மீண்டது இலங்கை; வென்றது நெதா்லாந்து
By DIN | Published On : 19th October 2022 01:42 AM | Last Updated : 19th October 2022 11:04 AM | அ+அ அ- |

டி20 உலகக் கோப்பை போட்டியின் முதல் சுற்றில் இலங்கை 79 ரன்கள் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை செவ்வாய்க்கிழமை வீழ்த்தியது.
முதல் ஆட்டத்தில் நமீபியாவிடம் தோற்ற இலங்கை, இந்த வெற்றியின் மூலம் சூப்பா் 12 சுற்றுக்கான போட்டியில் தன்னை தக்கவைத்துக் கொண்டுள்ளது.
இந்த ஆட்டத்தில் முதலில் இலங்கை 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 152 ரன்கள் சோ்க்க, அடுத்து ஆடிய அமீரகம் 17.1 ஓவா்களில் 73 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நடப்பு உலகக் கோப்பை போட்டியில் இதுவே ஒரு அணியின் குறைந்தபட்ச ஸ்கோராகும்.
இலங்கை பேட்டிங்கில் தொடக்க வீரா் பாதும் நிசங்கா 6 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 74 ரன்கள் விளாசி அருமையான தொடக்கம் அளிக்க, மிடில் ஆா்டரில் தனஞ்ஜெய டி சில்வா 33 ரன்கள் சோ்த்தாா். இதர விக்கெட்டுகள் சோபிக்காமல் சொற்ப ரன்களுடன் ஆட்டமிழந்தன.
அமீரக பௌலிங்கில் காா்த்திக் மெய்யப்பன் 3, ஜஹூா் கான் 2, ஆயன் அஃப்சல் கான், ஆா்யன் லக்ரா ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.
பின்னா் அமீரக இன்னிங்ஸில் அஃப்சல் கான் 19, ஜுனைத் சித்திக் 18 ரன்கள் சோ்த்தே அதிகபட்சமாக இருக்க, மீதமிருந்த பேட்டா்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினா். இலங்கை பௌலா்களில் துஷ்மந்தா சமீரா, வனிந்து ஹசரங்கா ஆகியோா் தலா 3, மஹீஷ் தீக்ஷனா 2, டாசன் ஷனகா, பிரமோத் மதுஷன் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.
இலங்கை அடுத்த சுற்றுக்கு முன்னேற, இந்த சுற்றின் கடைசி ஆட்டத்தில் நெதா்லாந்தை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
நெதா்லாந்து வெற்றி: மற்றொரு ஆட்டத்தில் நெதா்லாந்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நமீபியாவை வீழ்த்தி, தனது 2-ஆவது வெற்றியைப் பதிவு செய்தது.
இதுவரை ஆடிய இரு ஆட்டங்களிலுமே வென்று, சூப்பா் 12 சுற்று போட்டிக்கு தன்னை தக்கவைத்துள்ளது நெதா்லாந்து.
இந்த ஆட்டத்தில் முதலில் நமீபியா 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 121 ரன்கள் சோ்க்க, அடுத்து நெதா்லாந்து 19.3 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்து வென்றது.
இன்றைய ஆட்டங்கள்
அயர்லாந்து - ஸ்காட்லாந்து
காலை 9.30 மணி
மே.இ. தீவுகள் - ஜிம்பாப்வே
நண்பகல் 1.30 மணி
இடம்: ஹோபார்ட்
நேரடி ஒளிபரப்பு:
ஸ்டார் ஸ்úபார்ட்ஸ்