அடுத்த முறை பாருங்கள்: வில்லியம்சனுக்கு ஆதரவாகப் பேசும் நியூசி. வீரர்!
By DIN | Published On : 02nd November 2022 12:45 PM | Last Updated : 02nd November 2022 12:45 PM | அ+அ அ- |

அடுத்த ஆட்டத்தில் கேன் வில்லியம்சன் 20 பந்துகளில் 50 ரன்களை எடுக்கவும் வாய்ப்புள்ளது என நியூசிலாந்து பேட்டர் கிளென் பிளிப்ஸ் கூறியுள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான டி20 உலகக் கோப்பை ஆட்டத்தை 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து. அந்த அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. ஆனால் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்துத் தோல்வியடைந்தது நியூசிலாந்து.
இந்த வெற்றியினால் புள்ளிகள் பட்டியலில் 2-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது இங்கிலாந்து அணி. நியூசிலாந்து 5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா 5 புள்ளிகள், இலங்கை 4 புள்ளிகளுடன் உள்ளதால் குரூப் 1 பிரிவின் கடைசி ஆட்டங்கள் மிகுந்த பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடினமான இலக்கை விரட்டியபோது 40 பந்துகளில் 40 ரன்கள் மட்டும் எடுத்த கேன் வில்லியம்சனின் ஆட்டம் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது. இந்நிலையில் தன்னுடைய கேப்டனுக்கு ஆதரவாக நியூசி. வீரர் கிளென் பிளிப்ஸ் பேசியதாவது:
3-ம் நிலை வீரராக விளையாடும் அவர் எங்களுக்குத் தங்கம். சூழலைப் புரிந்துகொண்டு விளையாடுவார். இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டம் அவருக்குக் கடினமாக இருந்ததை அறிவேன். அவருடைய அனுபவத்தைக் கொண்டு ஆட்டத்தின் கடைசி வரை சென்று நடு ஓவர்களில் ஆதிக்கம் செலுத்துவது முக்கியமானது. கடைசியிலும் நானும் நீஷமும் டேரில் மிட்செல்லும் சான்ட்னரும் எங்களுடைய பணிகளை முடிப்போம். வில்லியம்சனை ஓர் ஆட்டத்தைக் கொண்டு மதிப்பிடுவது சரியல்ல. இங்கிலாந்து அணி அவருக்கு நன்றாகப் பந்துவீசி அவர் நன்கு ரன்கள் எடுக்கும் பகுதிகளைத் தடுத்து விட்டார்கள். அடுத்த ஆட்டத்தில் வில்லியம்சன் 20 பந்துகளில் 50 ரன்கள் எடுக்கலாம். எனவே அவருக்கு முழுமையாக ஆதரவளிக்கிறோம் என்றார்.
இந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியில் 12, 104, 62 ரன்கள் எனச் சிறப்பாக விளையாடி வருகிறார் கிளென் பிளிப்ஸ்.