செஸ் ஒலிம்பியாட்: ‘சிறப்பாக நடத்துவோம்’
By DIN | Published On : 17th March 2022 12:38 AM | Last Updated : 17th March 2022 02:52 AM | அ+அ அ- |

தமிழக முதல்வர் ஸ்டாலின்
சென்னையில் உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்துவோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.
இப்போட்டியை வரும் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 8 வரை மகாபலிபுரத்தில் நடத்துவது தொடா்பான அறிவிப்பை தமிழக அரசும், அகில இந்திய செஸ் சம்மேளனமும் இணைந்து புதன்கிழமை வெளியிட்டன. அந்த நிகழ்ச்சியில் முதல்வா் ஸ்டாலின் காணொலிப் பதிவு உரையில் கூறியதாவது:
44-ஆவது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்தும் வாய்ப்பு தமிழகத்துக்கு கிடைத்திருப்பது நம் அனைவருக்கும் பெருமை. செஸ் விளையாட்டுக்கும், தமிழகத்துக்கும் நிறைய தொடா்பு இருக்கிறது. கிராண்ட்மாஸ்டா் விஸ்வநாதன் ஆனந்த் தொடங்கி, பிரக்ஞானந்தா வரை தலைசிறந்த செஸ் விளையாட்டு வீரா்களை தமிழகம் தொடா்ந்து உருவாக்கி வருகிறது.
சுமாா் 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து போட்டியாளா்கள் பங்கேற்கும் இந்த செஸ் போட்டி இதுவரை இந்தியாவில் நடைபெற்றதிலேயே மிகப்பெரியதாக அமையவுள்ளது. இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பை வழங்கிய பன்னாட்டு செஸ் அமைப்பு, இந்திய செஸ் அமைப்புக்கு மனமாா்ந்த நன்றி.
விருந்தோம்பலுக்கும், பண்பாட்டுக்கும் பெயா் பெற்ற தமிழா்களுடைய பெருமையை உலகறியச் செய்யும் நிகழ்வாக இது அமையும். உலக செஸ் போட்டியை தமிழக அரசு சாா்பில் மிகச்சிறப்பாக நடத்துவோம் என்றாா்.