விராட் கோலி பிறந்த நாள்: சாதனை வீரரின் மகத்தான ஆரம்ப காலங்கள்

உலகக் கோப்பைப் போட்டியில் முக்கியமான கட்டத்தில் தான் யார் என்பதை நிரூபித்தார்.
விராட் கோலி பிறந்த நாள்: சாதனை வீரரின் மகத்தான ஆரம்ப காலங்கள்


2006-ம் ஆண்டு தமிழ்நாடு அணிக்கு எதிராக ரஞ்சி போட்டியில் அறிமுகமானார் விராட் கோலி. 5-வதாகக் களமிறங்கி 10 ரன்கள் எடுத்தார். அந்த ஆட்டம் டிரா ஆனது. இளம் வயதிலேயே ரஞ்சி போட்டியில் விளையாடும் திறமை இருந்ததால் 2006 முதல் இந்திய யு-19 அணியில் தொடர்ந்து இடம் கிடைத்தது. 
2008, ஜனவரி 14 அன்று மலேசிய யு-19 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி நியமிக்கப்பட்டார். முதல் ஐந்து முதல் தர ஆட்டங்களில் 373 ரன்கள் எடுத்ததால் இவர் திறமை மீது நம்பிக்கை வைத்து கேப்டன் பதவி வழங்கப்பட்டது. மலேசிய உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்பட்டார். 

2006-ல் இலங்கையில் நடைபெற்ற யு-19 உலகக் கோப்பைப் போட்டியில் இறுதிச்சுற்றில் பாகிஸ்தானுடன் இந்திய அணி தோல்வியடைந்தது. இதனால் மலேசிய உலகக் கோப்பையை வெல்ல வேண்டிய நெருக்கடி இந்திய அணிக்கு ஏற்பட்டது. 

மலேசியாவில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 74 பந்துகளில் சதம் அடித்தார் கோலி. உலகக் கோப்பைப் போட்டியில் மொத்தமாக 235 ரன்கள் எடுத்தார். உலகக் கோப்பையை கோலி வென்று காண்பித்த போது ஒரே நாளில் இந்தியா முழுக்கப் புகழடைந்தார். கோலியின் ஆக்ரோஷக் குணம் தான் மற்ற வீரர்களிடமிருந்து தனித்து தெரிந்தது. ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணி கோலியைத் தேர்வு செய்தது. 

கேப்டனாக இந்திய அணிக்கு யு19 உலகக் கோப்பையைப் பெற்றுத் தந்ததாலும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற போட்டியில் இந்திய ஏ அணி சார்பாக சிறப்பாக விளையாடியதாலும் 2008 ஆகஸ்ட் 7 அன்று இலங்கைச் சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியில் கோலி இடம்பெற்றார். கூடுதலாக சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டிக்கான இந்திய அணியிலும்.

யு-19 உலகக் கோப்பை வெற்றியும் ரஞ்சி ஆட்டத்தில் தனது தந்தை தவறியபோதும் மனம் தளராமல் விளையாட வந்ததும் கோலியின் மனஉறுதியை வெளிப்படுத்தின.

2006 டிசம்பரில் தில்லி அணிக்கு எதிராக கர்நாடக அணி 446 ரன்கள் எடுத்தது. பிறகு விளையாடிய தில்லி அணி 5 விக்கெட் இழப்புக்கு 59 ரன்கள் எடுத்துத் தடுமாறியது. 2-ம் நாள் இறுதியில் கோலி 40 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்த நாள் காலையில் தந்தை இறந்துவிட்டதாக கோலிக்குத் தகவல் வருகிறது.

ஆனால் தொடர்ந்து விளையாட முடிவெடுத்தார் கோலி. முதல் சதம் எடுப்பதற்கு முன்பு 90 ரன்களில் ஆட்டமிழந்தார். தந்தை இறந்த போதும் தொடர்ந்து விளையாடிய கோலிக்கு கிரிக்கெட் வட்டாரத்தில் மதிப்பு உருவானது. அந்த நாளில் கிரிக்கெட் மீதான எனது அணுகுமுறை மாறியது. இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என முடிவெடுத்தேன். என் தந்தையின் கனவு நிறைவேற வேண்டும் என விரும்பினேன் என்றார் கோலி. 

ஆஸ்திரேலியாவில் இந்திய ஏ அணிக்காக விளையாடியபோது கோலியின் பேட்டிங் திறமையை தேர்வுக்குழுத் தலைவர் வெங்சர்கார் நேரில் பார்த்ததால் இந்திய அணிக்கு உடனடியாகத் தேர்வானார் கோலி. நியூசிலாந்து அணிக்கு எதிராகத் தொடக்க வீரராகக் களமிறங்கி சதமடித்தார் கோலி. இந்த ஆட்டம் தான் அவருக்குத் திருப்புமுனையாக அமைந்து இந்திய அணிக்குத் தேர்வாக அமைந்தது. 

2008 ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணிக்காக விளையாடிய கோலி, 13 ஆட்டங்களில் 165 ரன்கள் தான் எடுத்தார். இதனால் இந்திய அணிக்கு ஐபிஎல் வழியாகத் தேர்வாகக்கூடிய வழியை அவரே அடைத்துவிட்டதாகக் கருதினார். இதனால் அடுத்து வரும் ஆட்டங்களில் தன்னுடைய பேட்டிங் திறமையை நிரூபிப்பேன் என தன்னுடைய பயிற்சியாளர் ராஜ் குமார் சர்மாவிடம் உறுதியளித்தார். அதன் விளைவாக ஆஸ்திரேலியாவில் இந்திய ஏ அணியின் தொடக்க வீரராகக் களமிறக்கப்பட்டாலும் சதமடித்து தன் சபதத்தை நிறைவேற்றினார். ஆரம்ப காலங்களில் ராஜ் குமார் சர்மா, வாட்மோர் (இந்திய ஏ அணி பயிற்சியாளர்), மார்டின் குரோவ் (ஆர்சிபி தலைமைப் பொறுப்பு அதிகாரி) ஆகியோர் வழங்கிய பயிற்சிகளும் ஆலோசனைகளும் கோலியின் பேட்டிங் திறமைகளை மெருகேற்ற உதவின. 

இந்திய அணிக்குத் தேர்வான விராட் கோலி, உலகக் கோப்பைப் போட்டியில் முக்கியமான கட்டத்தில் தான் யார் என்பதை நிரூபித்தார். அது ஒன்றும் அவர் சதமடித்த ஆட்டமல்ல. 2011 உலகக் கோப்பை இறுதிச்சுற்றின்போது. இலங்கைக்கு எதிராக இந்திய அணி 31/2 எனத் தடுமாறிக் கொண்டிருந்தபோது களமிறங்கிய விராட் கோலி, கெளதம் கம்பீருடன் அற்புதமான கூட்டணி அமைத்து மேலும் விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக்கொண்டார். 49 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து 114 ரன்கள் வரை இந்திய அணிக்கு மேலும் விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக்கொண்டார். சிறிய பங்களிப்பு தான் என்றாலும் அன்றைய தினம் சொற்ப ரன்களில் கோலி தனது விக்கெட்டை இழந்திருந்தால் இந்திய அணி உலகக் கோப்பையை வெல்வது கடினமான செயலாக இருந்திருக்கலாம். கோலியை நம்பி எந்தப் பொறுப்பையும் ஒப்படைக்கலாம் என இந்திய கிரிக்கெட் நிர்வாகம் முடிவெடுத்த தருணம் அது.

இன்றைக்கு இந்திய அணியின் மகத்தான வீரராக உருவாகியுள்ளார் கோலி. சச்சினின் சாதனைகளை முறியடிக்கும் ஒரே தகுதி கோலிக்கு மட்டுமே உள்ளதாக கிரிக்கெட் நிபுணர்கள் நம்பிக்கை கொள்கிறார்கள். சிறந்த பேட்ஸ்மேனாக மட்டும் இல்லாமல் சிறந்த கேப்டனாகவும் சாதித்தவர். டெஸ்ட் வெற்றிகளில் தோனி, கங்குலியின் சாதனைகளைக் கடந்தவர். ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்றவர். இதற்கு மேல் வேறென்ன வேண்டும்! சச்சின் ஓய்வு பெற்ற பிறகு சச்சின் இல்லாத குறையே தெரியாத அளவுக்கு, அதனால் எந்த இழப்பும் ஏற்படாத அளவுக்கு இந்திய அணியைக் கட்டிக் காத்தார் விராட் கோலி. 

பொக்கிஷங்கள் எப்போதும் கிடைக்காது. ஆனால் இந்திய கிரிக்கெட்டுக்கு சச்சினுக்கு அடுத்தபடியாகக் கிடைத்த மற்றொரு பொக்கிஷம் விராட் கோலி. இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கொடுத்து வைத்தவர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com