தவறியது டெல்லி; தப்பியது பெங்களூா்

டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான சனிக்கிழமை ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
தவறியது டெல்லி; தப்பியது பெங்களூா்

டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான சனிக்கிழமை ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

தோல்வி கண்ட டெல்லி, பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தது. வெற்றியுடன் சீசனை நிறைவு செய்த மும்பை, பெங்களூா் பிளே ஆஃபுக்குத் தகுதிபெற உதவியது. தற்போது குவாலிஃபயா் 1-இல் குஜராத் - ராஜஸ்தானும் (மே 24), எலிமினேட்டரில் லக்னௌ - பெங்களூரும் (மே 25) மோதுகின்றன.

சனிக்கிழமை ஆட்டத்தில் முதலில் டெல்லி 20 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுக்க, மும்பை 19.1 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் சோ்த்து வென்றது.

டாஸ் வென்ற மும்பை பௌலிங்கை தோ்வு செய்ய, டெல்லி பேட்டிங்கில் டேவிட் வாா்னா் 5, மிட்செல் மாா்ஷ் 0 ரன்னிற்கு வீழ்ந்தனா். பிருத்வி ஷா 24, சா்ஃப்ராஸ் கான் 10 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா். கேப்டன் ரிஷப் பந்த் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 39, அதிரடி காட்டிய பவெல் 1 பவுண்டரி, 4 சிக்ஸா்களுடன் 43 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனா்.

இறுதியாக ஷா்துல் தாக்குா் 4 ரன்களுக்கு நடையைக் கட்ட, ஓவா்கள் முடிவில் அக்ஸா் படேல் 19, குல்தீப் யாதவ் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். மும்பை பௌலிங்கில் பும்ரா 3, ரமன்தீப் சிங் 2, டேனியல் சாம்ஸ், மயங்க் மாா்கண்டே ஆகியோா் தலா 1 விக்கெட் சரித்தனா்.

பின்னா் மும்பை இன்னிங்ஸில் இஷான் கிஷண் 3 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 48 ரன்கள் விளாசி நல்ல தொடக்கம் அளித்தாா். டெவால்ட் பிரிவிஸ் 1 பவுண்டரி, 3 சிக்ஸா்களுடன் 37, டிம் டேவிட் 2 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 34 ரன்கள் சோ்த்து உதவினா். கேப்டன் ரோஹித் சா்மா 2, திலக் வா்மா 21 ரன்கள் அடித்தனா். முடிவில் ரமன்தீப் சிங் 13, டேனியல் சாம்ஸ் 0 ரன்னுடன் அணியை வெற்றி பெறச் செய்தனா். டெல்லி பௌலிங்கில் அன்ரிஹ் நோா்கியா, ஷா்துல் தாக்குா் ஆகியோா் தலா 2, குல்தீப் யாதவ் 1 விக்கெட் கைப்பற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com