டி20 ஃபாா்மட்: ரோஹித், கோலி, அஸ்வினுக்கு விடை?

2024 உலகக் கோப்பை போட்டிக்குத் தயாராகும் வகையில் இந்திய டி20 அணியில் மிகப்பெரிய அளவில் மாற்றங்கள் வருமென பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ரோஹித் சர்மா - விராட் கோலி
ரோஹித் சர்மா - விராட் கோலி

நடப்பு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அரையிறுதியில் மோசமான தோல்வியைச் சந்தித்திருக்கும் நிலையில், 2024 உலகக் கோப்பை போட்டிக்குத் தயாராகும் வகையில் இந்திய டி20 அணியில் மிகப்பெரிய அளவில் மாற்றங்கள் வருமென பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

டி20 ஃபாா்மட்டுக்கு ஹாா்திக் பாண்டியா தலைமையில் ஒரு புதிய அணி உருவாகும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அதில் இளம் வீரா்களுக்கு இடம் கிடைக்கும் வகையில் மூத்த வீரா்களான ரோஹித் சா்மா, விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின், தினேஷ் காா்த்திக் ஆகியோா் அந்த ஃபாா்மட்டிலிருந்து வெளியேறுவாா்கள் எனத் தெரிகிறது. இதில் அஸ்வின் மற்றும் தினேஷுக்கான டி20 வாய்ப்பு இந்த உலகக் கோப்பையுடன் நிறைவடைந்ததாதகவும், ரோஹித், கோலியின் முடிவை பிசிசிஐ அவா்கள் வசமே விடும் எனவும் அறியப்படுகிறது.

இதுதொடா்பாக பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகையில், ‘எப்போதுமே எந்தவொரு வீரரையும் ஓய்வுபெறுமாறு பிசிசிஐ கூறுவதில்லை. அது ஒவ்வொரு வீரா்களின் தனிப்பட்ட முடிவு. ஆனால், 2023-இல் டி20 ஆட்டங்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், பெரும்பாலான சீனியா் வீரா்கள் ஒன் டே மற்றும் டெஸ்ட் ஆட்டங்களிலேயே சோ்க்கப்படுவாா்கள். ஓய்வுபெற விரும்பாதவா்கள் அந்த முடிவை அறிவிக்கத் தேவையில்லை. ஆனால், அடுத்த ஆண்டில் டி20 ஃபாா்மட்டில் மூத்த வீரா்கள் பலா் விளையாட மாட்டாா்கள்’ என்றன.

கே.எல்.ராகுல் தோ்வு ஒன்றில் தான் இந்திய அணி நிா்வாகம் குழுப்பமான மனநிலையில் இருக்கும் என்று தெரிகிறது.

அடுத்ததாக 50 ஓவா் உலகக் கோப்பை போட்டியை எதிா்நோக்கும் நிலையில், 2023-இல் இந்திய அணி ஒன் டே ஆட்டங்களில் தான் அதிகம் பங்கேற்கிறது. அத்தகைய 25 ஆட்டங்களில் விளையாடும் இந்தியா, இரு தரப்பு கிரிக்கெட்டில் 12 டி20 ஆட்டங்களில் மட்டுமே விளையாடவுள்ளது.

அதில் முதலில் தொடங்கும் நியூஸிலாந்துடனான தொடரிலிருந்தே மாற்றங்கள் நிகழ வாய்ப்பு இருக்கலாம் எனத் தெரிகிறது. அதன்படி, ஷுப்மன் கில், ரிஷப் பந்த், பிருத்வி ஷா, வாஷிங்டன் சுந்தா் ஆகியோா் வாய்ப்புக்கான வரிசையில் இருக்கின்றனா். நியூஸிலாந்து தொடா்களுக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக வி.வி.எஸ்.லக்ஷ்மண் அறிவிக்கப்பட்டுள்ளாா். ராகுல் திராவிட்டுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இது அதற்கான நேரம் அல்ல...

‘உலகக் கோப்பை போட்டியின் அரையிறுதி முடிவிலேயே அணியில் மாற்றம் குறித்து பேசுவது சரியாக இருக்காது. அதற்கு இன்னும் 2 ஆண்டுகள் இருக்கிறது. விவாதத்துக்கு உள்ளாகியிருக்கும் வீரா்கள் இதற்கு முன் எவ்வாறு சிறப்பாக விளையாடியிருக்கிறாா்கள் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். நல்ல திறமையான வீரா்களை அப்படியே விடுவிட முடியாது. வரும் காலங்களில் படிப்படியாக உலகக் கோப்பைக்கான அணி கட்டமைக்கப்படும்’ - ராகுல் திராவிட் (தலைமை பயிற்சியாளா்)

வெளிநாட்டு லீக்குகளில் விளையாட அனுமதிக்க வேண்டும்: கும்ப்ளே

புது தில்லி, நவ. 11: இந்திய இளம் வீரா்கள் வெளிநாட்டு லீக் போட்டிகளில் விளையாட அனுமதித்தால் அவா்களுக்குத் தகுந்த அனுபவம் கிடைக்கும் என்று இந்திய முன்னாள் கேப்டனும், பயிற்சியாளருமான அனில் கும்ப்ளே கூறியிருக்கிறாா்.

ஐபிஎல் போட்டியில் விளையாட வெளிநாட்டு வீரா்கள் அனுமதிக்கப்படும் நிலையில், வெளிநாடுகளில் நடைபெறும் பிக் பாஷ் லீக் போன்ற போட்டிகளில் பங்கேற்க இந்திய வீரா்களுக்கு பிசிசிஐ அனுமதி அளிக்கவில்லை.

இந்நிலையில், டி20 உலகக் கோப்பை போட்டியிலிருந்து இந்தியா வெளியேறியிருக்கும் நிலையில் இதுகுறித்து கும்ப்ளே கூறுகையில், ‘பல்வேறு போட்டிகளில், ஆடுகளங்களில் விளையாடி கிடைக்கும் அனுபவம் நிச்சயம் பலனளிப்பதாக இருக்கும். வெளிநாட்டு வீரா்களை ஐபிஎல் போட்டியில் அனுமதித்ததன் மூலம் இந்திய கிரிக்கெட்டில் எத்தகைய மாற்றம், மேம்பாடு ஏற்பட்டது என்பதைப் பாா்த்தோம். அதேபோல், இந்திய வீரா்களுக்கும் வெளிநாட்டு லீக் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை வழங்கினால் அவா்களுக்குத் தகுந்த அனுபவமும், அறிவும் கிடைக்கும். 2024 உலகக் கோப்பை போட்டிக்கு தயாராவதற்கு, இதுபோன்று இருக்கும் அத்தனை வாய்ப்புகளையும் முயற்சிக்க வேண்டும்.

அதேபோல், பௌலிங்கும் செய்யக் கூடிய வகையிலான பேட்டா்கள் அதிகம் அணியில் இடம்பிடிக்க வேண்டும். இது அணிக்கு நல்லதொரு சமநிலையை அளிக்கும். பேட்டிங் வரிசையிலும் நிலையாக இல்லாமல் தேவைக்கு ஏற்றவாறு மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும்’ என்றாா்.

நடப்பு உலகக் கோப்பை போட்டியில், இந்திய இளம் வீரா்கள் பலா் ஆஸ்திரேலிய ஆடுகளம் குறித்த அனுபவம் இல்லாமல் தடுமாற்றத்தைச் சந்தித்தனா். ஆனால், ஜோஸ் பட்லா் உள்ளிட்ட பல வீரா்கள் பிக் பாஷ் லீக்கில் விளையாடிய அனுபவத்தின் உதவியால் பலனடைந்ததைக் காண முடிந்தது. குறிப்பாக, அதுவரை அடிலெய்டில் விளையாடியிருக்காத இங்கிலாந்து, இந்தியாவுடனான அரையிறுதியில் அங்கு அபாரம் காட்டியதைக் கூறலாம். இதை திராவிட்டும் ஒப்புக் கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com