கடைசி ஓவரில் நான்கு சிக்ஸர்கள் அடிக்க முடியும்: சஞ்சு சாம்சன்
By DIN | Published On : 07th October 2022 12:12 PM | Last Updated : 07th October 2022 12:12 PM | அ+அ அ- |

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தை 9 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது தென்னாப்பிரிக்க அணி.
மழை காரணமாக 40 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா 4 விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் எடுத்தது. குயிண்டன் டி காக் 48 ரன்களும் கிளாசென், மில்லர் ஆட்டமிழக்காமல் முறையே 74, 75 ரன்கள் எடுத்தார்கள். இந்திய அணி 40 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 240 ரன்கள் எடுத்துத் தோல்வியடைந்தது. ஷ்ரேயஸ் ஐயர் 50 ரன்களும் சஞ்சு சாம்சன் ஆட்டமிழக்காமல் 86 ரன்களும் எடுத்தார்கள். கடைசி ஓவரில் இந்திய அணி வெற்றி பெற 31 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் சஞ்சு சாம்சன் ஒரு சிக்ஸரும் மூன்று பவுண்டரிகளும் அடித்தார்.
லக்னெளவில் நடைபெற்ற முதல் ஒருநாள் ஆட்டத்தில் தோல்வியடைந்த பிறகு சஞ்சு சாம்சன் கூறியதாவது:
தெ.ஆ. பந்துவீச்சாளர்கள் நன்குப் பந்துவீசினார்கள். ஷம்சி நிறைய ரன்கள் கொடுத்தார். எனவே அவருடைய ஓவரில் ரன்கள் குவிக்க இலக்கு வைத்திருந்தோம். கடைசியில் அவருக்கு ஒரு ஓவர் மீதமிருந்தது. கடைசி ஓவரில் நமக்கு 24 ரன்கள் தேவைப்பட்டிருந்தாலும் நான்கு சிக்ஸர்களை அடிக்க முடியும் என்கிற நம்பிக்கை எனக்கு இருந்தது. அதனால் தான் கடைசி வரை ஆட்டத்தைக் கொண்டு சென்றோம். கடைசியில் இரண்டு ஷாட்களை அடிக்க முடியாமல் தோற்றுவிட்டோம். ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர். அதை நாங்கள் அடித்திருந்தால் ஜெயித்திருப்போம். என்றார்.