விராட் கோலி 100 டெஸ்டுகள்: முக்கிய அம்சங்கள்

பாகிஸ்தானுக்கு எதிராக விராட் கோலி இதுவரை ஒரு டெஸ்டிலும் விளையாடியதில்லை.... 
விராட் கோலி 100 டெஸ்டுகள்: முக்கிய அம்சங்கள்

மகத்தான கிரிக்கெட் வீரரான விராட் கோலி தனது 100-வது டெஸ்டை மொஹலியில் விளையாடுகிறார். 

இதுவரை விளையாடிய 99 டெஸ்டுகளில் கோலி எடுத்த ரன்களும் சதங்களும் எவ்வாறு முக்கியத்துவம் பெறுகின்றன? புள்ளிவிவரங்களின் துணையுடன் 99 டெஸ்டுகளில் கோலியின் டெஸ்ட் வாழ்க்கையை அலசலாம்.

* 2008-ல் முதல் ஒருநாள் ஆட்டத்தையும் 2010-ல் முதல் டி20 ஆட்டத்தையும் விளையாடிய விராட் கோலி,  2011-ல் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக கிங்ஸ்டனில் முதல் டெஸ்டை விளையாடினார். 

* இதுவரை விளையாடிய 99 டெஸ்டுகளில் 7962 ரன்கள் எடுத்துள்ளார். 27 சதங்கள், 28 அரை சதங்கள். 14 முறை டக் அவுட். 24 சிக்ஸர்கள், 896 பவுண்டரிகள். 100-வது டெஸ்டை விளையாடும் 12-வது இந்திய வீரர் கோலி.

* மேற்கிந்தியத் தீவுகளில் முதல் 3 டெஸ்டுகளில் சுமாராக விளையாடிய கோலி, இந்தியாவில் (2011-ல் மே.இ. தீவுகளுக்கு எதிராக மும்பையில்) விளையாடிய முதல் டெஸ்டில் இரு அரை சதங்கள் எடுத்தார். 

* 2012-ல் தனது 8-வது டெஸ்டில் முதல் சதமடித்தார். ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் 6-ம் நிலை வீரராகக் களமிறங்கி சதமடித்தார். 

* இந்தியாவில் அடித்த முதல் சதம் - 2012-ல் தனக்குப் பிடித்தமான பெங்களூர் மைதானத்தில் நியூசிலாந்துக்கு எதிராக சதமடித்தார். 

* 2013-ல் சென்னையில் விளையாடிய முதல் டெஸ்டிலேயே சதமடித்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக. 

* சென்னையில் 4 டெஸ்டுகளில் விளையாடி 1 சதமும் 2 அரை சதங்களும் அடித்துள்ளார்.

* தன்னுடைய சொந்த ஊரான தில்லியில் 3 டெஸ்டுகளில் விளையாடியுள்ளார். அங்குக் கடைசியாக விளையாடிய டெஸ்டில் இரட்டை சதம் அடித்தார். 2017-ல் இலங்கைக்கு எதிராகத் தொடர்ச்சியாக இரு இரட்டைச் சதங்கள் அடித்துள்ளார். 

* ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக அதிகச் சதங்களை அடித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 7 சதங்களும் இங்கிலாந்து, இலங்கை அணிகளுக்கு எதிராக தலா 5 சதங்களும் அடித்துள்ளார். 

* இந்தியாவில் 44 டெஸ்டுகளும் இங்கிலாந்தில் 15 டெஸ்டுகளும் ஆஸ்திரேலியாவில் 13 டெஸ்டுகளும் விளையாடியுள்ளார். 

* இந்தியாவில் 13 சதங்களும் 12 அரை சதங்களும் அடித்துள்ளார். வெளிநாடுகளில் 55 டெஸ்டுகளில் விளையாடி 14 சதங்களும் 16 அரை சதங்களும் அடித்துள்ளார். 

* வெளிநாடுகளில் அதிக சதங்கள் அடித்தது, ஆஸ்திரேலியாவில். அங்கு 13 டெஸ்டுகளில் விளையாடி 6 சதங்களும் 4 அரை சதங்களும் அடித்துள்ளார். வங்கதேசத்தில் ஒரு டெஸ்டில் மட்டும் விளையாடியதால் அங்கு ஒரு சதமும் எடுத்ததில்லை. மேற்கிந்தியத் தீவுகளில் 9 டெஸ்டுகளில் விளையாடி 1 சதம் மட்டுமே எடுத்துள்ளார். 

* 2017, 2018 ஆகிய இரு ஆண்டுகளில் தலா 5 டெஸ்ட் சதங்கள் எடுத்துள்ளார். 2011, 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் சதமடித்ததில்லை. 2022 அப்படி ஏமாற்றக் கூடாது.

* 2016, 2017, 2018 என மூன்று ஆண்டுகளில் ரன் வேட்டை நிகழ்த்தியுள்ளார் கோலி. 2016-ல் 1215 ரன்களும் 2017-ல் 1059 ரன்களும் 2018-ல் 1322 ரன்களும் எடுத்துள்ளார். 

* 68 டெஸ்டுகளில் கேப்டனாக இருந்து 20 சதங்களுடன் 5864 ரன்கள் எடுத்துள்ளார். கேப்டனாக இல்லாத டெஸ்டுகளில் கோலியின் சராசரி - 41.13, கேப்டனாக விளையாடிய டெஸ்டுகளில் கோலியின் சராசரி - 54.80.

* இந்திய அணியின் முதல் இன்னிங்ஸில் 22 சதங்களும் 2-வது இன்னிங்ஸில் 5 சதங்களும் எடுத்துள்ளார். அரை சதங்கள் 2-வது இன்னிங்ஸில் தான் அதிகம். 15. (முதல் இன்னிங்ஸில் 13). 

* டெஸ்டின் 4-வது இன்னிங்ஸில் 2 சதங்களும் 7 அரை சதங்களும் எடுத்துள்ளார். 

* 2016-ல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக நார்த் சவுண்டில் முதல் இரட்டைச் சதமெடுத்தார். மொத்தமாக 7 இரட்டைச் சதங்கள் எடுத்துள்ளார். கடைசியாக 2019-ல் புணேவில் தெ.ஆ. அணிக்கு எதிராக இரட்டைச் சதமெடுத்தார் (254* ரன்கள்). மே.இ. தீவுகள், நியூசிலாந்து, இங்கிலாந்து, வங்கதேசம், இலங்கை, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு எதிராக இரட்டைச் சதங்களை எடுத்துள்ளார். இந்தியாவில் 6 இரட்டைச் சதங்கள் எடுத்துள்ளார். 

* 2019 நவம்பர் 23 அன்று வங்கதேசத்துக்கு எதிராக கொல்கத்தா ஈடன் கார்டன்ஸில் நடைபெற்ற டெஸ்டில் 136 ரன்கள் எடுத்தார் கோலி. அது அவருடைய 70-வது சதம். 27-வது டெஸ்ட் சதம். அடுத்த இரண்டே கால் வருடங்களில், கடந்த 15 டெஸ்டுகளில் கோலியால் ஒரு சதமும் எடுக்க முடியவில்லை. இதனால் 28-வது டெஸ்ட் சதத்தை தனது 100-வது டெஸ்டில் கோலி அடிக்கவேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு. 

* 2007க்குப் பிறகு இந்தியாவும் பாகிஸ்தானும் டெஸ்ட் கிரிக்கெட்டில் மோதுவது கிடையாது. இதனால் பாகிஸ்தானுக்கு எதிராக விராட் கோலி இதுவரை ஒரு டெஸ்டிலும் விளையாடியதில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com