உலகளவில் அதிக சராசரி கொண்டுள்ள இந்திய வீரர்: பாபா இந்திரஜித் சாதனை

வேறு எந்த இந்திய வீரரை விடவும் அதிக சராசரி ரன்கள் எடுத்த வீரராக உள்ளார் இந்திரஜித்.
உலகளவில் அதிக சராசரி கொண்டுள்ள இந்திய வீரர்: பாபா இந்திரஜித் சாதனை

ரஞ்சி கோப்பைப் போட்டியில் சமீபத்தில் தொடர்ந்து இரு சதங்கள் அடித்த தமிழக வீரர் பாபா இந்திரஜித், சர்வதேச அளவில் அதிக சராசரி கொண்ட வீரர்களில் ஒருவராக உள்ளார்.

27 வயது இந்திரஜித், இதுவரை தமிழக அணிக்காக 55 முதல் தர ஆட்டங்களில் விளையாடி 11 சதங்களுடன் 3636 ரன்கள் எடுத்துள்ளார். இந்த வருட ரஞ்சி கோப்பைப் போட்டியில் 117, 127 என இரு சதங்கள் எடுத்து இரு ஆட்டங்களிலும் தமிழக அணி முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற உதவியுள்ளார்.

இந்நிலையில் 2016 முதல் முதல்தர கிரிக்கெட்டில் வேறு எந்த இந்திய வீரரை விடவும் அதிக சராசரி ரன்கள் எடுத்த வீரராக உள்ளார் இந்திரஜித். அதாவது குறைந்தது 25 ஆட்டங்களில் இடம்பெற்ற வீரர்களில் உலகளவில் 4- ம் இடம் பிடித்துள்ளார். ஆப்கானிஸ்தானின் பஹிர் ஷா, நியூசிலாந்தின் கான்வே, தென்னாப்பிரிக்காவின் ஒபஸ் பியனார் ஆகிய மூன்று வீரர்கள் மட்டுமே இந்திரஜித்தை விடவும் அதிக சராசரிகளைக் கொண்டுள்ளார்கள். மேலும் சமீபத்தில் நடைபெற்ற 50 ஓவர் விஜய் ஹசாரே போட்டியில் 4 அரை சதங்கள் எடுத்து தமிழக அணி இறுதிச்சுற்று வரை முன்னேற உதவினார். இதனால் ஐபிஎல் ஏலத்தில் கொல்கத்தா அணி, இந்திரஜித்தை ரூ. 20 லட்சத்துக்குத் தேர்வு செய்துள்ளது. 

உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து ரன்கள் குவிப்பதால் அடுத்ததாக இந்திய ஏ, இந்திய அணிகளுக்குத் தேர்வாகி இன்னும் பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்பது இந்திரஜித்தின் விருப்பம். 

2016 முதல் அதிக சராசரி கொண்ட பேட்டர்கள் (குறைந்தது 25 ஆட்டங்கள்)

பஹிர் ஷா - 29 ஆட்டங்கள் - 2554 ரன்கள் - 69.02 சராசரி
கான்வே - 44 ஆட்டங்கள் - 4105 ரன்கள் - 68.41 சராசரி
ஒபஸ் பியனார்  - 34 ஆட்டங்கள் - 2750 ரன்கள் - 67.07 சராசரி
இந்திரஜித் - 33 ஆட்டங்கள் - 2512 ரன்கள் - 66.10 சராசரி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com