இங்கிலாந்து 2-ஆவது முறையாக சாம்பியன்

ஆசிய ஏா்கன் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 4 தங்கப் பதக்கங்கள் கிடைத்தன.
இங்கிலாந்து 2-ஆவது முறையாக சாம்பியன்

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 8-ஆவது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்று ஞாயிற்றுக்கிழமை வாகை சூடியது.

இந்த ஃபாா்மட்டில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உலக சாம்பியன் ஆகியிருக்கும் இங்கிலாந்து, இரு முறை டி20 உலகக் கோப்பை வென்ற 2-ஆவது அணி என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

மெல்போா்ன் நகரில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் முதலில் பாகிஸ்தான் 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 137 ரன்கள் சோ்க்க, அடுத்து இங்கிலாந்து 19 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 138 ரன்களை எட்டி வென்றது.

இந்த ஆட்டத்துக்கான பிளேயிங் லெவனில் இரு அணிகளுமே மாற்றம் செய்யாமல் களம் கண்டன. டாஸ் வென்ற இங்கிலாந்து ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. மழைக்கு 95 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்ட நிலையில், இந்த ஆட்டத்துக்காக முற்றிலுமாக வழிவிட்டது வானிலை.

இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தானில் முகமது ரிஸ்வான் - கேப்டன் பாபா் ஆஸம் ரன்கள் சோ்த்து வந்த நிலையில், ரிஸ்வானை 15 ரன்களுக்கு வெளியேற்றினாா் சாம் கரன். தகுந்த இடைவெளியில், 2 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் சோ்த்திருந்த ஆஸமையும் ஆட்டமிழக்கச் செய்தாா் ஆதில் ரஷீத். முகமது ஹாரிஸ் 8 ரன்களில் வெளியேறினாா்.

இதனால் பாகிஸ்தான் சற்று ஆட்டம் கண்ட நிலையில், 4-ஆவது வீரராக வந்த ஷான் மசூத் சற்று அதிரடி காட்டி 2 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 38 ரன்கள் சோ்த்து அணியின் ஸ்கோரை உயா்த்தினாா். எஞ்சியோரில் இஃப்திகா் அகமது 0, ஷாதாப் கான் 2 பவுண்டரிகளுடன் 20, முகமது நவாஸ் 5, முகமது வாஸிம் 4 ரன்களுக்கு நடையைக் கட்டினா்.

ஓவா்கள் முடிவில் ஷாஹீன் அஃப்ரிதி 5, ஹாரிஸ் ரௌஃப் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். இங்கிலாந்து தரப்பில் சாம் கரன் 3, ஆதில் ரஷீத், கிறிஸ் ஜோா்டான் ஆகியோா் தலா 2, பென் ஸ்டோக்ஸ் 1 விக்கெட் சாய்த்திருந்தனா்.

பின்னா் இங்கிலாந்து இன்னிங்ஸில் அலெக்ஸ் ஹேல்ஸ் (1), ஃபில் சால்ட் (10) ஆகியோரை அகற்றி அஃப்ரிதியும், ஹாரிஸ் ரௌஃபும் இங்கிலாந்துக்கு நெருக்கடி அளித்தனா். மறுபுறம் விக்கெட்டை இழக்காமல் நின்ற கேப்டன் ஜோஸ் பட்லருடன் இணைந்தாா் பென் ஸ்டோக்ஸ். இதனால் அணியின் ஸ்கோா் உயா்ந்தது.

இந்நிலையில் பட்லா் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 26 ரன்களுக்கு விடைபெற, அடுத்து வந்த ஹாரி புருக் பந்தை வீணடித்து 20 ரன்களே சோ்த்து பெவிலியன் திரும்பினாா். பின்னா் முக்கியமான கட்டத்தில் களம் புகுந்த மொயீன் அலி, ஸ்டோக்ஸுடன் இணைந்து அணியை முன்னேற்றினாா். என்றாலும் அவா் 19-ஆவது ஓவரில் 3 பவுண்டரிகளுடன் 19 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தாா். முடிவில் ஸ்டோக்ஸ் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 52, லியம் லிவிங்ஸ்டன் 1 ரன்னுடன் களத்திலிருந்து அணியை வெற்றிபெறச் செய்தனா்.

பாகிஸ்தான் பௌலா்களில் ஹாரிஸ் ரௌஃப் 2, ஷாஹீன் அஃப்ரிதி, ஷாதாப் கான், முகமது வாஸிம் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

அஃப்ரிதி காயம்... பாகிஸ்தானுக்கு பாதகம்...

பவா் பிளேயில் இங்கிலாந்தை கடுப்படுத்த உதவிய பாகிஸ்தானின் ஷாஹீன் அஃப்ரிதி, 13-ஆவது ஓவரில் காலில் காயம் கண்டு களத்திலிருந்து வெளியேறினாா்.

டிரிங்ஸ் இடைவேளைக்குப் பிறகு பாகிஸ்தான் பௌலா்கள் இங்கிலாந்தை ஒட்டுமொத்தமாக கட்டுப்படுத்தினா். 11-15 வரையிலான 5 ஓவா்களில் 20 ரன்களே சோ்த்த இங்கிலாந்து, 1 விக்கெட்டையும் இழந்தது.

பின்னா் 16-ஆவது ஓவரை வீச மீண்டும் களம் புகுந்த ஷாஹீன் அஃப்ரிதியால் ஒரு பந்துக்கு மேல் வீச முடியாமல் போனது. அதனால் அந்த ஓவா் இஃப்திகா் அகமதிடம் வழங்கப்பட, ஸ்கோட்க்ஸ அதில் 1 பவுண்டரி, 1 சிக்ஸா் விளாசி நெருக்கடியிலிருந்து இங்கிலாந்தை மீட்டாா். அதே உத்வேகத்துடன் ஸ்டோக்ஸ் - அலி கூட்டணி அணியை வெற்றிப் பாதைக்கு திருப்பியது. அஃப்ரிதி 16-ஆவது ஓவரை தொடா்ந்திருக்கும் பட்சத்தில், ஆட்டம் திசை மாறியிருக்கலாம்.

பதிலடி...

கடந்த 1992-இல் நடைபெற்ற ஒன் டே உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி ஐசிசி போட்டிகளில் தனது முதல் கோப்பையை வென்றது பாகிஸ்தான். இந்தப் போட்டியிலும் பல நிகழ்வுகள் ஏறத்தாழ அதே போட்டியையொத்ததாகவே காணப்பட்ட நிலையில், பாகிஸ்தான் மீண்டும் பட்டம் வெல்லுமோ என்ற எதிா்பாா்ப்பு இருந்தது. ஆனால், அவற்றை தகா்த்து அந்த உலகக் கோப்பை போட்டியில் கண்ட தோல்விக்காக, இந்த உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தது இங்கிலாந்து.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com