விஜய் ஹசாரே: இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்ற அணிகள்!
By DIN | Published On : 30th November 2022 05:46 PM | Last Updated : 30th November 2022 05:46 PM | அ+அ அ- |

உனாட்கட் (கோப்புப் படம்)
விஜய் ஹசாரே கோப்பைப் போட்டியின் அரையிறுதியில் அஸ்ஸாம் அணியை மஹாராஷ்டிரமும் கர்நாடக அணியை செளராஷ்டிரமும் வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
ஆமதாபாத்தில் நடைபெற்ற மஹாராஷ்டிரத்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற அஸ்ஸாம் அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. காலிறுதியில் ஒரே ஓவரில் 7 சிக்ஸர்களுடன் இரட்டைச் சதமடித்து சாதனை படைத்த ருதுராஜ் கெயிக்வாட் இன்றும் அபாரமாக விளையாடினார். 126 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 18 பவுண்டரிகளுடன் 168 ரன்கள் எடுத்து 45-வது ஓவரில் ஆட்டமிழந்தார். அன்கித் பாவ்னே, 89 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 110 ரன்கள் எடுத்தார். இதனால் மஹாராஷ்டிர அணி, 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 350 ரன்கள் குவித்தது. முக்தா உசைன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். விஜய் ஹசாரே கோப்பை போட்டியில் கடைசியாக விளையாடிய கடைசி 9 ஆட்டங்களில் ஒரு இரட்டைச் சதம், 6 சதங்கள் அடித்துள்ளார் ருதுராஜ்.
அஸ்ஸாம் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 338 ரன்கள் எடுத்து 12 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. சிப்சங்கர் ராய் 78, ஸ்வரூபம் 95 ரன்கள் எடுத்தார்கள். ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஆமதாபாத்தில் நடைபெற்ற மற்றொரு அரையிறுதியில் கர்நாடகம் - செளராஷ்டிரம் அணிகள் மோதின. டாஸ் வென்ற செளராஷ்டிர அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. கர்நாடக அணி 49.1 ஓவர்களில் 171 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தொடக்க வீரர் ரவிகுமார் சமர்த் 88 ரன்கள் எடுத்தார். கேப்டன் மயங்க் அகர்வால் 1 ரன் மட்டும் எடுத்தார். மனிஷ் பாண்டே டக் அவுட் ஆனார். உனாட்கட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். செளராஷ்டிர அணி 36.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஜெய் கோகில் 61 ரன்கள் எடுத்தார்.
ஆமதாபாத்தில் டிசம்பர் 2 அன்று நடைபெறவுள்ள விஜய் ஹசாரே கோப்பைக்கான இறுதிச்சுற்றில் மஹாராஷ்டிரம் - செளராஷ்டிரம் ஆகிய அணிகள் மோதவுள்ளன.