ரன்கள் அடித்தும் இந்திய அணியில் வாய்ப்பில்லை: பிருத்வி ஷா வேதனை

கடுமையாக உழைத்து ரன்கள் அடித்தும் இந்திய அணியில் தனக்கு வாய்ப்பு கிடைக்காததால் வேதனையில் உள்ளதாக இளம் வீரர் பிருத்வி ஷா கூறியுள்ளார்.
ரன்கள் அடித்தும் இந்திய அணியில் வாய்ப்பில்லை: பிருத்வி ஷா வேதனை

கடுமையாக உழைத்து ரன்கள் அடித்தும் இந்திய அணியில் தனக்கு வாய்ப்பு கிடைக்காததால் வேதனையில் உள்ளதாக இளம் வீரர் பிருத்வி ஷா கூறியுள்ளார்.

22 வயது பிருத்வி ஷா, இந்திய அணிக்காக 5 டெஸ்டுகள், 6 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளார். கடந்த வருடம் ஜூலையில் இலங்கைக்குச் சென்ற ஒருநாள் அணியில் பிருத்வி ஷாவும் இடம்பெற்றிருந்தார். அதன்பிறகு இந்திய அணியில் அவருக்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. தற்போது, சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியில் மும்பை அணியின் துணை கேப்டனாக பிருத்வி ஷா உள்ளார்.

இந்நிலையில் ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் பிருத்வி ஷா கூறியதாவது:

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு என்னைத் தேர்வு செய்யாதது ஏமாற்றமாக உள்ளது. நான் நிறைய ரன்கள் எடுக்கிறேன். கடுமையாக உழைக்கிறேன். இருந்தும் எனக்கு (இந்திய அணியில்) வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பரவாயில்லை. இந்திய அணியில் விளையாட நான் தயாராக உள்ளதாகத் தேர்வுக்குழு நினைக்கும்போது என்னை விளையாட வைப்பார்கள். இந்தியா ஏ அல்லது எந்த அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தாலும் நல்ல உடற்தகுதியுடன் என் திறமையை நிரூபிப்பேன். 

இந்நிலையில் என்னை நான் எப்படி ஊக்கப்படுத்திக் கொள்கிறேன்? தனியாக இருக்க முயல்கிறேன். யாரிடமும் அதிகமாகப் பேசுவதில்லை. யாரையும் சந்திக்க விரும்புவதில்லை. கண்ணாடி முன் நின்று எனக்கு நானே பேசிக்கொள்கிறேன். யாரும் இதைச் செய் எனச் சொல்லவில்லை. நான் மனத்தளவில் வலுவானவன். ஒன்றுமில்லாதபோதும் நான் அப்படித்தான் இருந்தேன். இப்போது இன்னும் கூடுதலாக உள்ளேன். விரைவில் இந்திய அணியில் நான் விளையாடுவதை உறுதி செய்வேன். இப்போது நன்றாக விளையாடி வருகிறேன். 

பேட்டிங்கில் நிறைய மாற்றங்கள் கொண்டு வரவில்லை. ஆனால் உடற்தகுதிக்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளேன். ஐபிஎல் போட்டிக்குப் பிறகு எடைக்குறைப்பில் ஈடுபட்டு ஏழு, எட்டு கிலோ குறைத்துள்ளேன். உடற்பயிற்சி நிலையத்தில் நீண்ட நேரம் செலவிட்டேன். நிறைய ஓடினேன். இனிப்புகளையோ குளிர்பானங்களையோ உட்கொள்ளவில்லை. என்னுடைய உணவுப்பட்டியலில் சைனீஸ் உணவு சுத்தமாக இல்லை என்றார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com