ஸ்காட்லாந்திடம் சரணடைந்த மேற்கிந்தியத் தீவுகள்

டி20 உலகக் கோப்பை போட்டியின் 3-ஆவது ஆட்டத்தில், இரு முறை சாம்பியனான மேற்கிந்தியத் தீவுகளை 42 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்து வீழ்த்தியது. 

டி20 உலகக் கோப்பை போட்டியின் 3-ஆவது ஆட்டத்தில், இரு முறை சாம்பியனான மேற்கிந்தியத் தீவுகளை 42 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்து வீழ்த்தியது. 

முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை ஆட்டத்தில் ஆசிய சாம்பியன் இலங்கைக்கு நமீபியா அதிர்ச்சி அளித்த நிலையில், தற்போது மேற்கிந்தியத் தீவுகளை ஸ்காட்லாந்து மிரட்டியிருப்பது, இப்போட்டியில் சிறிய அணிகளின் ஆதிக்கத்தைக் காட்டுகிறது. 

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் ஸ்காட்லாந்து 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 160 ரன்கள் சேர்த்தது.  பின்னர் தனது அசத்தலான பெüலிங்கால் மேற்கிந்தியத் தீவுகளை 18.3 ஓவர்களில் 118 ரன்களுக்கே ஆட்டமிழக்கச் செய்து அந்த அணிக்கு அதிர்ச்சி அளித்தது. 

முதலில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. ஸ்காட்லாந்து பேட்டிங்கில் தொடக்க வீரர் ஜார்ஜ் மன்சே 9 பவுண்டரிகளுடன் 66 ரன்கள் சேர்த்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசியில் கிறிஸ் கிரீவ்ஸ் 16 ரன்களுடன் அவருக்குத் துணை நின்றார். இடையே, மைக்கேல் ஜோன்ஸ் 20, மேத்யூ கிராஸ் 3, கேப்டன் ரிச்சி பெரிங்டன் 16, கேலம் மெக் லியாட் 23, மைக்கேல் லீஸ்க் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். 

மேற்கிந்தியத் தீவுகள் அல்ஜாரி ஜோசஃப், ஜேசன் ஹோல்டர் ஆகியோர் தலா 2, ஓடின் ஸ்மித் 1 விக்கெட் கைப்பற்றினர். 

பின்னர் மேற்கிந்தியத் தீவுகள் இன்னிங்ஸில் அதிகபட்சமாக ஜேசன் ஹோல்டர் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 38 ரன்கள் சேர்த்தார். கைல் மேயர்ஸ் 20, எவின் லீவிஸ் 14, பிராண்டன் கிங் 17 ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். இதர பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்னில் பெவிலியன் திரும்பினர். ஸ்காட்லாந்து பெüலிங்கில் மார்க் வாட் 3, பிராட் வீல், மைக்கேல் லீஸ்க் ஆகியோர் தலா 2, ஜோஷ் டேவி, சஃபியான் ஷரிஃப் ஆகியோர் தலா 1 விக்கெட் சாய்த்தனர். 

ஜிம்பாப்வே வெற்றி: போட்டியின் 4-ஆவது ஆட்டத்தில் ஜிம்பாப்வே 31 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்தை வென்றது. முதலில் ஜிம்பாப்வே 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 174 ரன்கள் எடுக்க, அடுத்து அயர்லாந்து 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்களையே எட்டியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com