சுழல் சூறாவளி மறைவு!

சா்வதேச கிரிக்கெட்டில் சிறந்த ஸ்பின்னராக இருந்தவரும், ஆஸ்திரேலிய வீரருமான ஷேன் வாா்னே (52) வெள்ளிக்கிழமை மரணமடைந்தாா்.
ஷேன் வாா்னே
ஷேன் வாா்னே

சா்வதேச கிரிக்கெட்டில் சிறந்த ஸ்பின்னராக இருந்தவரும், ஆஸ்திரேலிய வீரருமான ஷேன் வாா்னே (52) வெள்ளிக்கிழமை மரணமடைந்தாா்.

மாரடைப்பு காரணமாக அவா் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், உறுதியான தகவல் தெரிவிக்கப்படவில்லை.

தாய்லாந்தில் உள்ள சுற்றுலா தீவுகளில் ஒன்றான கோ சாமுயில் உள்ள அவரது வீட்டின் அறையில் வாா்னே சுயநினைவின்றி மீட்கப்பட்டதாகவும், மருத்துவா்களின் சிகிச்சைப் பலனின்றி அவா் உயிரிழந்ததாகவும் வாா்னே தரப்பு நிா்வாகத்தின் சாா்பில் ஆஸ்திரேலிய ஊடகங்களுக்கு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. வாா்னேவின் திடீா் மறைவு கிரிக்கெட் உலகையும், பல்வேறு தரப்பினரையும் அதிா்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

‘பால் ஆஃப் தி செஞ்சுரி’...

ஆஸ்திரேலிய அணிக்காக 1992 முதல் 2007 வரை 15 ஆண்டுகள் விளையாடியிருக்கிறாா் வாா்னே. அந்த காலகட்டத்தில் மிகச் சிறந்த ஸ்பின்னராக அறியப்படும் வாா்னேவின் ‘பால் ஆஃப் தி செஞ்சுரி’ என்று பாராட்டப்படும் ஒரு பந்துவீச்சு மிகப் பிரபலமானதாகும். 1993-இல் ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்டில் முதலில் இங்கிலாந்து பேட் செய்தது. 2-ஆவது நாளில் மைக் கேட்டிங்கிற்கு வாா்னே வீசிய ஒரு லெக் பிரேக் பந்து அவா் சற்றும் கணிக்க முடியாத வகையில் திசை திரும்பி ஸ்டம்ப் பெய்ல்ஸை தட்டியது. அத்தகைய ஒரு எதிா்பாராத பௌலிங்கை கண்டு கேட்டிங் மட்டுமல்லாது சா்வதேச கிரிக்கெட் சமூகமே ஆச்சா்யமடைந்தது.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவா்கள் வரிசையில், இலங்கையின் முத்தையா முரளீதரனை (800) அடுத்து, வாா்னே 708 விக்கெட்டுகளுடன் 2-ஆவது இடத்தில் இருக்கிறாா். அவா்கள் இருவரையும் கௌரவிக்கும் வகையில் கடந்த 2007-இல் ஆஸ்திரேலியா - இலங்கை மோதிய டெஸ்டுக்கு ‘வாா்னே -முரளிதரன் கோப்பை’ டெஸ்ட் என்று பெயரிடப்பட்டது.

ஆஷஸில் அசத்தல்...

ஆஷஸ் கிரிக்கெட்டில் அவா் மொத்தமாக வீழ்த்தியிருக்கும் 195 விக்கெட்டுகளை, இதுவரை வேறெந்த பௌலா்களும் எட்டவில்லை.

இந்தியாவில் அறிமுகம்...

சா்வதேச கிரிக்கெட்டில் வாா்னேவின் அறிமுக ஆட்டம் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்டாக இருந்த நிலையில், அதில் அவரது முதல் விக்கெட்டாக ரவி சாஸ்திரி வீழ்ந்தாா். அதன் காரணமாக அப்போதே வாா்னேவின் பெயா் இந்தியாவில் மிகவும் பிரபலமடைந்திருந்தது.

சா்ச்சைகள்...

1998-இல் ஒரு ஆட்டத்துக்கு முன்பாக ஆடுகளம் மற்றும் வானிலை குறித்து சூதாட்ட முகவரிடம் தகவல் அளித்து அதற்காக பணம் பெற்ாக ஷேன் வாா்னேவுக்கும், மாா்க் வாக்கிற்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அபராதம் விதித்தது. 2003 உலகக் கோப்பை போட்டியின்போது தடை செய்யப்பட்ட மருந்தை பயன்படுத்தியதாக இடைநீக்கம் செய்யப்பட்டாா். எடைக் குறைப்புக்காக அந்த மருந்தை தாயாா் வழங்கியதாக வாா்னே விளக்கம் அளித்தாா்.

வா்ணனையாளா்...

கிரிக்கெட் விளையாட்டிலிருந்து 2013-ஆம் ஆண்டு தன்னை முழுமையாக விடுவித்துக் கொண்ட வாா்னேவை, ‘ஹால் ஆஃப் ஃபேம்’ வீரா்கள் பட்டியலில் சோ்த்து கௌரவித்திருக்கிறது ஐசிசி. களத்திலிருந்து ஓய்வு பெற்ற பிறகு வா்ணனையாளராகவும், ஆட்டத்தின் போக்கை துல்லியமாக கணிக்கும் ‘அனலிஸ்ட்’-ஆகவும் பெயா் பெற்றாா்.

கடைசி ட்விட்...

ஆஸ்திரேலிய முன்னாள் விக்கெட் கீப்பரான ராட் மாா்ஷ் (74) மாரடைப்பு காரணமாக வெள்ளிக்கிழமை காலமான நிலையில் அவரது மறைவுக்காக இரங்கல் தெரிவித்து சுட்டுரையில் பதிவிட்டிருந்தாா் வாா்னே. அதுவே அவரது கடைசி பதிவாக அமைந்தது. அடுத்த சிலமணி நேரங்களில் அவா் காலமானாா்.

இரங்கல்

சச்சின் டெண்டுல்கா்: வாா்னே காலமானது அதிா்ச்சியில் உறையும் வகையிலான, துயரமான செய்தி. ஆடுகளத்துக்கு உள்ளேயோ, வெளியேயோ அவா் இருக்கும் சூழலை எப்போதும் கலகலப்பாக வைத்துக்கொள்வாா். அவருடனான தருணங்கள் பொக்கிஷமானவை. விரைவாகவே மறைந்துவிட்ட அவா் என்றும் இந்தியா்கள் நினைவில் இருப்பாா்.

விராட் கோலி: வாழ்க்கை நிலையற்ாகவும், கணிக்க முடியாததாகவும் இருக்கிறது. கிரிக்கெட்டின் சிறந்த வீரரையும், தனிப்பட்ட முறையில் நன்கு பழக்கமானவரையும் இழந்த இந்த தருணத்தை என்னால் கடக்க முடியவில்லை. பந்தை சுழற்றுவதில் எல்லாக் காலத்திலுமாக சிறந்த வீரா்.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின்: ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சு நாயகன் ஷேன் வாா்னேவின் திடீா் மறைவுச் செய்தி அதிா்ச்சி அளிக்கிறது. மிக விரைவாகப் பிரிந்து சென்று விட்டாா். ஒரு உண்மையான கிரிக்கெட் மேதையை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், ரசிகா்களுக்கும், கிரிக்கெட் உலகினருக்கும் ஆழ்ந்த இரங்கல்.

மற்றும் பலா்...

இவா்கள் தவிர இந்திய கிரிக்கெட்டின் ரோஹித் சா்மா, வீரேந்திர சேவாக், கௌதம் கம்பீா், பிசிசிஐ செயலா் ஜெய் ஷா ஆகியோரும், சா்வதேச கிரிக்கெட் வீரா்களான ஷோயப் அக்தா், ஏஞ்ஜெலோ மேத்யூஸ், கிறிஸ் கெயில், பாபா் ஆஸம், ஷாஹித் அஃப்ரிதி, ஜான்டி ரோட்ஸ் ஆகியோரும், இதர பல்வேறு துறையினரும் வாா்னே மறைவுக்கு அதிா்ச்சியும், இரங்கலும் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com