அச்சுறுத்திய நெதர்லாந்து: சூப்பர் 12 சுற்றுக்கு இலங்கை தகுதி!

நமீபியாவை ஐக்கிய அரபு அமீரகம் வென்றால் நெதர்லாந்து தகுதி பெறும்.
ஹசரங்கா (கோப்புப் படம்)
ஹசரங்கா (கோப்புப் படம்)

நெதர்லாந்துக்கு எதிரான உலகக் கோப்பை முதல் சுற்று ஆட்டத்தில் இலங்கை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சூப்பர் 12 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.

இந்த ஆட்டம் தொடங்கும் முன்பு இருந்த நிலை இதுதான். குரூப் ஏ பிரிவில் நெதர்லாந்து 2 வெற்றிகளையும் நமீபியா, இலங்கை தலா 1 வெற்றியையும் பெற்றிருந்தன. ஐக்கிய அரபு அமீரகம் விளையாடிய இரு ஆட்டங்களிலும் தோல்வியடைந்தது. குறைவான ரன்ரேட்டைக் கொண்டிருப்பதால் இந்த ஆட்டத்திலும் வெற்றி பெற வேண்டிய நிலைமை நெதர்லாந்துக்கு ஏற்பட்டது. இலங்கை அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறிவிடும். இன்றைய ஆட்டத்தில் நெதர்லாந்து தோற்றுவிட்டால் நமீபியாவை ஐக்கிய அரபு அமீரகம் வீழ்த்த வேண்டும். இல்லாவிட்டால் சூப்பர் 12 சுற்றுக்கு நமீபியா தகுதி பெற்று விடும்.

டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. சமீரா, பிரமோத் மதுஷனுக்குப் பதிலாக லஹிரு குமாரா, பினுரா இலங்கை அணியில் இடம்பெற்றார்கள்.

இலங்கை அணி பவர்பிளேயின் முடிவில் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 36 ரன்கள் எடுத்தது. 7-வது ஓவரில் நெதர்லாந்து அணிக்கு இரு விக்கெட்டுகள் கிடைத்தன. பால் வான் மீகரன் முதலில் இலங்கை பேட்டர் பதும் நிசாங்காவை 14 ரன்களில் போல்ட் செய்தார். அடுத்து வந்த தனஞ்ஜெயா டி சில்வா ரன் எதுவும் எடுக்காமல் எல்பிடபிள்யூ ஆகி ஆட்டமிழந்தார். நடுவரின் தீர்ப்பை அவர் டிஆர்எஸ் முறையீடு செய்யவில்லை. ஆனால் அந்தப் பந்து லெக் ஸ்டம்பைத் தவறவிட்டது பிறகு தான் தெரிந்தது. இதனால் டிஆர்எஸ் முறையீடு செய்திருந்தால் தனஞ்ஜெயா டி சில்வா ஆட்டமிழக்காமல் இருந்திருப்பார். இலங்கை அணி 10 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் எடுத்தது. இதன்பிறகு ஆட்டம் வேறு பாதையில் சென்றது. இலங்கை அணியை வழிநடத்தில் கெளரவமான ஸ்கோரைப் பெற்றுத் தந்தார் குசால் மெண்டிஸ். 

குசால் மெண்டிஸும் சரித் அசலங்காவும் 50 ரன்கள் கூட்டணி அமைத்தார்கள். அசலங்கா 31 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 34 பந்துகளில் குசால் மெண்டிஸ் அரை சதமெடுத்தார். 2 பவுண்டரிகள் அடித்த பனுகா 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதன்பிறகு கடைசிக்கட்டத்தில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள் இலங்கை பேட்டர்கள். 19-வது ஓவரில் 2 சிக்ஸர்கள் உள்பட 15 ரன்கள் கிடைத்தது. அதே ஓவரில் தசுன் ஷனகா 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இலங்கை அணியின் இன்னிங்ஸை சீராகக் கொண்டு சென்ற குசால் மெண்டிஸ் 44 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 79 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இலங்கை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. கடைசி 10 ஓவர்களில் 102 ரன்கள் எடுத்து நெதர்லாந்துக்கு நெருக்கடி அளித்தது.

நெதர்லாந்து அணி ஆரம்பம் முதல் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால் ரன்ரேட்டை உயர்த்த முடியாமல் புதிய பேட்டர்கள் திணறினார்கள். ஆனால் தொடக்க வீரர் மேக்ஸ் ஓ டெளட் அபாரமாக விளையாடி கடைசி வரை இலங்கை அணிக்கு அச்சுறுத்தலாக விளங்கினார். கடைசிப் பந்து வரை விளையாடியும் அவரால் 53 பந்துகளையே எதிர்கொள்ள முடிந்தது. இன்னும் 10 பந்துகளைக் கூடுதலாக எதிர்கொண்டிருந்தாலே ஆட்டத்தின் முடிவு மாறியிருக்கலாம். நெதர்லாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்து 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. மேக்ஸ் ஓ டெளட் 53 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 71 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். சுழற்பந்து வீச்சாளர்கள் ஹசரங்கா 3 விக்கெட்டுகளையும் மஹீஷ் தீக்‌ஷனா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். 

இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி சூப்பர் 12 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. நமீபியாவை ஐக்கிய அரபு அமீரகம் வென்றால் நெதர்லாந்து தகுதி பெறும். அதற்குப் பதிலாக நமீபியா வெற்றி பெற்றால் அந்த அணி அதிக நெட் ரன்ரேட் அடிப்படையில் தகுதி பெறும். தற்போது இலங்கை அணி வெற்றி பெற்றதால் ஐக்கிய அரபு அமீரகம் போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com