4-வது இன்னிங்ஸில் மகத்தான பேட்டிங்: 196 ரன்களுக்கு ஆட்டமிழந்த பாகிஸ்தான் கேப்டன்

425 பந்துகளை எதிர்கொண்டு, 4-வது இன்னிங்ஸில் அதிகப் பந்துகளை எதிர்கொண்ட பேட்டர்களில் 4-ம் இடம் பிடித்துள்ளார். 
4-வது இன்னிங்ஸில் மகத்தான பேட்டிங்: 196 ரன்களுக்கு ஆட்டமிழந்த பாகிஸ்தான் கேப்டன்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டின் 4-வது இன்னிங்ஸில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம் 196 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 3 ஒருநாள், 1 டி20 என மூன்று தொடர்களிலும் விளையாடுகிறது ஆஸ்திரேலிய அணி. டெஸ்ட் தொடர் மார்ச் 4 அன்று தொடங்கியது. ஒருநாள் தொடர் மார்ச் 29 அன்று தொடங்குகிறது. டி20 ஆட்டம் ஏப்ரல் 5 அன்று நடைபெறுகிறது. முதல் டெஸ்ட், ஒருநாள் தொடர், டி20 ஆட்டம் ஆகியவை ராவல்பிண்டியிலும் கராச்சி, லாகூரில் தலா ஒரு டெஸ்டும் நடைபெறுகின்றன. 2019 ஆஷஸுக்குப் பிறகு முதல்முறையாக வெளிநாட்டில் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது ஆஸ்திரேலிய அணி. 1998-ல் பாகிஸ்தானுக்கு வந்த மார்க் டெய்லர் தலைமையிலான ஆஸி. அணி, டெஸ்ட் தொடரை 1-0 என வென்றது. பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளும் மோதும் டெஸ்ட் தொடருக்கு பெனாட் - காதிர் கோப்பை எனப் பெயரிடப்பட்டுள்ளது. ராவல்பிண்டியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் டிரா ஆனது.

கராச்சியில் பாகிஸ்தான் - அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்புக்கு 557 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது ஆஸ்திரேலியா. உஸ்மான் கவாஜா 160, ஸ்மித் 72, அலெக்ஸ் கேரி 93 ரன்கள் எடுத்தார்கள். பேட் கம்மின்ஸ் 34, ஸ்வெப்சன் 15 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். ஆசியாவில் ஆஸ்திரேலிய அணியின் 6-வது பெரிய ஸ்கோர் இது. 

முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி பேட்டர்கள், ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறினார்கள். ஒருவராலும் 40 ரன்னைத் தொட முடியாமல் போனது. கேப்டன் பாபர் ஆஸம் அதிகபட்சமாக 36 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் அணி கடைசி விக்கெட்டுக்கு 30 ரன்கள் சேர்த்தது. ஸ்டார்க் 3 விக்கெட்டுகளும் ஸ்வெப்சன் 2 விக்கெட்டுகளும் எடுத்தார்கள்.

408 ரன்கள் முன்னிலை பெற்று பாகிஸ்தானை ஃபாலோ ஆன் செய்த ஆஸ்திரேலிய அணி, 2-வது இன்னிங்ஸில் பேட்டிங் செய்ய முன்வந்தது. ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்ஸில் 22.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 97 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. லபுஷேன் 44, கவாஜா 44* ரன்கள் எடுத்தார்கள். இதனால் 2-வது டெஸ்டை வெற்றி பெற பாகிஸ்தான் அணிக்கு 506 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

பாகிஸ்தான் அணி 4-ம் நாள் முடிவில் 82 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்தது. அப்துல்லா ஷஃபிக் 226 பந்துகளில் 71 ரன்களும் பாபர் ஆஸம் 197 பந்துகளில் 102 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தார்கள்.

5-ம் நாளன்றும் பாகிஸ்தான் பேட்டர்கள் நம்பிக்கையுடன் விளையாடி ஆஸி. அணிக்கு அழுத்தம் கொடுத்தார்கள். 92-வது ஓவரின் முடிவில் பாபர் - அப்துல்லா கூட்டணி 200 ரன்களை எட்டியது. சதமடிக்க இருந்தபோது கம்மின்ஸ் பந்தில் 96 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் அப்துல்லா ஷஃபிக். மதிய உணவு இடைவேளையின்போது பாகிஸ்தான் அணி 3 விக்கெட் இழப்புக்கு 254 ரன்களை எடுத்திருந்தது. பாபர் ஆஸம் 133, ஃபவாத் அலாம் 3 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தார்கள். 

மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு ஃபவாத் அலாம் 9 ரன்களில் கம்மின்ஸ் பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 311 பந்துகளில் 150 ரன்களைக் கடந்தார் பாபர் ஆஸம். இதன்பிறகு பாபருடன் ஜோடி சேர்ந்த முகமது ரிஸ்வான் ஓர் அற்புதமான கூட்டணியை உருவாக்கினார். 

பாபர் ஆஸம் 161 ரன்களில் இருந்தபோது அடுத்தடுத்த பந்துகளில் கொடுத்த இரு கேட்சுகளை ஆஸி. ஃபீல்டர்கள் நழுவவிட்டார்கள். 133-வது ஓவரில் 4-வது இன்னிங்ஸில் 300 ரன்களைக் கடந்தது பாகிஸ்தான் அணி. தேநீர் இடைவேளையின்போது பாகிஸ்தான் அணி, 4 விக்கெட் இழப்புக்கு 310 ரன்கள் எடுத்தது. பாபர் ஆஸம் 168, ரிஸ்வான் 14 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். இதனால் ஆட்டத்தின் கடைசிப் பகுதியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற 36 ஓவர்களில் 196 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. ஆஸி. அணிக்கு 6 விக்கெட்டுகள் தேவை. 

186 ரன்கள் எடுத்தபோது, 4-வது இன்னிங்ஸில் அதிக ரன்கள் எடுத்த கேப்டன் என்கிற சாதனையைப் படைத்தார் பாபர் ஆஸம். அதற்கு முன்பு இங்கிலாந்தின் ஆதர்டன் 1995-ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 185 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்ததே சாதனையாக இருந்தது. மேலும் 4-வது இன்னிங்ஸில் 400 பந்துகளை எதிர்கொண்ட 4-வது பேட்டர் என்கிற பெருமையையும் அவர் அடைந்தார். ஆதர்டன் அதே ஆட்டத்தில் 492 பந்துகளை எதிர்கொண்டதே உலக சாதனையாக உள்ளது. 

106 பந்துகளில் அரை சதமெடுத்தார் ரிஸ்வான். ஆட்டத்தின் கடைசிக்கட்டத்தில் பாகிஸ்தானின் வெற்றிக்கு 21 ஓவர்களில் 134 ரன்கள் தேவைப்பட்டன. இரட்டைச் சதமெடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பாபர் ஆஸம், எதிர்பாராத விதத்தில் 196 ரன்களுக்கு லயன் பந்தில் ஆட்டமிழந்தார். டெஸ்ட் வரலாற்றில் 4-வது இன்னிங்ஸில் 7-வது அதிக ரன்களை எடுத்து சாதனை படைத்தார். மேலும் 425 பந்துகளை எதிர்கொண்டு, 4-வது இன்னிங்ஸில் அதிகப் பந்துகளை எதிர்கொண்ட பேட்டர்களில் 4-ம் இடம் பிடித்துள்ளார். 

பாகிஸ்தான் அணி 163 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 406 ரன்கள் எடுத்துள்ளது. ரிஸ்வான் 79 ரன்களுடனும் சஜித் கான் 1 ரன்னுடனும் களத்தில் உள்ளார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com