மே.இ. தீவுகள் முதல் இன்னிங்ஸில் முன்னிலை: 9 மணி நேரம் விளையாடி இங்கிலாந்தை வெறுப்பேற்றி சதமடித்த போனர்

1 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் சதமடித்து அசத்தினார் போனர்...
மே.இ. தீவுகள் முதல் இன்னிங்ஸில் முன்னிலை: 9 மணி நேரம் விளையாடி இங்கிலாந்தை வெறுப்பேற்றி சதமடித்த போனர்

முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 311 ரன்கள் எடுத்தது. 

மேற்கிந்தியத் தீவுகள் அணி, முதல் இன்னிங்ஸில் 282 ரன்களுக்கு 7-வது விக்கெட்டை இழந்தபோது இங்கிலாந்து ஒரு நம்பிக்கை ஏற்பட்டது. எப்படியாவது முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்று விடலாம் என்று. ஆனால் சதமடித்ததுடன் 3-ம் நாளின் கடைசியில் தனது அணியை நல்ல நிலைமைக்குக் கொண்டு வந்த பிறகே ஆட்டமிழந்தார் போனார். 3-ம் நாள் முடிவில் முதல் இன்னிங்ஸில் மே.இ. தீவுகள் அணி ஒரு விக்கெட் மீதமிருக்க, 62 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

மேற்கிந்தியத் தீவுகளில் 3 டெஸ்டுகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது இங்கிலாந்து அணி. நார்த் சவுண்டில் முதல் டெஸ்ட் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது இங்கிலாந்து. அந்த அணி முதல் இன்னிங்ஸில் 100.3 ஓவர்களில் 311 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பேர்ஸ்டோ 140 ரன்கள் எடுத்துக் கடைசியாக ஆட்டமிழந்தார். ஜேடன் சீல்ஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

பிறகு பேட்டிங் செய்த மே.இ. தீவுகள் அணி, 2-ம் நாள் முடிவில் 66.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்தது. போன்னர் 34, ஹோல்டர் 43 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். கைவசம் 6 விக்கெட்டுகள் இருந்த நிலையில் 2-ம் நாள் முடிவில் 109 ரன்கள் பின்தங்கியிருந்தது மே.இ. தீவுகள் அணி.

ஹோல்டர் 45, ஜோஷுவா ட சில்வா 32 ரன்கள் எடுத்து போனருக்கு நல்ல இணையாக விளங்கினார்கள். 9 மணி நேரம் விளையாடி 1 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் சதமடித்து அசத்தினார் போனர். இது அவருடைய 2-வது டெஸ்ட் சதம். 3-ம் நாளின் இறுதியில் வீராசாமி பெருமாள் நன்கு விளையாடி 26 ரன்களுடன் களத்தில் உள்ளார். 355 பந்துகளை எதிர்கொண்டு 123 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் போனர். அவருடைய சதத்தால் முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றது மே.இ. தீவுகள் அணி. 3-ம் நாளில் 90.1 ஓவர்கள் வரை விளையாடினாலும் 171 ரன்களே எடுத்துள்ளார்கள் மே.இ. தீவுகள் பேட்டர்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com