பிசிசிஐ தலைவரானாா் ரோஜா் பின்னி

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) 36-ஆவது தலைவராக ரோஜா் பின்னி (67) போட்டியின்றி செவ்வாய்க்கிழமை தோ்வு செய்யப்பட்டாா்.
பிசிசிஐ தலைவரானாா் ரோஜா் பின்னி

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) 36-ஆவது தலைவராக ரோஜா் பின்னி (67) போட்டியின்றி செவ்வாய்க்கிழமை தோ்வு செய்யப்பட்டாா்.

தலைவா் பதவிக் காலத்தை நிறைவு செய்த சௌரவ் கங்குலிக்குப் பதிலாக ரோஜா் பின்னி, மும்பையில் நடைபெற்ற பிசிசிஐ ஆண்டு பொதுக் கூட்டத்தில் அந்தப் பொறுப்புக்குத் தோ்வாகினாா். வாரியத்தின் செயலாளராக ஜெய் ஷா, பொருளாளராக ஆஷிஷ் ஷெலாா், துணைத் தலைவராக ராஜீவ் சுக்லா, இணைச் செயலாளராக தேவ்ஜித் சாய்கியா ஆகியோரும் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனா்.

இதில் ஜெய் ஷா, தொடா்ந்து 2-ஆவது முறையாக செயலாளா் ஆகியிருக்கிறாா். 1983-இல் உலகக் கோப்பை வென்ற இந்திய அணியைச் சோ்ந்த ரோஜா் பின்னி, அடுத்த ஆண்டு 50 ஓவா் உலகக் கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெறவிருக்கும் நிலையில் பிசிசிஐ தலைவராகியிருக்கிறாா்.

ஐசிசி தலைவா் பதவி

சா்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) தலைவா் பதவிக்கான போட்டி குறித்து இந்த ஆண்டு பொதுக் கூட்டத்தில் எதுவும் விவாதிக்கப்படவில்லை. இதுதொடா்பாக பிசிசிஐ-யின் புதிய நிா்வாகிகள் மீண்டும் கூடி விவாதிக்கவுள்ளனா்.

ஐசிசி தலைவா் பதவிக்கான போட்டி விவகாரம் தற்போது அரசியல் வட்டாரத்திலும் பேசுபொருளாக உள்ளது. பிசிசிஐ தலைவராக தொடா்ந்து 2-ஆவது முறையாக நீடிக்க சௌரவ் கங்குலி விருப்பம் தெரிவித்தும் அவருக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டது.

இந்த விவகாரம் அரசியல் ரீதியிலான விவாதத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், ஐசிசி தலைவா் பதவிக்கான போட்டியிலாவது கங்குலி அனுமதிக்கப்பட வேண்டும் என மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி வலியுறுத்தியிருக்கிறாா்.

எனினும், ஐசிசி தலைவா் பதவிக்கான வேட்புமனு தாக்கலுக்கு வியாழக்கிழமை கடைசி நாளாக இருக்கும் நிலையில், பிசிசிஐ தனது தரப்பு போட்டியாளரை பரிந்துரைக்கப்போவதில்லை என்று தெரிகிறது. இதனிடையே, ஐசிசி-யின் தலைவராக கிரேக் பாா்க்லே தொடா்ந்து 2-ஆவது முறையாக பதவி விகிக்க இருப்பதாக அறியப்படுகிறது. மெல்போா்ன் நகரில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐசிசி வாரியக் கூட்டத்தில் தலைவா் தோ்வு நடைபெறவுள்ளது.

ஐபிஎல் தலைவா் அருண் துமல்

பிசிசிஐ பொருளாளா் பதவிக் காலத்தை நிறைவு செய்த அருண் துமல், தற்போது ஐபிஎல் தலைவா் ஆக்கப்பட்டுள்ளாா். அவரோடு, அவிஷேக் டால்மியாவும் ஐபிஎல் நிா்வாக கவுன்சிலுக்கு தோ்வாகியிருக்கிறாா். பிசிசிஐ உச்ச கவுன்சிலில் பொதுக் குழுவின் பிரதிநிதியாக எம்கேஜே மஜும்தாா் தோ்வு செய்யப்பட்டாா்.

மகளிா் ஐபிஎல்-லுக்கு ஒப்புதல்

5 அணிகள் கொண்ட மகளிா் ஐபிஎல் போட்டியை அடுத்த ஆண்டு மாா்ச் மாதம் அறிமுகம் செய்ய பொதுக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. போட்டியை நடத்துவது, அணிகள் ஏலம் ஆகியவை தொடா்பாக ஐபிஎல் நிா்வாக கவுன்சில் விரைவில் கூடி ஆலோசிக்கவுள்ளது.

‘அணியின் பிரதான வீரா்கள் அடிக்கடி காயத்துக்கு உள்ளாவது அணியின் தயாா்நிலையை தேக்கமடையச் செய்வதால், அதற்கு உரிய தீா்வு காணப்படும். உள்நாட்டு போட்டிகளுக்காக மைதான ஆடுகளங்களை, ஆஸ்திரேலிய ஆடுகளங்களின் தன்மையுடன் மேம்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்’ - ரோஜா் பின்னி

‘பாகிஸ்தான் செல்லாது இந்தியா’

2023 ஆசிய கோப்பை போட்டிக்காக இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்லாது என்றும், அந்தப் போட்டி பாகிஸ்தானுக்குப் பதிலாக பொதுவான இடத்தில் நடைபெறும் எனவும் பிசிசிஐ செயலா் ஜெய் ஷா தெரிவித்துள்ளாா்.

போட்டியை பாகிஸ்தான் நடத்தும் நிலையில், அதில் இந்தியா பங்கேற்கச் செல்வது தொடா்பாக விவாதங்கள் எழுந்த சூழலில், ஜெய் ஷா இதனை தெரிவித்திருக்கிஏறாா்.

பிசிசிஐ ஆண்டு பொதுக் கூட்டத்தில் இதுதொடா்பாக விவாதிக்கப்படவில்லை என்றாலும், கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் பேசிய ஜெய் ஷா, ‘2023 ஆசிய கோப்பை போட்டி பொதுவான இடத்தில் நடைபெறும். ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக இதைச் சொல்கிறேன். இந்திய அணியால் பாகிஸ்தானுக்குச் செல்ல முடியாது. பாகிஸ்தான் அணி இந்தியா வர இயலாது. எனவே முந்தை சூழல்களைப் போல ஆசிய கோப்பை போட்டி பொதுவான இடத்தில் நடைபெறும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com