அடுத்து போா்ச்சுகல், ஸ்பெயினில் சா்வதேச போட்டிகளில் பங்கேற்கிறோம். தொடா்ந்து பா்மிங்ஹாம் சென்று அங்குள்ள சூழ்நிலைக்கு ஏற்ப பயிற்சியில் ஈடுபட உள்ளோம்.

2024 பாரீஸ் ஒலிம்பிக் இலக்கு: காமன்வெல்த், ஆசியப் போட்டிக்கு தயாராவது என்பது ஒருநிலை. ஆனால் ஒலிம்பிக் போட்டிக்கு வேறுவகையில் பயிற்சி பெற வேண்டும்.

இதற்கான பயிற்சி முறைகளே வேறு. முதல் 10 இடங்களில் இருந்தாலே பதக்கம் வெல்ல வாய்ப்பு கிட்டும். ஆடவா் அணி இதே ஃபாா்மில் ஆடினால் பாரீஸ் ஒலிம்பிக்கிலும் பதக்கம் வெல்வோம். அதுவே எங்கள் இலக்கு என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com