பாக். போராட்டம் வீண் போகவில்லை: டிராவில் முடிந்தது கராச்சி டெஸ்ட்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் ஆட்டத்தில் பாகிஸ்தான் 172 ஓவர்களுக்கு பேட் செய்து ஆட்டத்தை டிரா செய்துள்ளது.
பாக். போராட்டம் வீண் போகவில்லை: டிராவில் முடிந்தது கராச்சி டெஸ்ட்


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் ஆட்டத்தில் பாகிஸ்தான் 172 ஓவர்களுக்கு பேட் செய்து ஆட்டத்தை டிரா செய்துள்ளது.

பாகிஸ்தான், ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் ஆட்டம் கராச்சியில் நடைபெற்றது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 557 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

ஆனால், பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்ஸில் 148 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 408 ரன்கள் முன்னிலைப் பெற்ற ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங் செய்து 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 97 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. 

இதன்மூலம், பாகிஸ்தான் வெற்றிக்கு 506 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டன.

நம்பிக்கையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் 4-ம் நாள் ஆட்டநேர முடிவில் 82 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்திருந்தது. அப்துல்லா ஷஃபிக் 77 ரன்களுடனும், பாபர் அஸாம் 102 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

கடைசி நாள் ஆட்டத்தை ஆஸ்திரேலிய அணி நம்பிக்கையுடன் எதிர்கொண்டது. அதற்குப் பலனாக ஷஃபிக் 96 ரன்களுக்கு பேட் கம்மின்ஸ் வேகத்தில் ஆட்டமிழந்தார். இக்கட்டான நேரத்தில் 305 பந்துகளை எதிர்கொண்ட ஷஃபிக் அணிக்கு மிகப் பெரிய பங்காற்றினார். இதன்பிறகு, ஃபவாத் அலாம் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

பின்னர், பாபர் அஸாமும், முகமது ரிஸ்வானும் மீண்டுமொரு சிறப்பான பாட்னர்ஷிப்பை அமைத்தனர். இந்த இணையும் 40 ஓவர்களுக்கு மேல் தாக்குப்பிடித்து ஆஸ்திரேலியாவை சோதித்தது.

பாபர் அஸாம் இரட்டைச் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் 196 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஃபஹீம் அஷ்ரஃப் முதல் பந்திலேயே ஆட்டமிழக்க ஆட்டத்தில் விறுவிறுப்பு அதிகரித்தது.

ஆனால், ரிஸ்வான் தாக்குப்பிடித்து விளையாட ஆஸ்திரேலியாவின் வெற்றி வாய்ப்பு குறையத் தொடங்கியது. எனினும், நாதன் லயான் தனது சுழலில் சஜித் கானை வீழ்த்தினார். இருந்தபோதிலும் நௌமன் சிறப்பான தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினார்.

ரிஸ்வான் ஆட்டம் முடிவதற்கு ஒரு ஓவருக்கு முன்பாக தனது சதத்தை எட்டினார். கடைசி 3 விக்கெட்டுகளை ஆஸ்திரேலியாவால் வீழ்த்த முடியவில்லை.

171.4 ஓவர்கள் பேட்டிங் செய்து அசத்திய பாகிஸ்தான் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 443 ரன்கள் குவித்து ஆட்டத்தை டிரா செய்தது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரிஸ்வான் 177 பந்துகளில் 104 ரன்களும், நௌமன் அலி 18 பந்துகளை எதிர்கொண்டு ரன் ஏதும் எடுக்காமலும் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com